உபாதை காரணமாக இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் இருந்து வெளியேறும் மில்லர்

1070
Miller out of Sri Lanka ODIs due to finger injury Tamil

தென்னாபிரிக்க அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர், டர்பன் நகரில் இடம்பெற்ற இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தனது வலது கரத்தின் விரலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக இத்தொடரின் ஏனைய போட்டிகளிலிருந்து வெளியேருகின்றார்.

எனினும், இவருக்கு பதிலாக தென்னாபிரிக்க குழாமில் இணைக்கப்படவுள்ள வீரர் பற்றிய அறிவிப்பினை தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் (CSA) இன்னும் வெளியிடவில்லை.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில், 98 பந்துகளில் பிரமாதமாக ஆடி 117 ஓட்டங்களினை குவித்திருந்த மில்லர், அப்போட்டியில் நிரோஷன் திக்வெல்லவினால் அடிக்கப்பட்ட பந்தினை பிடியெடுக்க முற்பட்ட போது விரல் பிளவு  உபாதையிற்கு உள்ளாகியிருந்தார். இதனால், அந்த பிடியெடுப்பின் பின்னர் பாதுகாப்பு காரணங்களிற்காக மைதானத்தினை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த அவர், மீண்டும் ஆடுகளத்திற்குள் பிரவேசித்திருக்கவில்லை.

டேவிட், களத்தடுப்பில் ஈடுபடுட்டிருந்த போது உண்டாகிய  (விரலில்) பிளவினை மீண்டும் தையல்கள் மூலம் இணைத்து சரி செய்ய வேண்டிய நிலையில் தற்போது இருக்கின்றார். இவரிற்கு இது முற்றாக குணமடைய கிட்டத்தட்ட 7-10 நாட்கள் வரையேயாயினும் எடுக்கும், இதனால் மிகுதியாய் நடைபெற இருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் மில்லர் பிரசன்னமாக இயலாதிருக்கும். ஆனால், மில்லர் இத்தொடரினை அடுத்து நியூசிலாந்து அணியுடனான தொடரில் விளையாட முடியுமானவராக இருப்பார் என்று தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மொஹமட் மூஸாஜீ மில்லரின் உபாதை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில், 2 -0 என தென்னாபிரிக்க அணியானது இத்தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 4), ஜொஹன்னஸ்பேர்க், நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.