கடந்த ஆண்டு T20 கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி T20 கிரிக்கெட் அணியில் இலங்கையின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆடவர் T20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இந்தியாவின் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் பில் சோல்ட்டும், நான்காம் இடத்தில் பாபர் அசாமும், ஐந்தாம் இடத்தில் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து சகலதுறை வீரர்களாக சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹஸரங்க ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு 20 T20I கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹஸரங்க, 38 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியிருந்தார். இதில் ஜிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற T20I போட்டியில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் அவர் பதிவு செய்தார்.
அதேபோல, ஐசிசி T20 பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 6ஆவது இடத்தையும் வனிந்து ஹஸரங்க தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் T20 அணி விபரம்
ரோஹித் சர்மா (தலைவர் – இந்தியா), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), பில் சோல்ட் (இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹஸரங்க (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<