உயரம் பாய்தலில் உஷான் பெரேரா புதிய இலங்கை சாதனை!

210
A&M-Commerce Lion Athletics/ Josh Manck

அமெரிக்காவின் டெக்சாஸில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இலங்கையைச் சேர்ந்த உஷான் திவங்க பெரேரா, இலங்கையின் பதினேழு வருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்தார்.

நேற்று (27) நடைபெற்ற டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் களமிறங்கிய அவர், A பிரிவு உயரம் பாய்தலில் பங்குகொண்டு 2.28 மீற்றர் உயரதத்தைத் தாவி சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் இலங்கையின் உயரம் பாய்தல் தேசிய சம்பியனான மஞ்சுள குமார, 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் 2005 தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் 2.27 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய சாதனையை 17 வருடங்களுக்குப் பிறகு உஷான் பெரேராவினால் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

அமெரிக்காவில் வைத்து இலங்கை சாதனை படைத்த உஷான்

அத்துடன், ஷான் பெரேராவினால் தாவிய 2.28 மீற்றர் உயரமானது இந்த வருடத்தில் உயரம் பாய்தல் வீரரொருவரினால் தாவப்பட்ட உலகின் அதிசிறந்த 3ஆவது உயரமாகவும் இடம்பிடித்தது.

டெக்சாஸில் உள்ள ANM வணிக பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியுடன். உயரம் பாய்தலுக்கான பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற 22 வயதான ஷான் பெரேரா, கடந்த மாதம் நடைபெற்ற Lone Star Conference உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்டு 2.25 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றதுடன், உள்ளக உயரம் பாய்தலில் புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இதனிடையே, கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான (டிவிஷன்-2 ) உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 2.26 மீற்றர் உயரத்தைத் தாவி இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்

உள்ளக உயரம் பாய்தலில் தேசிய சாதனை படைத்த உஷான் பெரேரா

இதன்மூலம் இலங்கையின் உயரம் பாய்தல் சம்பியனான மஞ்சுள குமாரவினால் 2016இல் டோஹாவில் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் நிலைநாட்டப்பட்ட 2.24 மீற்றர் சாதனையை ஐந்து வருடங்களுக்குப் பிறகு உஷhன் பெரேரா முறியடித்தார்.

இதன்படி, அமெரிக்காவின் சுவட்டு, மைதான நிகழ்ச்சிகள் மற்றும் நகர்வல ஓட்டங்களின் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற உள்ளக மெய்வல்லுனர் இரண்டாம் டிவிஷனின் மைதான நிகழ்ச்சிகளுக்கான சிறந்த வீரர் விருதினை ஷான் பெரேரா தட்டிச் சென்றார்.

இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் பாய்தல் நிகழ்ச்சிக்கு தகுதிபெறுவதற்கான அடைவுமட்டம் 2.33 மீற்றர் ஆகும். இதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜுன் மாதம் 29ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிறந்த வீரருக்கான விருதை வென்ற உஷான்

இதனால், அடுத்த வரும் மாதங்களில் ஷான் பெரேரா, ஒலிம்பிக் அடைவுட்டத்தினைப் பூர்த்தி செய்து டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்

எனவே, இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் அண்மைக்காலமாக சாதனைகளை படைத்து வருகின்ற இளம் உயரம் பாய்தல் வீரரான ஷான் பெரேராவுக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com  வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<