ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் வீரர்கள்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

5081
Northern malinga

இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் பேசும் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இதன்படி, மட்டக்களப்பைச் சேர்ந்த ரத்னராஜ் தேனுரதன், கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் மற்றும் கொழும்பில் இருந்து டெஹான் ஷாப்டர் ஆகிய மூன்று வீரர்களும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

>> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை

அத்துடன், இந்த வீரர்கள் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக செயற்படுவார்கள் என ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் தற்போது ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளதுடன், ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் சிறந்த முகாமைத்துவம் மற்றும் திறமையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி விளங்குகிறது

இதனிடையே, பதினான்கு உள்நாட்டு வீரர்களும், ஆறு சர்வதேச வீரர்களும் இடம்பெற்றுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில், தற்போது புதிதாக மூன்று தமிழ் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் பங்கேற்புடன் அண்மையில் நிறைவுக்கு வந்த இராணுவ தளபதி T20  லீக் தொடரில் களத்தடுப்பில் அபாரமாக செயற்பட்டு அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரர் ரட்னராஜா தேனுரதன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் முதல்தடவையாக சேர்க்கப்பட்டுள்ளார்

வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர், குறித்த தொடரில் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதினையும் தட்டிச் சென்றார்.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதல்முறையாக தேசிய மட்டத்தில் முன்னணி அணியொன்றுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்றழைக்ப்படுகின்ற இவர், தனது கிராமத்தில் இடம்பெறுகின்ற மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்

இதன்காரணமாக இலங்கை தேர்வுக்குழுவின் அப்போதைய தலைவராக இருந்த சனத் ஜயசூரியவின் அழைப்பின் பேரில் அவ்வப்போது இலங்கை வீரர்களுக்காக இடம்பெற்ற ஒருசில வலைப்பயிற்சிகளில் கலந்துகொண்டார்.

எனினும், அவரால் தேசிய ரீதியில் எந்தவொரு கழகத்துக்காவும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கிவில்லை

எனவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக விஜயராஜ் இடம்பெற்றாலும், அந்த அணிக்காக ஒரு போட்டியிலாவது விளையாடி தனது திறமையை முழு உலகிற்கும் காண்பிக்கும் நோக்கத்துடன் உள்ளார். 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் புதிதாக இணைக்கப்பட்ட அடுத்த வீரராக கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரியின் முன்னாள் வீரரான டெஹான் ஷாப்டர் உள்ளார். இவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சன்ந்ரா ஷாப்டரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலின கண்டம்பியின் பயிற்றுவிப்பின் கீழ் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் களமிறங்கவுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தவைராக திஸர பெரேரா செயற்படவுள்ளார்.

முன்னதாக, இந்த அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி, வட மாகாண 19 வயதுக்குட்பட்ட அணி மற்றும் யாழ். மாவட்ட 19 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வலதுகை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வியாஸ்காந்த், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

இந்த நிலையில், தன்னை ஜப்னா அணியின் உத்தேச குழாத்தில் இடம்பெறச் செய்தமை தொடர்பில் வியாஸ்காந்த் கருத்து தெரிவிக்கையில், ”இம்முறை லங்கா ப்ரிமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி பதினொருவர் அணியில் விளையாடுகின்ற உத்தேச குழாத்தில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். 

எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு போட்டியில் விளையாட கிடைத்தால் நிச்சயமாக அணியின் வெற்றிக்காக எனது முழுமையான பங்களிப்பினை வழங்குவேன்” என தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி பதினொருவர் வீரர்களுக்கான உத்தேச குழாத்திலும் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் மேலதிக வீரர்களாக யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்

எனவே, இந்த மூன்று வீரர்களும், அண்மையில் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்டதுடன், தற்போது ஹம்பாந்தோட்டையில் அணி வீரர்களுடன் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<