உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, முதல் தடவையாக வர்ணனையாளராக செயற்படவுள்ளார்.
11 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் கண்கவர் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் இலங்கையிலிருந்து 2 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அகில தனஞ்சயவும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக துஷமந்த சமீரவும் விளையாடவுள்ளனர்.
இதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தொடர்ச்சியாக 2 ஆவது வருடமாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானுமான மஹேல ஜயவர்தன செயற்படவுள்ள அதேநேரம், அவ்வணியின் பந்துவீச்சு ஆலோசகராக முதல் தடவையாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க செயற்படவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை அண்மையில் இடம்பெற்ற ஏலத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம், இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளது.
அத்துடன், ஐ.பி.எல் வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கிலம், பங்களா, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் போட்டி வர்ணனைகள் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மூலமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இம்முறை ஐ.பி.எல் தொடருக்கான சர்வதேச வர்ணனையாளர்களாக முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழுவொன்றை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நேற்று (06) அறிவித்திருந்தது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார முதல் தடவையாக ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணி சார்பாக முதல் தடவையாக வர்ணனையாளராக சங்கக்கார இணைந்துகொண்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், ஐ.பி.எல் வரலாற்றில் 5 போட்டித் தொடர்களில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, இறுதியாக சன்ரைசஸ் ஹைதரபாத் அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். எனினும் இதுவரை 62 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி, 10 அரைச் சதங்களுடன் 1567 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.
இதன்படி, குமார் சங்கக்காரவுடன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான கெவின் பீட்டர்சன், மைக்கெல் வோகன் மற்றும் நசார் ஹுசைன் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் சிறப்பு வர்ணனையாளர்களாக செயற்படவுள்ளனர்.
ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார
முன்னதாக இந்திய கிரிக்கெட் சபை, இம்முறை ஐ.பி.எல் தொடருக்காக 100 வர்ணனையாளர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது. இதில் 8 இந்தியர்களும், 17 வெளிநாட்டவர்களும் இடம்பெற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தின் முன்னாள் வீராங்கனையான இஷா குஹா, மாத்திரம் பெண் வர்ணனையாளராக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநரம், ஐ.பி.எல். தொடரின் சிறப்பு வர்ணனையாளராக சஞ்சய் மஞ்ரேக்கர், ஹர்ஷ போஹ்க்லே, ஸ்கொட் ஸ்டைரிஸ், அனில் கும்ப்ளே, மொமி பங்க்வா, இயென் பிஷொப், சுனில் கவாஸ்கர், சைமன் டூல், எல். சிவா, அஞ்சும் சோப்ரா, டி. மொரிசன், லிசா ஸ்தாலேகர், மெத்யூ ஹெய்டன், மெல் ஜோன்ஸ், மைக்கல் கிளார்க், முரளி கார்த்திக், பிரெட் லீ, பிரெட் ஹொட்ஜ், கெவின் பீட்டர்சன், டீன் ஜோன்ஸ், கிரேம் ஸ்மித், டேவிட் ஹஸி, டெரன் சமி, பிரண்டன் ஜூலியன், டரன் கங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
Three Englishmen and a Sri Lankan who changed the game of cricket are now set to revolutionise commentary! Join them in the #SelectDugout, only on Star Sports Select. pic.twitter.com/LdODAOc3LF
— Star Sports (@StarSportsIndia) April 6, 2018