விசாரணைகள் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா, ராகுல் இடைநீக்கம்

2
Image Courtesy - Zee News

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் விளைவாக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக ஹார்த்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் ஒருநாள் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிவூட் நடிகரும் திரைப்பட இயக்குனருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கொபி வித் கரண்’ (Coffee with Karan) நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற பாகத்தில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் மற்றும் சகலதுறை வீரரான ஹார்த்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

1980களில் பயன்படுத்திய ஜேர்சிக்கு மாறிய அவுஸ்திரேலியா

ஹார்த்திக் பாண்டியா பொதுவாக எல்லா விடயங்களையும் வெளிப்படையாக தெரிவிக்கும் பண்பை கொண்டவர். மைதானங்களிலும் கூட மிகவும் கேலித்தனமாக நடந்து கொள்பவர். அதே போன்று ராகுலும் இவருடன் சேர்ந்தால் இருவரும் குத்தாட்டம் போடுவார்கள்.

கடந்த 2018 ஐ.பி.எல் தொடரின் போது கூட போட்டி முடிவடைந்ததன் பின்னர் இரு அணிகளுக்காக விளையாடிய இருவரும் (மும்பை, பஞ்சாப்) தங்களது அணிகளின் ஆடையை (ஜேர்ஸி) மாற்றி வித்தியாசமான முறையில் செயற்பட்டிருந்தனர்.

கடந்த ஞாயிறு நடைபெற்ற குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானது ஒரு பொழுதுபோக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரினால் சில கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டது. அதற்கு இருவரும் மனம் திறந்து நகைச்சுவையாக பதிலளித்தனர்.

இந்நிலையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இருவரும் கூச்சமில்லாமல் அவர்களது வாழ்க்கையில் இடம்பெற்ற அந்தரங்க விடயங்களையும், பெண்கள் தொடர்பில் பாலியல் ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்.

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் எதிராக பாரியளவிலான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்கள் மூலமாக இருவரும் பலவாறான விமர்சனங்களை எதிர்கொண்டனர். ராகுலை விட பாண்டியாவுக்கே அதிகளவிலான விமர்சனங்கள் எழுந்தன.

இதன் பின்னர் ஹார்த்திக் பாண்டியா டுவிட்டர் மூலமாக அனைவரிடமும் மன்னிப்பு கோரினார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ”அந்த நிகழ்ச்சியின் தன்மையினாலேயே அவ்வாறு பேசியிருந்தேன். யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதற்காகவோ நான் பேசவில்லை. மேலும் என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் அனைவரும் கடுமையாக கொதித்தெழுந்ததன் காரணமாக நேற்று முன்தினம் (09) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது (BCCI) வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இதனை அடுத்து “தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முயற்சிக்கின்றேன்” என ஹார்த்திக் பாண்டியா மின்னஞ்சல் மூலமாக பதில் அளித்திருந்தார். கே.எல் ராகுல் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் பின் T20I தொடரையும் இழந்த இலங்கை

இந்நிலையில் இவர்களது பதிலில் திருப்தி இல்லையென கிரிக்கெட் சபை நிர்வாக குழுவின் தலைவரான வினோத் ராய் இன்று (11) தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதனால் இருவர் மீதும் குறித்த சபை அதிருப்தியில் உள்ளது. குறைந்த பட்சம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபையின் சட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதனால் இவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாளை (12) ஆரம்பமாகவுள்ள இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகள் முடிவடையாவிட்டால் இருவரும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்.

இவர்களது விடயம் தொடர்பில் BCCI இன் பொருளாளரான அனிருத் சௌத்ரி அந்தரங்க விடயங்கள் தொடர்பில் பேசிய இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதித்தது போன்று இவர்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென காரசாரமாக பேசுயுள்ளார். இவர்களுக்கு வழங்கும் தண்டனை ஏனையவர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிட்னியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் வினவப்பட்ட போது,

”இது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இந்த விடயத்தில் கிரிக்கெட் சபையின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். இது குறித்து இருவரிடமும் தெளிவாக பேசப்பட்டு விட்டது. கிரிக்கெட் சபையின் முடிவுக்கு பின்னர் யாரை அணியில் இணைத்துக்கொள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.

எனவே முழுமையான விசாரணைகளின் பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்படப்போகின்றது என்பதை பொருத்திருந்து தான் அவதானிக்க வேண்டும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க