ஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

139
Vidusha

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை விதூஷா லக்ஷானி வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

கட்டாரில் உள்ள குளிரூட்டபட்ட கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் மூன்றாவது நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

ஆசிய மெய்வல்லுனர் முதல் நாளில் இலங்கை வீரர்கள் அபாரம்

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (21)….

இதில் இலங்கை சார்பாக பெண்களுக்கான முப்பாய்ச்சலில் நீர்கொழும்பைச் சேர்ந்த விதூஷா லக்ஷானி பங்குபற்றியிருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட விதூஷா, கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றவில்லை.

இந்த நிலையில், கொழும்பில் கடந்த மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட அவர், 13.26 மீற்றர் தூரம் பாய்ந்து ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றார்.

12 வீராங்கனைகள் பங்குபற்றிய பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (23) இரவு நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக களமிறங்கிய விதூஷா, முறையே 13.40, 13.46 மற்றும் 13.53 மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்து, தனது அதிசிறந்த தூரப் பெறுமதியுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இரண்டு வருடங்களுக்கு முன் தவறவிட்ட பதக்கத்தை இம்முறை போட்டிகளில் கைப்பற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விதூஷா, வெண்கலப் பதக்கத்தை வென்று அந்த கனவை வெற்றி கொண்டார். அத்துடன், இந்தப் போட்டி தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கமும் இதுவாகும்.

Photo Album – 23rd Asian Athletics Championship Day 3

இந்த நிலையில், போட்டியின் பிறகு விதூஷா லக்ஷானி எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில்,

”உண்மையில் இந்த வெற்றியானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட எனது சிறந்து தூரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்தப் போட்டியில் களமிறங்கினேன்.

அதேபோல, பதக்கமொன்றை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கவில்லை. அதிலும், குறிப்பாக என்னுடன் வந்த சக வீரர்கள் உட்பட பயிற்சியாளர்களுக்கும் என்னால் பதக்கமொன்றை வெற்றிகொள்ள முடியுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. எனினும், எதிர்பாரத வகையில் இந்தப் போட்டியில் எனது அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்து பதக்கமொன்றை வெற்றிகொள்ள கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக இங்கு மிகவும் ஷ்ணமான காலநிலை காணப்பட்டாலும், இன்று நுவவெரலியாவுக்குச் சென்றது போல மிகவும் குளிராக இருந்தது. அதிலும் குறிப்பாக, முன் பயிற்சிகளின் போதும் எனக்கு வியர்க்கவில்லை. ஆனால் எனது தனிப்பட்ட தூரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நான் களமிறங்கினேன். அதேபோல, எனக்கு இந்த ஓடுபாதையில் மிகவும் வேகமாகவும் ஓட முடிந்தது. இறுதியில் நான் நாட்டுக்காக பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்டேன்” என்றார்.

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

இதனிடையே, நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட விதூஷா லக்ஷானி, கடந்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பலியான தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த செய்தியைக் கேட்டவுடன் நான் மிகவும் அழுதேன். எனது சொந்த இடம் நீர்கொழும்பு. இந்த தீவிரவாத தாக்குதலினால் எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் உயிரிழந்துவிட்டனர். மிகவும் கவலையாக உள்ளது. எனவே, நாட்டில் உள்ள பலர் துக்கத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாட்டுக்காக பதக்கமொன்றை வென்று அவர்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியையாவது கொடுக்க முடிந்தமை எனக்கு ஆறுதலைக் கொடுத்தது. இனிமேலும் இதேபோன்ற கொடூரமான தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனவும், நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையோடும், புரிந்துணர்வோடும் இருப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், இப்போட்டியில் தாய்லாந்தின் பர்னியா சுஅய்மரொயிங், 13.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ரூய் சேங் 13.65 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<