கடற்படையை வீழ்த்தி கண்டி அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

98

கழகங்களுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் மூன்று போட்டிகள் நேற்று (09) இடம்பெற்றன. இப்போட்டிகளில் கண்டி விளையாட்டுக் கழகம், ஹெவலொக் விளையாட்டுக் கழகம் மற்றும் CH & FC அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

முதல் சுற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான, பலமிக்க கண்டி மற்றும் கடற்படை அணிகள் மோதிக் கொண்ட இப்போட்டி ரசிகர்களினால் நிரம்பிவழிந்த நித்தவளை மைதானத்தில் இடம்பெற்றது. மூன்றாவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்த கடற்படை அணி போட்டியின் முதல் புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (கண்டி 00 – 03 கடற்படை)

எட்டாவது நிமிடத்தில் அணித்தலைவர் கயான் வீரரத்னவிடமிருந்து பந்தைப் பெற்றுக் கொண்ட சிரேஷ்ட வீரர் பாசில் மரீஜா வலப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். நைஜல் ரத்வத்த கொன்வெர்சன் உதையை சிறப்பாக உதைத்தார். அதனைத் தொடர்ந்து கண்டி அணியின் முன்வரிசை வீரர்கள் தமது பலத்தை சிறப்பாக பயன்படுத்தி எதிரணியின் பாதிக்குள் தொடர் அழுத்தத்தை வழங்கினர். அதன் பலனாக அனுருத்த வில்வர மற்றும் மொஹமட் அலி அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்தனர். இரண்டு உதைகளையும் நைஜல் ரத்வத்த வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி 21 – 03 கடற்படை)

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளாலும் சில நிமிடங்களுக்கு புள்ளிகளை பெற இயலவில்லை. எனினும் முதல் பாதி நிறைவடையும் தருவாயில் கடற்படை அணியின் மொஹமட் அப்சல் ஒருவாறாக ட்ரை ஒன்றை வைத்து புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார். திலின வீரசிங்க கொன்வெர்சன் உதையை இரண்டு புள்ளிகளாக மாற்றினார். (கண்டி 21 – 10 கடற்படை)

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 21 – 10 கடற்படை விளையாட்டுக் கழகம்

கடற்படை அணியானது இரண்டாம் பாதியில் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கியிருந்தது. அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்ததுடன் திலின வீரசிங்க குறிதவறாது உதைத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். (கண்டி 21 – 13 கடற்படை)

தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்; தொடர் தோல்விகளால் தடுமாறும் CR & FC

டயலொக் ரக்பி லீக் 5 ஆம் வாரத்திற்கான போட்டியில், CR & FC கழகத்தின் சொந்த மைதானத்தில்…

கடற்படை அணி தொடர்ந்தும் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்ட போதிலும், இறுதி நகர்வுகளில் தவறுகளை விட்டதன் காரணமாக புள்ளிகளைப் பெற முடியவில்லை. 53 ஆவது நிமிடத்தில் கடற்படை அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பு கிட்டியதுடன் இம்முறையும் திலின வீரசிங்க இலக்கை நோக்கி உதைத்தார். (கண்டி 21 – 16 கடற்படை)

இரண்டாம் பாதியில் மந்தமான விளையாட்டுப் பாணியின் காரணமாக எதிரணியின் பாதிக்குள் நுழையத் தடுமாறி வந்த கண்டி அணி 63 ஆவது நிமிடத்தில் ஒருவாறாக ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. விங் நிலை வீரர் ரிச்சர்ட் தர்மபால தன் அபார ஓட்டத்தின் பின்னர் வலப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். மாற்று வீரராக களமிறங்கிய திலின விஜேசிங்க கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (கண்டி 26 – 16 கடற்படை)

கடற்படை அணிக்கு 70 ஆவது நிமிடமளவில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், திலின வீரசிங்க உதையை கம்பங்களை ஊடறுத்துச் செல்லும் வகையில் உதைத்தார். கடற்படை அணி சிறப்பாட்டத்தை தொடர்ந்து வெளிக்காட்டி ட்ரை கோட்டை நெருங்கியது. எனினும் கண்டி வீரர்கள் எதிரணியை முன்னேற விடாமல் தடுத்தது மட்டுமன்றி பந்தை மீண்டும் சுவீகரித்து தமது ட்ரை கோட்டை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். திலின விஜேசிங்க அபாரமாக பல கடற்படை வீரர்களை தாண்டி ட்ரை ஒன்றை வைக்க கடற்படையின் எதிர்பார்ப்பு நொறுங்கியது. இம்முறை நைஜல் ரத்வத்த கொன்வெர்சன் உதையை லாவகமாக உதைத்தார். (கண்டி 33 – 19 கடற்படை)

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 33 – 19 கடற்படை விளையாட்டுக் கழகம்

அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்ததுடன் கண்டி அணி ஒரு போட்டியிலேனும் தோல்வியை தழுவாத நிலையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: கயான் வீரரத்ன (கண்டி விளையாட்டுக் கழகம்)


CR & FC எதிர் ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

இவ்வணிகள் மோதிக் கொண்ட மற்றுமொரு விறுவிறுப்பான போட்டி லொங்டன் பிளேஸ் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ராஹுல் டி சில்வாவின் விவேகமான உதையை தொடர்ந்து ஹெவலொக் அணி வீரர் பிரசாத் மதுசங்க முதல் ட்ரையை வைத்தார். துலாஜ் பெரேரா கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (ஹெவலொக் 07 – 00 CR & FC)

14 ஆவது நிமிடத்தில் CR & FC அணியின் கயான் டில்ஷான் கம்பங்களுக்கு அடியில் ட்ரை ஒன்றை வைத்ததுடன் தரித்த ரத்வத்த கொன்வெர்சன் உதையை குறிதவறாது உதைத்து புள்ளிகளை சமனாக்கினார். 21 ஆவது நிமிடத்தில் அவர் மற்றுமொரு பெனால்டி உதையை உதைத்து மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (ஹெவலொக் 07 – 10 CR & FC)

தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த முன்கள வீரர் பிரசாத் மதுசங்க தன் இரண்டாவது ட்ரையைப் பெற்றுக் கொண்டார். கடினமான உதையை துலாஜ் பெரேரா தவறவிட்டதுடன், அதனை தொடர்ந்து எதிரணியின் தரிந்த ரத்வத்த பெனால்டி உதையொன்றின் மூலம் தனதணியை மீண்டும் முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். எனினும் முதல் பாதியின் இறுதியில் ஹெவலொக் அணியின் எட்டாம் இலக்க வீரர் லசிந்து இஷான் ட்ரை ஒன்றை வைக்க அவ்வணி முன்னிலை பெற்றுக் கொண்டது. இம்முறை துலாஜ் பெரேராவின் உதை குறிதவறவில்லை. (ஹெவலொக் 19 – 13 CR & FC)

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 19 – 13 CR & FC

 இரண்டாம் பாதியை சிறப்பாக ஆரம்பித்த CR & FC அணி தரிந்த ரத்வத்தவின் பெனால்டி உதையின் ஊடாக மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. எனினும் எதிரணியின் முன்னேற்றத்தை தடுத்த ஹெவலொக் வீரர்கள், இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில் சாணக பண்டார மூலமாக ட்ரை ஒன்றினை பெற்றுக் கொண்டனர். துலாஜ் பெரேராவின் உதை இம்முறை இலக்கை நோக்கி அமைந்திருக்கவில்லை. (ஹெவலொக் 24 – 16 CR & FC)

CH & FC அணியின் எதிர்தாக்குதலை மீறி மயிரிழையில் வெற்றியீட்டியது ஹெவலொக்

டயலொக் ரக்பி லீக் தொடரின் நான்காம் வாரத்திற்கான போட்டியொன்றில் ஹெவலொக் விளையாட்டுக் கழகம்…

 நிரோஷன் பெர்னாண்டோவின் லாவகமான கைமாற்றலை தொடர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தை தொடர்ந்த பிரசாத் மதுசங்க ஹெட்ரிக் ட்ரை சாதனையை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்தும் துலாஜ் பெரேரா கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். முயற்சியை தவறவிடாத CR & FC அணி பலத்த அழுத்தத்தை வழங்கி எதிரணியின் ட்ரை கோட்டின் அருகில் முகாமிட்டிருந்தது. தடுப்பாட்டத்தின் போது ஹெவலொக் வீரர்கள் அடுத்தடுத்து விதிமுறைகளுக்கு முரணான தவறுகளை விட, நடுவரினால் CR & FC அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கப்பட்டது. (ஹெவலொக் 29 – 23 CR & FC)

அழுத்தத்தை தொடர்ந்த CR & FC வீரர்கள் சிறப்பான நகர்வுகளை வெளிப்படுத்தி ரீசா ரபாய்டீனிற்கு பந்தை பரிமாற அவர் மூலையில் ட்ரை வைத்தார். கடினமான உதையை தரிந்த ரத்வத்த எவ்வித சலனமுமின்றி உதைக்க CR & FC போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 70 ஆவது நிமிடத்தில் கிடைத்த இலகுவான 25m பெனால்டியை துலாஜ் பெரேரா மீண்டும் தவறவிட ஹெவலொக் ரசிகர்களின் ஏமாற்றம் தொடர்ந்தது. (ஹெவலொக் 29 – 30 CR & FC)

எனினும் போட்டியின் இறுதி நிமிடங்களில் ஹெவலொக் அணிக்கு கிடைத்த 45m தூரத்திலான கடினமான உதையை துலாஜ் பெரேரா சிறப்பாக உதைத்து தனதணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். சில வினாடிகளின் பின்னர் கிடைக்கப் பெற்ற மற்றுமொரு உதையையும் துலாஜ் பெரேரா உதைத்து, தான் முன்னர் விட்ட தவறுகளை ஈடு செய்ததுடன் தனது அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். (ஹெவலொக் 35 – 30 CR & FC)

 முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 35 – 30 CR & FC

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: ராஹுல் டி சில்வா (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)


CH & FC எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்மலான விமானப்படை மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் விமானப்படை அணி ஆதிக்கம் செலுத்தியதுடன், அதன் காரணமாக இரண்டு பெனால்டி வாய்ப்புகளை பெற்றுக் கொண்டது. சரித் செனவிரத்ன இரண்டு உதைகளையும் வெற்றிகரமாக உதைத்தார். தொடர்ந்தும் CH & FC அணியானது பந்தை கையாளுவதில் தவறுகளை மேற்கொள்ள, சரித் செனவிரத்ன ட்ரை ஒன்றை வைத்து புள்ளிகளை மேலும் அதிகரித்தார். எனினும் அவரது கொன்வெர்சன் உதை குறிதவறியது. (CH & FC 00 – 11 விமானப்படை)

எதிரணிக்கு பதிலடி கொடுத்த CH & FC அணி, அவிஷ்க லீ மற்றும் யோஷித ராஜபக்ஷ மூலமாக அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்தது. இரண்டு கொன்வெர்சன் உதைகளையும் சேமுவல் மதுவந்த வெற்றிகரமாக உதைத்தார். விமானப்படை அணியின் சரித் செனவிரத்ன தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி புள்ளிகளை சமனாக்கினார். எனினும் முதல் பாதியின் இறுதியில் சஜித் சாரங்க ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொள்ள CH & FC அணி முதல் பாதியை முன்னிலையில் நிறைவு செய்தது. (CH & FC 19 – 14 விமானப்படை)

முதல் பாதி: CH & FC 19 – 14 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியை சேமுவல் மதுவந்த தனது சிறப்பான பெனால்டி உதையின் மூலம் மூன்று புள்ளிகளை பெற்று ஆரம்பித்து வைத்தார். விமானப்படை அணியின் முன்கள வீரர்களின் சிறந்த கைமாற்றல்களின் பின்னர் பத்மசங்க வீரசிங்க ட்ரை ஒன்றைப் பெற்று புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். செனவிரத்ன கடினமான கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 22 – 21 விமானப்படை)

பொலிஸ், CH & FC அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

டயலொக் ரக்பி லீக் தொடரின் ஐந்தாம் வாரத்திற்கான முதல் போட்டி இன்று CH & FC மற்றும் பொலிஸ்…

பதிலுக்கு CH & FC அணியின் முன்கள வீரர்களும் ரோலிங் மோல் ஒன்றின் மூலம் ட்ரை வாய்ப்பினை உருவாக்க, யோஷித ராஜபக்ஷ தனது இரண்டாவது ட்ரையை வைத்தார். மதுவந்தவின் வெற்றிகரமான கொன்வெர்சன் உதையைத் தொடர்ந்து விமானப்படை அணியின் செனவிரத்ன பெனால்டி உதை ஒன்றின் மூலம் மூன்று புள்ளிகளைப் பதிவு செய்தார். (CH & FC 29 – 24 விமானப்படை)

CH & FC விங் நிலை வீரர் ஹஷான் மதுரங்க தனது பங்களிப்பிற்காக ட்ரை ஒன்றை வைத்ததுடன் இம்முறையும் மதுவந்த குறிதவறாது உதைத்தார். சளைக்காது போராடிய விமானப்படை வீரர்கள் பபசர ஹேவகே மூலம் ட்ரை வைத்து எதிரணியின் புள்ளி எண்ணிக்கையை நெருங்கினர். எனினும் CH & FC அணியின் அவந்த லீ இறுதி நிமிடங்களில் ட்ரை ஒன்றைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முழுவதிலும் அபாரமான உதைக்கும் திறனை வெளிக்காட்டியிருந்த சேமுவல் மதுவந்த, இறுதி கொன்வெர்சன் உதையையும் இலக்கை நோக்கி உதைத்து போட்டியை நிறைவு செய்தார். (CH & FC 43 – 31 விமானப்படை)

 முழு நேரம்: CH & FC 43 – 31 விமானப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: யோஷித ராஜபக்ஷ (CH & FC)