மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் வீக்ஸ் காலமானார்

141

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட ஜாம்பவான் சேர் எவர்டன் வீக்ஸ் தனது 95 ஆவது வயதில் காலமானார்.

48 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் வீக்ஸ் 4,455 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 58.61 ஓட்ட சராசரியை பதிவுசெய்துள்ளார். தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற ஒரே வீரராகவும் அவரின் சாதனை ஒன்று காணப்படுகின்றது.  

மேற்கிந்திய ”Three Ws” என்று அழைக்கப்படும் மூன்று வீரர்களில் ஒருவராகவும் வீக்ஸ் உள்ளார். சேர் கிளைட் வொல்கொட் மற்றும் சேர் பிரான்க் வொர்ரல் ஆகியோரே ”Three Ws” என்று அழைக்கப்படும் அடுத்த இரு வீரர்கள் ஆவர். 

உலகக்கிண்ண ஆட்ட நிர்யணம்: அரவிந்த, தரங்கவிடம் விசாரணை

எமது அடையாளமாக உள்ளவரின் இழப்பை எண்ணி உள்ளம் கவலையில் கனக்கிறது. அவர் ஒரு ஜாம்பவான், எமது நாயகன்” என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.   

“அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மேலும் குறிப்பிட்டது. 

குறைந்தது 20 இன்னிங்ஸ்களில் ஆடிய வீரர்களில், டெஸ்ட் வரலாற்றில் 10ஆவது அதிகூடிய ஒட்ட சராசரியை பெற்ற வீரராக வீக்ஸ் உள்ளார்.     

இதோடு, 1950இல் இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்ற அணியில் வொல்கொட் மற்றும் வொர்ரல் உடன் வீக்சும் இருந்தார்.  

ஆண்கள் கிரிக்கெட்டில் உயிர் வாழும் மூன்றாவது அதிக வயது கொண்டவராகவும் வீக்ஸ் இருந்து வந்தார். இதில் 97 வயது கொண்ட தென்னாபிரிக்காவின் ஜோன் வட்கின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டொன் ஸ்மித் ஆகியோர் உயிர்வாழும் உலகின் வயதான கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். 

பார்படோஸைச் சேர்ந்த எவர்டன் வீக்ஸ் 1948ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 1995ஆம் ஆண்டு அவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

மாரடைப்பை அடுத்து 2019 ஜுன் மாதத்தில் அவர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

“மேற்கிந்திய கிரிக்கெட்டின் முன்னோடிகளில் ஒருவராக அவர் உள்ளார். பண்புள்ளவர் மற்றும் அற்புதமான ஒரு மனிதர். உண்மையில் எமது கிரிக்கெட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராக அவர் இருந்தார்” என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெர்ரிட் தெரிவித்தார்.   

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

“மேற்கிந்திய தீவுகளின் அடையாளங்களில் ஒருவரான அவருக்கு எமது மரியாதையை செலுத்துகிறோம். சேர் எவர்டன் தமது நாடு மற்றும் பிராந்திய விளையாட்டுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளார்” என்று மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. அவர் எம்மத்தியில் இருந்ததற்கு நாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் அவரது ஆன்மா சாந்தியடை பிரார்த்திக்கிறோம்” என்றும் குறித்த சம்மேளனம் மேலும் குறிப்பிட்டது.  

மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “சேர் எவர்டன் வீக்ஸின் மரணச் செய்தியைக் கேட்டு லோர்ட்ஸ் மற்றும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். மேற்கிந்திய தீவுகளின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் எப்போது நினைவு கொள்ளப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. 

லங்கர்செயார் லீக்கில் பக்கப் அணிக்காக ஆடிய வீக்ஸ் ஏழு பருவங்களில் 91.61 ஓட்ட சராசரியை பெற்றதோடு 1954இல் அவர் 158.25 ஓட்ட சராசரியை பெற்றது இன்றுவரை அந்த லீக்கில் சாதனையாக உள்ளது.     

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க