இலங்கை – இங்கிலாந்து மகளிர் போட்டி திகதிகளில் மாற்றம்

Sri Lanka Women’s tour of England 2023

93

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த சுற்றுப்பயணமானது செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில், போட்டி அட்டவணையை திருத்தியமைத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை இன்று (2) புதிய திகதிகளை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையை பரிசீலித்து இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2023 ஆசிய விளையாட்டு விழா சீனாவில் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் மகளிருக்கான கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் இலங்கை மகளிர் அணியும் பங்கேற்கவுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டி அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது.

முன்னதாக, இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடரை செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போட்டி அட்டவணையின்படி, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 2 மற்றும் 6 ஆகிய திகதிகளில் T20i தொடரும், செப்டம்பர் 9, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணை

T20i தொடர்

  • முதல் T20i: 31 ஆகஸ்ட் – சென்ட்ரல் கவுண்டி மைதானம், ஹோவ்
  • 2ஆவது T20i: செப்டம்பர் 2 – கிளவுட் கவுண்டி மைதானம், செம்ஸ்போர்ட்
  • 3ஆவது T20i: செப்டம்பர் 6 – இன்கோரா கவுண்டி மைதானம், டெர்பி

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 9 – சீட் யுனிக் ரிவர்சைட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்
  • 2ஆவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 12 – கவுண்டி மைதானம், நொர்த்தாம்டன்
  • 3ஆவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 14 – அப்டன்ஸ்டீல் கவுண்டி மைதானம், லெய்செஸ்டர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<