மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக விளையாடும் உசேன் போல்ட்

674
Image courtesy - fourfourtwo.com

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றவருமான ஜமைக்காவின் உசேன் போல்ட் மிக விரைவில் கால்பந்து விளையாட்டில் களமிறங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழகமான மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் தீவிர ரசிகனான போல்ட், அக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  

ஸ்பெய்ன் ஜாம்பவான்களின் மிகப் பெரிய மோதலில் ரியல் மெட்ரிட் முன்னிலையில்

உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் UEFA ஸ்பனிஷ்..

இந்நிலையில், விளையாட்டு உலகின் முன்னாள் ஜாம்பவான்களின் பங்குபற்றலுடன் மென்சென்ஸ்டர் கழகத்துக்கும், பார்சிலோனா கழகத்துக்குக்கும் இடையில் இங்கிலாந்தின் ஓல்ட் ட்ரபெர்ட் மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள கழகங்களுக்கிடையிலான நட்பு ரீதியிலான பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் போல்ட் முதற்தடவையாக களமிறங்கவுள்ளார்.

உலக மெய்வல்லுனரில் 11 சம்பியன் பட்டங்களையும், ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களையும் வென்ற போல்ட், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரின் ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்டப் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

எனினும், குறித்த போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக இறுதி 100 மீற்றர் தூரத்தை ஓடிய நிலையில் கடைசி நேரத்தில் உபாதைக்குள்ளாகி போட்டியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதேபோல, முன்னதாக நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் 3ஆவது இடத்தைப் பெற்று அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

இதனையடுத்து உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரின் இறுதி நாளான்று போட்டியின் ஏற்பாட்டுக்குழுவினர் போல்ட்டுக்கு விசேட பிரியாவிடையை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்போது 2012 லண்டன் ஒலிம்பிக்கில் போல்ட் ஓடிய 7ஆவது சுவட்டின் மாதிரி புகைப்படமொன்று அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

எனினும், போட்டியின் பின்னர் இங்கிலாந்தின்பிரிட்டிஷ் டெய்லி” நாளிதழுக்கு போல்ட் வழங்கிய விசேட நேர்காணலில், உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டான கால்பந்தில் விளையாடுவதற்கு நான் மிகவும் ஆசையுடன் உள்ளேன். அதற்கான உடற்தகுதியும், திறமையும் என்னிடம் இருப்பதை நன்கு அறிவேன். எனினும், உலக மெய்வல்லுனர் போட்டிகளில் போது எனது பின் தொடையில் ஏற்பட்ட உபாதை பற்றி நான் கவலைப்படவில்லை” என தெரிவித்தார்.  

சோகத்தோடு விடைபெற்றார் போல்ட்

உலகின் மிக வேகமான வீரரான உசைன் போல்ட் பங்கேற்ற தனது கடைசி போட்டியில்…

அதேபோன்று, உலக மெய்வல்லனர் அரங்கில் ஓய்வு பெற்றதன் பிறகு நீங்கள் கிரிக்கெட் விளையாட்டு அல்லது கால்பந்தாட்டத்தை தெரிவு செய்வீர்களா? என லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு போல்ட் பதிலளிக்கையில், நான் கால்பந்து விளையாட்டைத்தான் தெரிவு செய்வேன்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போல்ட்டின் கடைசி போட்டிக்கு முன்னர், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது டுவிட்டார் தளத்தில் வெளியிட்ட பதிவு அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியருந்தது.

இதில் அவர், நீங்கள் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்றாவது ஒருநாள் கிரிக்கெட் விளையாட விரும்பினால் நான் இருக்கின்ற இடம் உங்களுக்கு நன்கு தெரியும்” என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், உசைன் போல்ட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அக்கழகத்தின் முகாமையாளரான ஜோஸ் மொரின்ஹோ அறிவித்திருந்ததாக மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் மத்திய வரிசை வீரர் போல் பொக்பா தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் அக்கழகம் இதுவரை வெளியிடவில்லை.

எனினும், உலக மெய்வல்லுனர் அரங்கின் நட்சத்திர வீரரான உசேன் போல்ட்டுக்கு கால்பந்து உலகின் மிகவும் பிரபலமான கழகத்துக்கு உடனே விளையாடும் எந்தவொரு அபிப்பிராயமும் இதுவரை கிடையாது என்றும், ஒருவேளை 2ஆம் பிரிவு கால்பந்து கழகங்களில் அவர் பெரும்பாலும் விளையாடலாம் எனவும் போல்ட்டின் முகாமையாளரான ரிக்கி சிம்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனவே, சுமார் 15 வருடங்களாக மெய்வல்லுனர் அரங்கில் தனக்கென்ற தனித்துவமான இடத்தைப் பெற்றுக்கொண்ட உசேன் போல்ட், விரைவில் கால்பந்து விளையாட்டில் களமிறங்கலாம் என்ற செய்தி கால்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.