கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இங்கிலாந்தைச் சேர்த்த 4 வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்து 3 வீரர்களும், நியூசிலாந்ததைச் சேர்ந்த 2 வீரர்களும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் இடம்பிடித்துள்ளன.
அந்தவகையில் ஐசிசி தேர்வு செய்துள்ள டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இந்திய அனியின் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்தின் பென் டக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹெரி ப்ரூக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
- அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
- அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர்
- ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு அமைய இந்தியாவின் சம்பியன்ஸ் கிண்ண ஜேர்சி
மேற்கொண்டு அணியின் சகலதுறை வீரர்கள் வரிசையில் இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ், அணியின் விக்கெட் காப்பாளராக இங்கிலாந்தின் ஜெமி ஸ்மித் மற்றொரு சகலதுறை வீரராக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் மெட் ஹென்றி மற்றும் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ், 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 8 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கும் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, ஐசிசி அறிவித்துள்ள 2024ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளில் இருந்து எந்தவொரு வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் அணி விபரம்
பாட் கம்மின்ஸ் (தலைவர், அவுஸ்திரேலியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), யஷஸ்வி ஜெய்ஸ்வா (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட், ஹெரி ப்ரூக், ஜெமி ஸ்மித் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), மெட் ஹென்றி (நியூசிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<