அடுத்த டோனி யார் என்பதை வெளிப்படையாக கூறிய சுரேஷ் ரெய்னா

148

இந்திய அணிக்கான அடுத்த மகேந்திரசிங் டோனி, ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோஹித் சர்மாதான் என சுரேஷ் ரெய்னா கருத்து வெளியிட்டுள்ளார். டோனியின் தலைமைத்துவ பண்பை, ரோஹித் சர்மாவிடம் காணமுடிகின்றதாகவும் ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். 

டுவிட்டரில் வைரலாகிய விராட் கோஹ்லி மரத்தில் இருக்கும் புகைப்படம்

“இந்திய அணியின் அடுத்த டோனி, ரோஹித் சர்மா என்பதை என்னால் கூறமுடியும். நான் அவரை பார்த்திருக்கிறேன். அவர் அமைதியானவர், ஏனையவர்களின் கருத்துகளை கேட்பதற்கு தயாராக இருப்பவர். அவர் வீரர்களுக்கு நம்பிக்கைத் தரக்ககூடியவர் என்பதுடன், அணித் தலைவர் என்ற ரீதியில் முன்நின்று அணியை வழிநடத்துவார்.

இலங்கை அணிக்கு எதிரான 2019 உலகக் கிண்ண போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும் ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனி

அவர், அணியை முன்நின்று வழிநடத்தும் அதே சந்தர்ப்பத்தில், உடைமாற்றும் அறையில் அனைவரையும் மதித்து நடந்துக்கொள்வார். இதுபோன்ற விடயங்கள் இருக்கும் போது வீரர்கள் சிறப்பாக உணரமுடியும்.

அத்துடன், ரோஹித் சர்மா வீரர்கள் அனைவரையும் தலைவராக நினைப்பார். அவரை அவதானித்திருப்பதுடன், அவருடன் விளையாடியுள்ளேன். நாம் பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் வெற்றிபெற்றோம். அதன்போது இளம் வீரர்களான சர்துல் தாகூர், வொஷிங்டன் சுந்தர் மற்றும் யுஷ்வேந்திர சஹால் ஆகியோருக்கு ரோஹித் நம்பிக்கையை கொடுத்ததையும் நான் பார்த்துக்கொண்டேன்” என்றார் சுரேஷ் ரெய்னா. 

ரோஹித் சர்மா ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான தலைவராக உள்ளார். 8 வருடங்கள் மும்பை அணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், அதில் 4 முறை அந்த அணி கிண்ணத்தை வென்றுள்ளது. அணித் தலைவர்கள் வெற்றி சதவீத வரிசையில் மகேந்திர சிங் டோனிக்கு பின் மாத்திரமே உள்ளார். டோனி 104 போட்டிகளில் தலைமை தாங்கி 60 போட்டிகளில் வெற்றிக்கண்டுள்ளார். 58.65 என்ற சராசரியில் டோனியின் வெற்றி சதவீதம் உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான 2019 உலகக் கிண்ண போட்டியில் மைதானத்திலிருந்து வெளியேறும் ரோஹித் சர்மா

அதேநேரம், விராட் கோஹ்லி விளையாடாத சந்தர்ப்பங்களில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்கியுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் 2018ம் ஆண்டு ஆசிய கிண்ணம் மற்றும் சுத்திர கிண்ணம் என்பவற்றை இந்திய அணி வெற்றிக்கொண்டது. அதுமாத்திரமின்றி இந்திய அணியை 10 ஒருநாள் மற்றும் 19 T20I போட்டிகளில் ரோஹித் சர்மா வழிநடத்தியுள்ளதுடன், அவற்றில் முறையே 8 மற்றும் 15 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. 

“ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடும் போது அவருடைய பிரகாசமான ஒளியின் கீழ், வீரர்கள் மகிழ்ந்து வருகின்றனர். ஒரு வீரரின் பிரகாசத்தின் கீழ் வீரர்கள் விளையாடினால், அவர்களுக்கு நேர்மறையான எண்ணத்தை கொண்டுவர முடியும். இது ரோஹித் சர்மாவிடம் இருக்கிறது. 

மகேந்திர சிங் டோனி புத்திசாலி. ஆனால், ரோஹித் சர்மா டோனியை விட அதிகமான ஐ.பி.எல். கிண்ணங்களை அணிக்கு வென்றுக்கொடுத்துள்ளார். எவ்வாறாயினும் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள். இருவரும் அணித் தலைவர்களாக, கருத்துகளை கேட்டுக்கொள்ள விரும்புபவர்கள். அவர்களால் அதிக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். வீரர்களின் உளவியல் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தைரியமளிக்க முடியும். எனவே, எனது புத்தகத்தில் இருவரும் அற்புதமானவர்கள்” என சுரேஷ் ரெய்னா மேலும் சுட்டிக்காட்டினார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க