உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி

621

எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுப்பது சாதாரண விடயம். ஒருசில விளையாட்டுப் போட்டிகளின் இடைநடுவில் வீரர்கள் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாவது மிகப் பெரிய, பாரிய பின்னடைவை கொடுப்பதை நாங்கள் பார்த்துள்ளோம்.  

இதில், மைதானத்தில் வீரர்கள் முகங்கொடுக்கின்ற அவசர அனர்த்தங்கள், தேவையில்லாமல் அதிக பலத்தைப் பயன்படுத்தி விளையாடும் போது ஏற்படுகின்ற தசை பிளர்வு, எலும்பு முறிவு உள்ளிட்ட உபாதைகள் வீரர்கள் மத்தியில் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன

இலங்கை கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் செஹான் ஜயசூரிய!

இதில் குறிப்பாக, எந்தவொரு போட்டித் தொடரோ அல்லது போட்டியொன்று ஆரம்பமாவதற்கு முன்னர் தான் வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள். அது அந்தந்த விளையாட்டைப் பொறுத்து ஒரு வாரம் மற்றும் ஒரு மாதமாகக் கூட இருக்கலாம்.   

மறுபுறத்தில் உடற்கூற்று நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களை நாடி வீரர்கள் பயிற்சிகள் பெறுவதும் மிகவும் காலதாமதமாகவே இடம்பெறுவதை அதிகளவில் பார்க்க முடிகின்றது.

இந்தக் காலப்பகுதியில் முழு உடம்பையும் போட்டிக்கு தயார்படுத்தினாலும், போட்டிக்கு முன் உடம்மை ஷ்ணப்படுத்துகின்ற பயிற்சிகளை பொருத்தமான நுட்பங்களுடன் செய்வது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக, கடைசித் தருவாயில் மேற்கொள்கின்ற பயிற்சிளை சரியாகச் செய்யாவிடின் வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க முடியாது.

எனவே, தொழில்முறை வீரரொருவர் எப்பொழுதும் தன்னுடைய உடற்தகுதியை சரிவர பேணிப் பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும். அதற்கு அவர்கள் தகுதிபெற்ற உடற்கூற்று நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அண்மைக்காலமாக அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உண்மையில் பல மில்லியன் ரூபா பணத்தைக் கொடுத்து உடற்கூற்று நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் இலங்கை அணியில் கடமையாற்றி வந்தாலும், ஏன் இலங்கை அணி வீரர்கள் இவ்வாறு உபாதைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்? என்பது தான் புரியாத புதிராகவும், தொடர் கதையாகவும் மாறிவிட்டது.

Video – உபாதைகளினால் அவதிப்படும் இலங்கை அணி | Cricket Galatta Epi 47

அதிலும் குறிப்பாக, அண்மையில் சென்சூரியனில் நிறைவுக்கு வந்த இலங்கைதென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.  

அதேபோல, ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் படுதோல்வியை சந்தித்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என பறிகொடுத்தது.

தென்னாபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு முன்னணி வீரர்களின் உபாதை முக்கிய காரணமாக அமைந்தது. இதில் இறுதி பதினொருவர் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் போட்டியின் இடைநடுவில் அவ்வப்போது உபாதைகளுக்கு முகங்கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

அதன்படி, போட்டியின் முதல் நாளில் உபாதைக்கு உள்ளாகிய வீரர்களில் முதன்மையானவராக துடுப்பாட்ட வீரரான தனன்ஞய டி சில்வா இடம்பிடித்தார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் பெற்று துடுப்பாடிக் கொண்டிருந்த போது தொடைத்தசை உபாதையினை எதிர்கொண்ட தனன்ஞய டி சில்வா அப்போட்டியின் போதே தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது

முதல் டெஸ்டிலிருந்து ராஜித நீக்கம்! குமார, வனிந்துவுக்கு உபாதை!

அதேநேரம், தனன்ஞய டி சில்வா இலங்கை அணி தாம் அடுத்ததாக இங்கிலாந்துடன் விளையாடவிருக்கின்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதிலும் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில், தென்னாபிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு உள்ளான வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினர்

அதேபோல, இலங்கை அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியின் அரைச்சதம் ஒன்றினை விளாசிய தினேஷ் சந்திமாலும், உட்தொடைத் தசை உபாதையினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை

இவர்களுடன், முதல் டெஸ்ட் போட்டியில் தங்களது உடற்தகுதியினை நிரூபிக்கத் தவறிய சுரங்க லக்மால் மற்றும் ஒசத பெர்னாந்து ஆகிய இருவரும் தென்னாபிரிக்காவுடனானன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை

மறுமுனையில், முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்கவும் உடற்தகுதியினை நிரூபித்த பிற்பாடு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி பதினொருவர் அணியில் இடம்பிடித்தார்.  

“இலங்கை அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் மெண்டிஸ்” – திமுத்

எனவே, குறித்த டெஸ்ட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் தென்னாபிரிக்காவுடன் இலங்கையின் உபாதைக்குள்ளான அணி தான் விளையாடியிருந்தாகத் தெரிவித்தனர்.   

இதுவரை காலமும் இலங்கை அணி விளையாடிய எந்தவொரு போட்டியிலும் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட பல வீரர்கள் உபாதைக்குள்ளாகியமை பதிவாகியிருக்கவில்லை. உண்மையில் இதுவொரு வரலாற்று பதிவாகக் கூட இருக்கலாம்.  

இலங்கை டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்ள முன் இலங்கை அணி உத்தியோகப்பற்றற்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடியிருந்தது. அப்போது இலங்கை அணியில் எந்தவொரு பயிற்சியாளர்களும், உடற்கூற்று நிபுணர்களும் இருக்கவில்லை

அதேபோல, அன்றைய காலத்தில் விளையாடிய அநுர தென்னகோன், ரஞ்சித் பெர்னாண்டோ, சன்ன குணசேகர, மைக்கல் திசேரா, சதாசிவம் உள்ளிட்ட வீரர்கள் உடற்பயிற்சிகளுக்காக ஒவ்வொரு நாளும் மைதானத்தைச் சுற்றி ஓடுவார்கள். இன்று காணப்படுகின்ற உடற்கட்டமைப்பு நிறுவனங்கள் அப்போது இருக்கவில்லை

இங்கிலாந்து தொடரையடுத்து இலங்கை வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தம்

ஆனால் முன்னைய காலங்களில் சதத்தைப் பெற்றுக்கொண்டு பல மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடினர். அதேபோல, நாளொன்றில் 20 முதல் 30 ஓவர்கள் பந்துவீசியும் இருந்தார்கள். இவையனைத்தையும் செய்தும் அவர்களில் எவரும் உபாதைகளுக்கு முகங்கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை

இலங்கை கிரிக்கெட் அணி 1996இல் ஒருநாள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்கூற்று நிபுணராக அலெக்ஸ் கொண்டோர் செயற்பட்டிருந்தார்.

அவருடைய உடற்பயிற்சி நுட்பங்கள் இலங்கை அணிக்கு அப்போதைய காலத்தில் மிகப் பெரிய சாதகத்தைக் கொடுத்திருந்தது என்றால் மிகையாகாது

இன்றைய நவீன கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் சாதாரணமாக ஒரு கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்ட பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர், பந்துவீச்சு ஆலோசகர், உடற்கூற்று நிபுணர்கள், வைத்தியர்கள் என பலர் வீரர்களின் ஒவ்வொரு திறமையையும் கண்காணிக்கவும், வலுப்படுத்தவும் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.  

அப்படி இருந்தும் டெஸ்ட் போட்டிகளில் அல்லது அடுத்தடுத்த தொடர்களில் இலங்கை அணி வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருவது கவலையளிக்கிறது

Video – 2021இல் புதிய வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி..! |Sports RoundUp – Epi 143

எமது அண்டை நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் குறைந்தளவு உபாதைகளுடன் வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதை அவதானிக்க முடிகின்றது

உதாரணமாக, டுபாயில் கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய அணி வீரர்கள், இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பயிற்சிகளை ஆரம்பித்திரருந்தார்கள்.

அதன்பிறகு குறைந்தபட்சம் சுமார் 30 லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய வீரர்கள், .பி.எல் தொடர் நிறைவடைந்த கையோடு அவுஸ்திரேலிய சென்று ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றார்கள்

அந்தவகையில், 3 ஒருநாள், 3 T20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இதுவரை நிறைவுக்கு வந்தாலும் இந்திய அணியில் விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்கள் தான் உபாதைக்குள்ளாகியிருந்தனர்.  

இதில் மொஹமட் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் துடுப்பாட்ட வீரர் கே.எல் ராஹுல் ஆகியோர் மாத்திரம் தான் இதுவரை உபாதைகளுக்கு உள்ளாகி நாடு திரும்பினர். மற்றைய அனைத்து வீரர்களும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்

எனவே, உணவுப் பழக்கவழக்கமாக இருந்தாலும், காலநிலையாக இருந்தாலும் இலங்கை வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு தான் காணப்படுகின்றது

டெஸ்ட் தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

ஆனால், உபாதைகளை எடுத்துக் கொண்டால் இலங்கை வீரர்கள் தான் முதலிடத்தில் உள்ளார்கள். இதற்குக் காரணம் இந்திய அணி வீரர்கள் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் சிறந்த முகாமைத்துவத்தைப் பேணி வருகின்றது

இந்திய வீரர்கள், ஒரு தொடர் நிறைவடைந்தவுடன் தமது அடுத்த தொடருக்கான தனிப்பட்ட பயிற்சிகளை முன்னெடுப்பார்கள். இதற்கு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளனர்

இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்திய கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்ததைப் பெற்றுக்கொண்ட அனைத்து வீரர்களும் கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் இல்லாத காலத்தில் தாங்கள் செய்கின்ற பயிற்சிகள் குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இலங்கை வீரர்களிடம் அப்படியான ஒரு முறைமை இருக்கின்றதா? என்பது சந்தேகமே. 

இதுஇவ்வாறிருக்க, தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்ட பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர், பந்துவீச்சு ஆலோசகர் என முக்கிய பதவிகளில் உள்ள அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்

கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து!

அதேபோல, அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்கூற்று நிபுணராக வெளிநாட்டில் கற்கை நெறிகளை படித்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் செயற்பட்டிருந்தாலும், தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் உடற்கூற்று நிபுணராக இருந்தவர் தான் இலங்கை தேசிய அணியின் உடற்கூற்று நிபுணராக செயற்பட்டு வருகின்றார்

இதில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் உயர் செயற்றிறன் பிரிவில் பலர் உடற்கூற்று நிபுணர்களாக உள்ளார்கள். இவர்கள் தான் வீரர்களின் உபாதைகள் குறித்து அவதானித்து வருகின்றார்கள்.  

அதுமாத்திரமின்றி, உபாதைக்குள்ளாகிய வீரரொருவரை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் தேர்வாளர்கள் இவர்களிடம் தான் ஆலோசனை பெற்றுக்கொள்வார்கள்

இதனால், வீரர்களுக்கு ஏற்பட்டிருப்பது சிறிய உபாதையா அல்லது பெரிய உபாதையா என்பது தொடர்பில் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவ்வாறான பல காரணங்கள் தான் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இவ்வாறான பல முரண்பாடுகளுக்கு மத்தியில் தான் இலங்கை அணி வீரர்கள் தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள். இதில் 21 பேர் கொண்ட அணியில் ஏழு பேர் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

முன்னதாக, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடாமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்த இலங்கை அணி வீரர்கள், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் நோக்கில் கடந்த ஜுன் மாதம் முதல் வதிவிட பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டனர்.

எனினும், குறித்த தொடரானது கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் இலங்கை அணி வீரர்கள் மீண்டும் பயிற்சிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர்

இந்தநிலையில் தான் அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது

இந்தத் தொடரின் போது இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகிய இருவரும் உபாதைகளுக்கு முகங்கொடுத்தனர்.

எனவே, 20 நாட்களாக நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நிறைவடைந்த கையோடு கொழும்பை வந்தடைந்த இலங்கை டெஸ்ட் அணி வீரர்கள், நேரடியாக தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

Video – Fail ஆனாலும் பரவாயில்லை: எனது ஆட்டம் இதுதான்- Kusal Perera

அங்கு சென்று சுமார் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை அணி வீரர்கள் எந்தவொரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். இதுதான் இலங்கை அணி வீரர்களின் அடுத்தடுத்த உபாதைகளுக்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  

10 நாட்களுக்கு மேலாக பயிற்சிகள் இன்றி ஹோட்டல்களில் தங்கியிருந்த இலங்கை அணி வீரர்கள், இறுதியில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி உபாதைகளுக்கு முகங்கொடுத்தனர். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளாகினர். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது.

ஒருபுறத்தில் இலங்கை அணி வீரர்கள் உபாதைகளால் நெருக்கடியை சந்தித்தாலும், 21 வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட வந்ததால் எஞ்சிய வீரர்களைக் கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது

ஆரம்பத்தில், இலங்கை அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முன் யோ யோ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் பரிசோதனைக்கு என்ன நடந்தது என்பதுு புரியாத புதிராக மாறிவிட்டது

அகில தனன்ஞயவிற்கு பந்துவீச அனுமதியளித்த ஐ.சி.சி.

அதேபோல, வீரரொருவருக்கு சிறிய உபாதையிருந்தாலும் அவரை அணியில் இணைத்துக்கொள்ளாத நடைமுறையும் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் தற்போது இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலமாக வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகளவில் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஓரிரெண்டு ஓவர்களை வீசிய கையுடன் ஓய்வறைக்கு திரும்புகின்ற பந்துவீச்சாளர்களை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களில் பல உலக சாதனைகளை படைத்த முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸுக்கு முக்கிய இடமுண்டு. இவர் தான் குறைந்தளவு உபாதைகளுடன் விளையாடிய ஒரேயொரு வீரர். அவரது பந்துவீச்சுப் பாணியை பார்த்த பலர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து விரைவில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிடுவார் என பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்

ஆனால் அவர் அதையும் மீறி கிரிக்கெட் உலகில் சாதனை வேகப் பந்துவீச்சாளராக சுமார் 15 வருடங்கள் முத்திரை பதித்தார். 322 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடிய அவர், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட சிறு உபாதை காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரேயொரு போட்டியை மாத்திரமே அவர் தவறவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Video – அபுதாபி T10 லீக்கில் களமறிங்கும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 141

இலங்கை அணியில் தற்போதுள்ள வேகப் பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் வெறுமனே இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி உபாதைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்

முன்னைய காலங்களில் டெஸ்ட் போட்டியொன்றில் சமிந்த வாஸ் நாளொன்றுக்கு 25 முதல் 30 ஓவர்களை பந்துவீசுவார். ஆனால், இன்றைய காலத்தில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அதிகபட்ச ஓவர்களை வீச முடியாமல் தடுமாறி வருகின்றனர். அதிலும் உபாதை தான் அதிகபட்சமாக உள்ளது

ஒட்டுமொத்தத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் எமது வீரர்களின் உபாதை குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தாவிட்டால் இலங்கை கிரிக்கெட் அணி அதள பாதளத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<