உலகக்கிண்ண ஆட்ட நிர்யணம்: அரவிந்த, தரங்கவிடம் விசாரணை

217

2011 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. 

இதனிடையே, 2011 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவுக்கு நாளைய தினம் (02) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வரும்படி விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. 

ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதன் முதல் கட்டமாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் உலகக் கிண்ணத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கடந்த 26 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்குச் சென்று தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்துக்குச் சென்று விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவால் இந்த ஆவணங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அணி விபரம், அதிகாரிகள் விபரம், தேர்வுக் குழு விபரம், குறிப்பாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆவணங்களை தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2011 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடிய வீரர்கள், அதிகாரிகள் அனைவரையும் விசாரணக்கு உட்படுத்தி, அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. 

இதன்படி, அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவிடம் நேற்று (30) விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவால் வாக்குமூலம் பெறப்பட்டது.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் அரவிந்த டி சில்வா ஆஜராகியிருந்தார்.

சுமார் 6 மணித்தியாலங்கள் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா குறிப்பிட்டார். 

இந்த நிலையில், 2011 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடிய உபுல் தரங்கவிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு உபுல் தரங்க சட்டத்தரணிகள் இருவருடன் வருகை தந்தார். சுமார் 2 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது.

2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்

இதனிடையே, வாக்குமூலம் அளித்த பிறகு வெளியே வந்த உபுல் தரங்கவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

2011 இல் நடைபெற்ற உலகக் கிண்ணம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைய என்னை அழைத்திருந்தனர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன் என தெரிவித்தார். 

இது இவ்வாறிருக்க, 2011 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட குமார் சங்கக்காரவை விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு கடந்த 24 ஆம் திகதி காலை வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

நாவலப்பிட்டியவில் உள்ள அவருடைய காரியலாயத்துக்குச் சென்ற விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், முன்னாள் அமைச்சரிடம் 3 மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டு விசேட வாக்குமூலமொன்றையும் பதிவு செய்து கொண்டுள்ளனர். 

அத்துடன், அவரால் வழங்கப்பட்ட 6 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<