அமெரிக்காவில் சிறந்த வீரருக்கான விருதை வென்ற உஷான்

158
A&M-Commerce Lion Athletics

அமெரிக்காவின் சுவட்டு, மைதான நிகழ்ச்சிகள் மற்றும் நகர்வல ஓட்டங்களின் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற உள்ளக மெய்வல்லுனர் இரண்டாம் டிவிஷனின் மைதான நிகழ்ச்சிகளுக்கான சிறந்த வீரர் விருதினை (Division II Indoor National Men’s Field Athlete of the Year)  இலங்கையின் இளம் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா தட்டிச் சென்றார்.

இவ்வருட ஆரம்பம் முதல் அமெரிக்காவின் பல்கலைக்கழங்களுக்கிடையிலான உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் உஷான் திவங்க வெளிப்படுத்தியிருந்த திறமைகளை அடிப்படையாக வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உள்ளக உயரம் பாய்தலில் தேசிய சாதனை படைத்த உஷான் பெரேரா

இதன்படி, இலங்கையின் மெய்வல்லுனர் வீரர் ஒருவருக்கு அமெரிக்காவில் வைத்து கிடைத்த முதலாவது சர்வதேச விருதாக இது வரலாற்றில் இடம்பிடித்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கையின் இளம் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, கடந்த பெப்ரவரி மாதம் Lone Star Conference  உள்ளக மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.25 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றதுடன், உள்ளக உயரம் பாய்தலில் புதிய இலங்கை சாதனையும் படைத்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான (2ஆவது பிரிவு) உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட உஷான், 2.26 மீற்றர் உயரத்தைத் தாவி இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

2021 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு

அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் வரலாற்றில் உயரம் பாய்தலில் பதிவாகிய இரண்டாவது அதிசிறந்த உயரமாகவும் இது இடம்பிடித்தது.

முன்னதாக, அமெரிக்காவின் மத்திய பிரிவுக்கான வருடத்தின் சிறந்த மைதான நிகழ்ச்சிகளுக்கான வீரர் விருதையும், பல்கலைக்கழகத்தின் வருடத்தின் பிரபல்யமிக்க வீரருக்கான விருதையும் உஷான் பெரேரா தட்டிச் சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, உயரம் பாய்தல் வீரர்களுக்கான ஆடவர் உலக தரவரிசையில் 20ஆவது இடத்தையும், ஆசிய வீரர்களுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தையும் உஷான் பெரேரா பெற்றுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<