20 வருடங்களின் பின் மகளிர் அஞ்சலோட்டத்தில் சாதனை படைத்த இலங்கை அணி

2

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி நாளான நேற்று (24) இரவு நடைபெற்ற பெண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி, 3 நிமிடங்கள் 35.04 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய இலங்கை சாதனையுடன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ………

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் மிக நீண்ட இடைவெளியின் பிறகு பெண்களுக்கான 4X400 மிற்றர் அஞ்சலோட்டத்தில் களமிறங்கிய நிமாலி லியனாராச்சி தலைமையிலான இலங்கை அஞ்சலோட்ட அணியில் நதீஷா ராமநாயக்க, உப்பமாலி ரத்னகுமாரி, 20 வயதுடைய இளம் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆசியாவின் முன்னணி நாடுகளான பஹ்ரைன், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அணிகள் பங்குபற்றிய இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 3ஆவது சுட்டில் ஓடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. இதன்படி, இலங்கையின் அனுபவமிக்க வீராங்கனையான நதீஷா ராமநாயக்க முதல் 400 மீற்றரை ஓடிமுடித்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.  

அதனைத்தொடர்ந்து முதலாவது கோல் பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட இளம் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க, இம்முறை ஆசிய மெய்வல்லுனரில் பெண்களுக்கான 400 மீற்றரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் பூவம்மா ராஜுவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்ததுடன், 400 மீற்றரில் தனது அதிசிறந்த காலப் பெறுதியுடன் 2ஆவது வீராங்கனையாக தனது போட்டித் தூரத்தை அவர் நிறைவு செய்தார்.

எனினும், 2ஆவது மற்றும் 3ஆவது கோல் பரிமாற்றங்களில் பஹ்ரைன் மற்றும் இந்திய வீராங்கனைகள் இலங்கைக்கு சவால் கொடுத்திருந்தனர். எனவே, அந்த சவாலை இறுதி வீராங்கனையாக ஓடிவந்த நிமாலி லியனாராச்சிக்கு முறியடிக்க முடியாமல் போனது.

Photo Album : 23rd Asian Athletics Championship Day 4

இதன்படி, 03 நிமிடங்களும் 35.04 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இலங்கை அணி 4ஆவது இடத்துடன் ஆறுதல் அடைந்தது. எனினும், பெண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு தேசிய சாதனையையும் இலங்கை அணி படைத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

முன்னதாக 1999ஆம் ஆண்டு நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தமயந்தி தர்ஷா, நிம்மி டி சொய்ஸா, பி. சந்த்ரலா மற்றும் சுவர்ணமாலி எதிரிசிங்க உள்ளிட்ட இலங்கை 4X400 அஞ்சலோட்ட அணியினால் (3 நிமிடங்களும் 35.42 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு நிமாலி லியனாராச்சி தலைமையிலான இலங்கை அணி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப் போட்டியில் சல்வா ஈத் நஸார் தலைமையிலான பஹ்ரைன் அணி (3 நிமிடங்களும் 32.10 செக்.) தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, இந்திய அணி (3 நிமிடங்களும் 32.21 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் அணி (3 நிமிடங்களும் 34.88 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

நீளம் பாய்தலில் ஏமாற்றம்

ஆண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்களான தனுஷ்க பிரியரத்ன (7.65 மீற்றர்) மற்றும் ஜானக்க பிரசாத் விமலசிறி (7.47 மீற்றர்) ஆகியோர் முறையே 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.  

ஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலானி

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய……..

முன்னதாக ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு இலங்கையில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பிரசாத் விமலசிறி 8.14 மீற்றர் தூரத்தையும், தனுஷ்க பிரியரத்ன 7.99 மீற்றர் தூரத்தையும் பாய்ந்து தமது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்திருந்தனர். எனினும், கட்டாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனரில் அந்த அடைவுமட்டத்தினை கூட அவர்களால் எட்டமுடியாமல் போனது.

இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஜப்பானின் யுக்கி ஹசிஒகா (8.22 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, சீனாவைச் சேர்ந்த யகுவாங் (8.13 மீற்றர்) மற்றும் சங்சூ (7.97 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

ஹேமன்த, கயன்திகாவுக்கு தோல்வி

ஆண்களுக்கான 1500 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீரரான ஹேமன்த குமார, போட்டியை 3 நிமிடங்கள் 49.28 செக்கன்களில் நிறைவு செய்து 11ஆவது இடத்தையும், அதே போட்டியில் பெண்கள் பிரிவில் களமிறங்கிய கயன்திகா அபேரத்ன, 4 நிமிடங்கள் 24.42 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 11ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

இலங்கைக்கு 17ஆவது இடம்

43 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 வீரர்களின் பங்குபற்றலுடன் கடந்த நான்கு நாட்களாக கட்டாரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 15 வீரர்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மாத்திரம் வெற்றிகொண்டு பதக்கப்பட்டியலில் ஜோர்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் 17ஆவது இடத்தை சமமாகப் பெற்றுக் கொண்டது.

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய…………….

இதேநேரம், 11 தங்கம் 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 22 பதக்கங்களை வென்ற பஹ்ரைன் அணி முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாக, 9 தங்கம், 13 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற சீனா இரண்டாவது இடத்தையும், 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.  

இதேநேரம், கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய இந்தியா அணி, 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 17 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தது.  

இதேநேரம், 24ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சீனாவின் ஹன்சூவில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<