இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மான் கில், விஜய் சங்கருக்கு வாய்ப்பு

382

இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்குப் பதிலாக சகலதுறை வீரர் விஜய் சங்கர் மற்றும் இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் ஆகியோரை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, விஜய் சங்கர், அவுஸ்திரேலியத் தொடரில் எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இணைந்து விளையாடுவார், சுப்மான் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் இந்திய அணியில் இணைந்து கொள்வார்.

இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் சமீபத்தில் கோபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் குற்றப்பத்திரிகை அனுப்பினார். ஹர்திக் பாண்டியா உடனடியாக மன்னிப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பினார். கே.எல் ராகுல் கடிதம் அனுப்பினார்.

ஆனால் அவர்களது விளக்கம் நிர்வாகக் குழுவை திருப்திப்படுத்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என வினோத் ராய் பரிந்துரை செய்தார்.

விசாரணைகள் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா, ராகுல் இடைநீக்கம்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் விளைவாக விசாரணைகள் நடைபெற்றுக்…

இதையடுத்து, பாண்டியா, ராகுல் இருவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் குற்றப்பத்திரிகை அனுப்பியது. மேலும், உடனடியாக இருவரும் நாடு திரும்பவும் உத்தரவிடப்பட்டது.

இது இவ்வாறிருக்க, இவர்களுக்கு மாற்று வீரர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (12) இரவு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தமிழகத்தைச் சேர்ந்த சகலதுறை வீரர் விஜய் சங்கரும், கே.எல் ராகுலுக்குப் பதிலாக சுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் விஜய் சங்கர், எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலேயே இந்திய அணியில் இணைந்து கொள்வார்.

ஆனால், சுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிராக எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் இந்திய அணிக்கு முதன் முதலாக 19 வயதான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கிரி;க்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற சுப்மான் கில்,  10 இன்னிங்ஸில் 790 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 2 இரட்டைச் சதமும், 5 அரைச்சதங்களும் அடங்கும். அத்துடன், தமிழ்நாடு அணிக்கெதிரான போட்டியில் 268 ஓட்டங்களையும் அதிகபட்சமாகக் குவித்தார். மேலும், நியூசிலாந்துக்குச் சென்ற இந்திய அணியிலும் சுப்மான் கில் இடம்பெற்றிருந்தார்.

முதலாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச தொடர்..

கடந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து .பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கில்லை ரூ.1.80 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கொல்கத்தா அணியில் இடம்பெற்ற அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 57 ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தமிழக வீரர் விஜய் சங்கர் 2ஆவது தடவையாக இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி-20 தொடரில் அறிமுகமாகி விளையாடியிருந்தார்.

மேலும், இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், 3 போட்டிகளில் விளையாடி 188 ஓட்டங்களைக் குவித்தார். எனவே, தற்காலிகமாக அணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவதற்கு விஜய் சங்கரை பரிந்துரை செய்வதற்கு அந்நாட்டு தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<