மனிபால் டைகர்ஸ் அணியில் களுவிதரான, முரளிதரன்

311

ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (LLC) T20 தொடரின் 2 ஆவது அத்தியாயம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இம்மாதம் 16 ஆம் திகதி இந்தியா மகாராஜாஸ் – உலக ஜயண்ட்ஸ் மோதும் கண்காட்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை போட்டித் தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ், இந்தியா கேபிடல்ஸ், பில்வாரா கிங்ஸ் மற்றும் மனிபால் டைகர்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின்றன.

இதன்படி, கொல்கத்தா (செப். 16-18), லக்னோ (செப். 21, 22), டெல்லி (செப். 24-26), கட்டாக் (செப். 27-30) மற்றும் ஜோத்பூரில் (ஒக். 1-3) ஆகிய நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனிடையே, பிளே-ஆப் சுற்று போட்டிகள் ஒக்டோபர் 5 ஆம், 7 ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஒக்டோபர் 8 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தலைமையிலான மனிபால் டைகர்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ரொமேஷ் களுவிதாரன மற்றும் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான டெரன் சமி, நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கொரி அண்டர்சன், தென்னாபிரிக்காவின் லான்ஸ் க்ளுஸ்னர் மற்றும் இம்ரான் தாஹிர், அவுஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ ஆகிய நட்சத்திர வீரர்களும் மனிபால் டைகர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் பயிற்சியாளரான ஜோன் புகானன், இம்முறை லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மனிபால் டைகர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<