வடக்கின் பெரும் சமரில் இம்முறை சாதிக்கப்போவது யார்?

934

வடக்கின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு டையில் இடம்பெறும் நூற்றாண்டு தாண்டிய வரலாற்றினைக் கொண்டுள்ளவடக்கின் பெரும் சமர்என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடரில், 112ஆவது போட்டியானது எதிர்வரும் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 1904ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் பெரும் சமரில் இதுவரை இடம்பெற்றுள்ள 111 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும், 27 போட்டிகளில் மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளன. 40 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. ஒரு போட்டியானது(1967) கைவிடப்பட்ட அதேவேளை, 7 போட்டிகளின் (1905, 1911-1914, 1925, 1927) முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

112ஆவது வடக்கின் பெரும் சமருக்கான ஊடக சந்திப்பு- 2018

வடக்கின் இரு புகழ்பூத்த பாடசாலைகளான சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி.

கடந்த வருடம் இடம்பெற்ற 111ஆவது சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியானது இன்னிங்ஸ் வெற்றி ஒன்றினை பதிவுசெய்து கிண்ணத்தினை தக்கவைத்துள்ளது. மத்திய கல்லூரி அணியானது இறுதியாக 2011ஆம் ஆண்டிலேயே வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி

இந்த பருவகாலத்தில் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 2இல் ஆடிவரும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியானது, கொழும்பு றோயல் கல்லூரி அணியுடனான வெற்றியுடன் தொடரினை ஆரம்பித்திருந்தாலும் இறுதி நேரத்தில் அடைந்த பின்னடைவின் காரணமாக, தமது குழுவில் 3ஆவது இடத்தினையே அவர்களால் பெற முடிந்தது.

இரண்டாவது சுற்றுப்போட்டியில் தேவபத்திராஜா அணியுடனான முதல் இன்னிங்ஸ் தோல்வி காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர். 50 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடரில் காட்டுனேறிய சென் செபஸ்டியன்ஸ் கல்லூரியினை எதிர்கொள்ளவுள்ளனர்.

தமது பாரம்பரியமான போட்டிகளில் கல்கிசை புனித தோமியர் கல்லூரியுடனான போட்டியில் மட்டும் முதல் இன்னிங்ஸால் தோல்வியடைந்துள்ளனர். ஏனைய 6 போட்டிகளில் 5இல் இன்னிங்ஸ் வெற்றியினையும், ஒன்றில் (Outright) வெற்றியினையும் பதிவு செய்துள்ளனர்.  

Photos: St. John’s College Cricket Team 2018 Preview

Photos of St. John’s College Cricket Team 2018 Title St. John’s College Cricket Team 2018

இக்கல்லூரி வீரர்கள் தமது இந்த பருவகாலத்தினை சிறப்பாக ஆரம்பித்தாலும் துடுப்பாட்ட தளும்பல் காரணமாக சில போட்டிகளில் பின்னடைவினை சந்தித்துள்ளனர். அதேவேளை, அநேக போட்டிகளில் பலம்மிக்க பந்துவீச்சானது இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

சென் ஜோன்சின் இந்த பருவகால போட்டி முடிவுகள்  

போட்டி இன்னிங்ஸ் வெற்றி வெற்றி முதல் இன்னிங்ஸ் வெற்றி இன்னிங்ஸ் தோல்வி தோல்வி முதல் இன்னிங்ஸ் தோல்வி
14 03 06 01 01 01 02

 

அவதானிக்க வேண்டியவர்கள்

இம்முறை சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினை ஆறாவது வருட அனுபவ வீரரான வசந்தன் யதுசன் தலைமை தாங்கி வழிநடாத்துகின்றார். இவர் இவ்வருடம் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியினை தலைமை தங்கிய அதேவேளை, 23 வயதிற்குட்பட்ட அணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தார். இந்த பருவகாலத்தில் 2 சதங்கள் (106, 153) உள்ளடங்கலாக 700 ஓட்டங்களினையும், பந்துவீச்சில் 65 விக்கெட்டுகளினையும் கைப்பற்றியுள்ள சகலதுறை வீரராகவே அவர் உள்ளார்.

அதேபோன்று, 5ஆவது வருடமாக களம் காணும் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரும், அணியின் உப தலைவருமான கனகரத்தினம் கபில்ராஜ் 75 விக்கெட்டுக்களினை கைப்பற்றியுள்ள அதேவேளை, 400 இற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் இம்முறை ஜோனியன்களின் மத்திய வரிசை துடுப்பாடத்தில் முக்கிய பங்காளராகவுள்ளார்.

சகலதுறை வீரரான அபினாஷ் 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் 500 இருக்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். அனுபவ வீரர்களில் இவரும் ஒருவர்.

கடந்த வருடம் வட மாகாண 15 வயதிற்குட்பட்ட அணியின் தலைவராக செயற்பட்ட டினோஷான் இம்முறை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியில் தனக்கென தனி இடத்தினை வைத்துள்ளார். இவர் கபில்ராஜுடன் வேகப்பந்து வீச்சு துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் மத்திய வரிசையில் நிதான அட்டத்தினை வெளிப்படுத்தக் கூடியவருமாவார்.

இவர்களிற்கு மேலதிகமாக சிரேஷ்ட வீரர்களான சுபீட்ஷன், ஷெரோபன், அபிலக்ஷன் ஆகியோர் நிதானமான துடுப்பாட்டக்காரர்களாகவும், பகுதிநேர பந்து வீச்சாளர்களாகவும் நம்பிக்கை தரக்கூடியவர்கள். தனுஜன், சௌமியன் மற்றும் இளைய வீரர் பிரசாந்த் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்க்க கூடியவர்கள். இவர்களில் தனுஜன் யாழ் இந்துவுக்கு எதிராக சதம் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

சென் ஜோன்சின் பந்துவீச்சு துறையினை அவதானிக்கையில் வேகப்பந்து வீச்சாளர்களான கபில்ராஜ், டினோஷான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான ஜதுசன், அபினாஷ் ஆகியோரிலேயே தங்கியுள்ளது.  

கடந்த காலங்களில் கல்லூரியின் கனிஷ்ட அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டேனியல் சுரேந்திரன் அவர்கள், கடந்த வருடம் பெற்றுக்கொடுத்த இன்னிங்ஸ் வெற்றியினைத் தொடர்ந்து இம்முறை இரண்டாவது ஆண்டாக சிரேஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பணியினை தொடர்கின்றார்.

இவ்வருடம் சிரேஷ்ட அணியில் இருக்கின்ற வீரர்கள் தொடர்பில் இவரது கடந்தகால அவதானிப்புகள் மற்றும் புரிதல்கள் அணியினை வழிநடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும். இவர் “தனது வீரர்கள் பெற்றுள்ள போட்டி அனுபவங்கள் மற்றும் சிறந்த களத்தடுப்பு என்பன இம்முறை பெரும் சமரில் கைகொடுக்கும்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  


யாழ் மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 3 இல் ஆடிவரும் யாழ் மத்திய கல்லூரி அணியானது, தமது முதலாவது சுற்றுபோட்டிக்காக தாம் சந்தித்த 6 போட்டிகளில் 5 இல் வெற்றிபெற்றுள்ளது (2 இன்னிங்ஸ் வெற்றி உள்ளடங்கலாக). ஒரேயொரு போட்டியில் மட்டும் முதல் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியுள்ளனர்.  தமது குழுவினுடைய சம்பியன்களாக திகழும் யாழ் மத்திய கல்லூரி அணியினர் இவ்வருடம் பிரிவு இரண்டிற்கு முன்னேறுவதிலும் தமது கவனத்தினை செலுத்தி வருகின்றனர்.

இந்த பருவகாலத்தில் மத்திய கல்லூரி பங்கெடுத்திருக்கின்ற 5 நட்பு ரீதியிலான போட்டிகளில், ஒன்றில் வெற்றி பெற்றுள்ளதுடன், 2 போட்டிகளை  சமநிலையில் நிறைவுசெய்துள்ள அதேவேளை, 2 போட்டிகள் மழை காரணமாக  முடிவின்றியும் நிறைவு பெற்றுள்ளன. புற்தரை ஆடுதளத்தில் (turf  pitch) இடம்பெற்ற கண்டி புனித அந்தோனியார் கல்லூரியுடனான போட்டியினை சமநிலையில் நிறைவுசெய்துள்ளனர்.

Photos: Jaffna Central College Cricket Team 2018 Preview

Photos of Jaffna Central College Cricket Team 2018

இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இருப்பதால், அதற்கான தயார் படுத்தலிற்காக 3 போட்டிகளில் பங்கெடுத்திருக்கின்ற இவ்வணியினர் அவற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் centralites கழக அணியுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்துள்ளனர்.  

பருவக்காலத்தின் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் சமமான பெறுதியினை வெளிப்படுத்தி வருகின்றனர் யாழ் மத்திய கல்லூரி அணியினர். இவ்வருடம் பெரும் சமரினை மாத்திரமின்றி, பிரிவு 3 கிண்ணத்தினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மத்தியின் மைந்தர்கள்.

யாழ் மத்தியின் இந்த பருவகால போட்டி முடிவுகள்

போட்டி இன்னிங்ஸ் வெற்றி வெற்றி முதல் இன்னிங்ஸ் வெற்றி முடிவற்றது இன்னிங்ஸ் தோல்வி தோல்வி முதல் இன்னிங்ஸ் தோல்வி
11 02 02 03 02 00 00 02

 

அவதானிக்க வேண்டியவர்கள்

கடந்த வருட பெரும் சமரில் மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பலம் சேர்த்த 4 ஆம் வருட அனுபவ வீரரான சிவலிங்கம் தசோபன் மத்திய கல்லூரி அணியினை இம்முறை தலைமை தாங்குகின்றார். இவர் கடந்த வருடம் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

உபாதை காரணமாக சில போட்டிகளில் ஓய்விலிருந்தபோதும், தசோபன் கண்டி அந்தோனியார் கல்லூரி, அக்குறனை அஸ்ஹர் கல்லூரி அணிகளுக்கெதிரான சதங்கள் உள்ளடங்கலாக இந்த பருவகாலத்தில் 500ற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சிலும் 50 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

19 வயதிற்குட்பட்ட வடமாகாண அணியில் அங்கம்வகித்திருந்த, ஓர்   அதிரடி ஆட்டக்காரரான ஸ்ரீஸ்கந்தராஜா கௌதமன் இப்பருவகாலத்திற்கான அணியின் உப தலைவராக செயற்பட்டு வருகின்றார். இவரும் இந்த பருவகாலத்தில் 3 அரைச்சதங்களை பதிவுசெய்திருக்கின்றார்.

அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மதுசன் இம்முறை 45 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், இந்த பருவகாலத்தில் மத்திய கல்லூரியின் மத்திய வரிசை துடுப்பாடத்தில் முக்கிய வீரராகவும் விளங்குகின்றார். இதற்கு சான்றாக ஒரு சதம் மற்றும் 5 அரைச் சதங்களினை பெற்றிருக்கின்றார். இவர் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியில் சிறந்த பந்துவீச்சு பெறுதிகளினை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்தியின் பந்துவீச்சு துறையினை தலைமை தாங்குகின்றார் சுழற்பந்துவீச்சாளர் துஷாந்தன். ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்திற்கெதிரான 10  விக்கெட்டுக்களினை சிறப்பு பெறுதியாகக்கொண்டு, பருவகாலத்தில் 65 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.  

இரண்டாவது வருட சகலதுறை வீரர்களான இயலரசன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் இந்தவருடம் எதிர்பார்ப்பிற்குரிய இளைய வீரர்கள். இயலரசன் நிலைமையை அறிந்து நிதானமாக துடுப்பெடுத்தாடக்கூடியவர். அதேவேளை, ஜெயதர்சன் அல் அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக சதம் ஒன்றினையும் பதிவுசெய்துள்ளார்.  

மத்திய கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட இணையாக புதுமுக வீரர்களான வியஸ்காந்த் மற்றும் மிஷன் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களுள் நிஷான் ஒரு சதம், 3 அரைச் சதங்களை இந்த பருவகாலத்தில் பதிவுசெய்துள்ளார்.

இவர்களுக்கு மேலதிகமாக வேகப்பந்து வீச்சினை பலப்படுத்த மதுஷனுடன் இணைகின்றார் சுஜன்.

மத்திய கல்லூரி அணி வீரர்களின் இந்த பருவகால பெறுதிகளினை அவதானிக்கையில் சிரேஷ்ட வீரர்கள் மட்டுமன்றி, புதுமுக வீரர்களும் பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என முத்துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அத்தனை வீரர்களும் ஒருங்கே தமது அணிக்காக சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்தி, சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அழுத்தத்தினை வழங்கும் பட்சத்தில் போட்டியினை தம்வசப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

2001ஆம் ஆண்டில் மத்திய கல்லூரியில் இணைந்த சுரேஷ்மோகன் அவர்கள், சிரேஷ்ட அணியினை 2005ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகின்றார்.  

அவர் கடமையேற்று, முதல் இரண்டு வருடங்கள் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பின்னர் 2007 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் மத்திய கல்லூரி வடக்கின் பெரும் சமரில் வெற்றிபெற்றுள்ளது. இது வடக்கின் பெரும் சமர் வரலாற்றில் மத்திய கல்லூரி பெற்ற தொடர்ச்சியான நீண்ட வெற்றியாகும். அதன் பின்னரான 6 வருடங்களில் 3 சமநிலை முடிவுகளை இவர் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 3 போட்டிகளில் அணி தோல்வியையும் சந்தித்துள்ளது.  

7 ஒருநாள் போட்டிகளினையும் இவர் வென்று கொடுத்திருக்கின்றார். மத்திய கல்லூரியின் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளர்களுள் இவரும் ஒருவர் என்பதில் எதுவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

இவர் இவ்வருட அணிகுறித்து தெரிவிக்கையில்தொடர் வெற்றிபெற்ற காலங்களில் தமக்கு பெரும்பலமாகவிருந்த வேகப்பந்துவீச்சினை அண்மைக் காலங்களில் அணியினுள் உள்ளடக்க முடியாமை பெரும் குறையாக இருந்தது. ஆனால் இம்முறை அணியில் அக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இம்முறை மிகவும் சவாலான ஒரு போட்டியினை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்என அவர் தெரிவித்திருந்தார்.

இறுதியாக,  

இரு அணிகளினதும் பந்து வீச்சு பலமான நிலையில் இருக்கின்ற அதேவேளை, துடுப்பாட்டம் தளும்பல் நிலையிலேயே இருக்கின்றது. ஒரு புறம் அனுபவ வீரர்களினை முதுகெலும்பாகக்கொண்ட அதிக எண்ணிக்கையிலான புதுமுக வீரர்களை உள்ளடக்கிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினரும், மறுபுறம் அதிக எண்ணிக்கையிலான இறுதிவருட வீரர்களை உள்ளடக்கி இருக்கின்ற அணியாக மத்திய கல்லூரி அணியினரும் திகழ்கின்றனர்.

இரு அணிகளினதும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதனால், போட்டியின் போக்கினை தீர்மானிப்பவர்களாக இரு அணிகளின் துடுப்படட வீரர்களே திகழப்போகின்றனர்.

புதுமுக வீரர்கள் அதிகளவாக காணப்படுகின்றதால், அவர்கள் பெரும்திரளான ரசிகர்கள் மத்தியிலான போட்டியினை எதிர்கொள்ளப்போகின்ற விதம் அணியின் சாதக பாதகங்களினை தீர்மானிக்கும்.

எதிர்வரும் 8 ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள 112ஆவது வடக்கின் பெரும் போரினை Thepapare.com ஊடக உலகம் பூராகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

போட்டி தொடர்பான புகைப்படங்கள், போட்டி அறிக்கைகள் மற்றும் புள்ளி விபரங்களிற்கு தொடர்ந்தும் Thepapare.com உடன் இணைந்திருங்கள்.