உலகின் மிக வேகமான வீரரான உசைன் போல்ட் பங்கேற்ற தனது கடைசி போட்டியில் உபாதையுடன் பாதியிலேயே நின்றதை அடுத்து தனது தடகள வாழ்வில் இருந்து சோகத்துடன் விடைபெற்றார்.

லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் தொடரில் இலங்கை நேரப்படி இன்று (13) அதிகாலை நடைபெற்ற 4×100 அஞ்சல் ஓட்டப் போட்டியிலேயே போல்ட் உபாதைக்கு உள்ளானார். இதனால் ஜமைக்க அணிக்கு பதக்கம் பறிபோனது. அந்த போட்டியில் ஐக்கிய இராச்சிய அணி தங்கப் பதக்கம் வென்றது.

போட்டியில் ஜமைக்காவின் மூன்றாவது வீரராக தடியை பெற்ற போல்ட் பாதி வழியிலேயே தனது இடதுகாலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து ஓட முடியாமல் நின்றார். இதனைப் பார்த்த அரங்கில் இருந்த 60,000 ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

உபாதையுடன் போட்டியிட்ட நிமாலிக்கு கடைசி இடம் : வருணவுக்கு ஏமாற்றம்

உபாதையுடன் போட்டியிட்ட நிமாலிக்கு கடைசி இடம் : வருணவுக்கு ஏமாற்றம்

லண்டனில் நடைபெற்றுவருகின்ற உலக மெய்வல்லுனர் தொடரின் 7ஆம் நாளான நேற்றைய தினம்

போட்டியை 37.47 வினாடிகளில் முடித்த ஐக்கிய இராச்சிய அணி தங்கம் வென்றதோடு, ஜெஸ்டின் கெட்லின் தலைமையிலான அமெரிக்க அணி 0.05 வினாடிகளால் பின்தங்கி வெள்ளிப் பதக்கம் வென்றது. அதிர்ச்சி தந்த ஜப்பான் குறுந்தூர ஓட்ட வீரர்கள் 38.04 வினாடிகளில் போட்டியை முடித்து வெண்கலம் வென்றார்கள்.

கடந்த ஒரு தசாப்த காலமாக அசைக்க முடியாத வீரராக இருந்த 30 வயதான போல்ட் தான் ஓய்வுபெறும் போட்டியாகவே உலக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்றார். கடந்த வாரம் தனி நபராக தான் பங்கேற்ற கடைசி 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அவர் கெட்லினிடம் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

எனினும் போல்ட் பங்கேற்ற கடைசி ஓட்டப்போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப அவர் கடைசியாக பங்கேற்கும் அஞ்சல் ஓட்டப் போட்டிக்கான ஜமைக்க அணியில் 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் தங்கம் வென்ற ஒமர் மக்லியோட், ஜூலியன் போர்ட் மற்றும் யொஹான் பிலேக் ஆகியோர் உள்ளடங்கி இருந்தனர்.

போட்டி ஆரம்பித்து மூன்றாவது வீரர் தடியை எடுத்து வரும்போது ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஜமைக்க அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்தது. அரங்கு முழுவதிலும் இருந்து வந்த கூச்சலுக்கு மத்தியிலேயே போல்ட் போட்டியை முடிப்பதற்காக தடியைப் பெற்றார். எனினும் போல்ட் முன்னேற தடுமாற்றம் கண்டதை அடுத்து ஜப்பான் அந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி பதக்கம் ஒன்றை வென்றது.

இந்த முடிவின்படி 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைக்கு சொந்தக்காரரான போல்ட், எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் உட்பட 14 சர்வதேச பதக்கங்களுடன் தனது தடகள வாழ்வுக்கு விடை கொடுத்தார்.