“இலங்கை அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் மெண்டிஸ்” – திமுத்

Sri Lanka tour of South Africa 2020

1099

இலங்கை கிரிக்கெட் அணியானது, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து நாட்டுக்கு திரும்பியுள்ளது. 

தென்னாபிரிக்க தொடரையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

>>கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து!

இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடியிருந்த குசல் மெண்டிஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், இணைத்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸிற்கு அடுத்த தொடரில் வாய்ப்பு கொடுப்பதா? இல்லையென்றால், சிறிய ஓய்வொன்றை வழங்குவதா? என்பது தொடர்பில் சிந்தித்துவருவதாக குறிப்பிட்டார்.

குசல் மெண்டிஸ் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட திமுத் கருணாரத்ன, அனைத்து வீரர்களும் சில காலங்களில் சிறப்பாக செயற்படுவர். சில காலங்களில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாது. குசல் மெண்டிஸ் இடைக்கிடையில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால், அவரால் தொடர்ச்சியாக மாத்திரமே பிரகாசிக்க முடியவில்லை”

குசல் மெண்டிஸ், இலங்கை அணியில் இருக்கும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக உள்ளார். இவர், இலங்கை டெஸ்ட் அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கிவருகின்றார். கடந்தமுறை தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த முறை அவரால் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியவில்லை. விளையாடிய நான்கு இன்னிங்ஸ்களில் 3 இன்னிங்ஸ்களில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தார்.

குசல் மெண்டிஸிற்கான அழுத்தம் அதிகம். அழுத்தம் அதிகமாக இருப்பதன் காரணத்தால்தான், அவரால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. அதனால், அவருக்கு சிறிய இடைவெளியை கொடுத்து, மீண்டும் அவரை ஓட்டக்குவிப்புக்கு அழைத்துவர எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, குசல் மெண்டிஸ் என்ற வீரர், இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்.

நாம் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுப்பதா? இல்லையென்றால், முதல் பதினொருவரில் இல்லாமல், குழாத்தில் வைத்து பயிற்சிகளை வழங்குவதா? என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம் என்றார்.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உபாதைகள் காரணமாக ஓசத பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் விளையாடமாட்டார்கள். ஆனால், தற்போது அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதுடன், நுவான் பிரதீப், ரொஷேன் சில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<