அகில தனன்ஞயவிற்கு பந்துவீச அனுமதியளித்த ஐ.சி.சி.

738

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கையின் மாய சுழல்பந்துவீச்சாளர் அகில தனன்ஞயவிற்கு மீண்டும் பந்துவீசும் அனுமதியினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வழங்கியிருக்கின்றது.

>>“இலங்கை அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் மெண்டிஸ்” – திமுத்

கடந்த 2019ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அகில தனன்ஞய முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றார் எனக் குற்றம் சுமத்திய ஐ.சி.சி. அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த வருடத்திற்கு பந்துவீசக்கூடாது என தடை உத்தரவு ஒன்றினை வழங்கியிருந்தது.

பின்னர் இந்த தடையுத்தரவுக் காலத்திற்குள் தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றிய அகில தனன்ஞய, தனது புதிய பந்துவீச்சுப்பாணியுடன் உள்ளூர் போட்டிகளில் பந்துவீசத் தொடங்கியதோடு, முதல்முறையாக நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக பந்துவீசி சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, தடையுத்தரவுக் காலம் நிறைவுக்கு வந்ததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அகில தனன்ஞய புதிய பந்துவீச்சுப்பாணியில் பந்துவீசும் காணொளிகளை கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி ஐ.சி.சி. இடம் சமர்ப்பித்திருந்தது.

இந்த காணொளிகளை பரிசோதித்த ஐ.சி.சி. இன் நிபுணர் குழாம் அகில தனன்ஞய ஒழுங்கான முறையில் பந்துவீசுவதை உறுதி செய்தே அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பந்துவீசுவதற்கான அனுமதியினை வழங்கியிருக்கின்றது.

>>இலங்கையின் முன்னாள் பயிற்சியாளரை தமக்காக எடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை<<

இது அகில தனன்ஞய ஐ.சி.சி. இன் தடையுத்தரவில் இருந்து நீங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசும் வாய்ப்பினை பெற்றிருக்கும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டிலும் ஐ.சி.சி. அகில தனன்ஞயவிற்கு பந்துவீசுவதற்கான தடையுத்தரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேரம், அகில தனன்ஞயவிற்கு பந்துவீச வழங்கப்பட்டிருக்கும் அனுமதி இலங்கை கிரிக்கெட் அணிக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஒரு முன்னணி சுழல்வீரர் இல்லாது இருந்த காரணத்தினால் பின்னடைவு ஒன்றினைச் சந்தித்திருந்தது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<