விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு அனுசரணை வழங்க முன்வருகின்ற, அவர்களது விளையாட்டு வாழ்க்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருகின்ற இந்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தினால் வரி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டம்

ஜப்பானின் கிபு நகரில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் 03 தங்கப் பதக்கங்களையும், 04 வெள்ளிப் பதக்கங்களையும், 02 வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தினர்.

இந்த நிலையில், குறித்த விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகள் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்காக தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். அத்துடன், விளையாட்டு துறையிலுள்ளவர்களை வலுவூட்டி அவர்களின் எதிர்கால பயணத்திற்கும் விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போசாக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் அனுசரணையை வழங்குவதற்கு முன்வந்துள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, விளையாட்டு துறைக்கும், திறமையான வீரர்களுக்கும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அனுசரணைக்கேற்ப வரி நிவாரணங்களை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அமைச்சரவையுடன் கலந்துரையாடி அந்த முன்மொழிவை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதேநேரம், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வெற்றிகொள்வதே முக்கிய நோக்கமாகும். இந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதன் மூலம் மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நாட்டில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல தேசிய கல்லூரியின் எஸ்.அருண தர்ஷன, குருநாகல் மலியதேவ கல்லூரியின் பசிந்து கொடிகார, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் ரவிஷ்க இந்திரஜித், கொழும்பு நாலந்த கல்லூரியின் பபசர நிக்கு, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா, வளல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் டில்ஷி குமாரசிங்க, கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் அமாஷா டி சில்வா, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் சச்சினி தாரக்கா திவ்வியாஞ்சலி, நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலையின் ருமேஷி இசாரா அத்திடிய ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்

இதேநேரம், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள், தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தேசிய மெய்வல்லுனர் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பெற்றோர், பாடசாலை அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<