மே.தீவுகள் வீரர்களை பயிற்சிகளில் ஈடுபட தடைவிதித்த நியூசிலாந்து

241

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மீறியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

க்ரிஸ்சேர்ச்சில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு வளையமாக பிரிக்கப்பட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், தங்களுக்கு அடுத்த வளையத்தில் உள்ள வீரர்களுடன், தொடர்புகளை பேணியதுடன், ஒருவருக்கொருவர் உணவுகளை பறிமாறிக்கொண்டமை சிசிடிவி காணொளி மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

>>பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராகவும் பாபர் அசாம்

இதன் காரணமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கிந்திய தீவுகளின் அனைத்து உறுப்பினர்களும், பயிற்சிகளில் ஈடுபட முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இதுதொடர்பில் நியூசிலாந்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளமை விசாரணையின் மூலமாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பிலான பல்வேறு சிசிடிவி பதிவுகளை பார்வையிட முடிந்தது. அதேநேரம், ஹோட்டல் ஊழியர் மூலமும் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டது. உணவுகளை பறிமாறியது உட்பட, பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், ஹோட்டலில் மாத்திரமே இந்த விடயங்கள் நடந்துள்ளமையால், மக்களுக்கு எந்தவொரு அபாயமும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“நியூசிலாந்துக்கு வருகைத்தரும் அனைத்து விளையாட்டு அணிகள் உட்பட மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நாட்டின் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச போட்டியை கவனத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் காலங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருவது மிகவும் சிறப்பான விடயம். ஆனால், விதிமுறைகளை கட்டாயமாக பேணவேண்டும். நாம், கொவிட்-19 வைரஸ் தொற்றை சமூகத்திலிருந்து தடுத்துள்ளதுடன், அனைவரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் பயிற்சிகளில் ஈடுபட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அவர்கள் விதிமுறைளை மீறியுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் நிறைவடையும் வரை வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என நியூசிலாந்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் நாளையை தினம் நாட்டை அடையவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<