பஞ்சாப்பை வீழ்த்தி புது வரலாறு படைத்த லன்னோ அணி

Indian Premier League 2023

503

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைக் குவித்தது.

இது இம்முறை IPL தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். அத்துடன், IPL வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக 2013இல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புனே வொரியர்ஸுக்கு எதிராக பெற்றுக்கொண்ட 263 ஓட்டங்கள் தான் IPL வரலாற்றில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும். தற்போது அதற்கடுத்த இடத்தைப் பிடித்து லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

லக்னோ அணியின் துடுப்பாட்டத்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களையும், கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ஓட்டங்ளையும், நிகோலஸ் பூரன் 19 பந்துகளில் 45 ஓட்டங்களையும், ஆயுஷ் பதோனி 24 பந்துகளில் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் கங்கிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இதையடுத்து 258 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அணித்தலைவர் ஷிகர் தவான் ஒரு ஓட்டத்துடனும், பிரப்சிம்ரன் சிங் 9 ஓட்டங்களுடனும் ஏமாற்றம் அளித்தனர். சிக்கந்தர் ராசா 36 ஓட்டங்களையும் லியெம் லிவிங்ஸ்டன் 23 ஓட்டங்களையும், சாம் கரண் 21 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா டெய்ட் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உட்பட 66 ஓட்டங்களைக் குவித்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ அணி, இம்முறை IPL தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

லக்னோ அணி சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<