ஸ்பெய்ன் ஜாம்பவான்களின் மிகப் பெரிய மோதலில் ரியல் மெட்ரிட் முன்னிலையில்  

696

உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் UEFA ஸ்பனிஷ் சுப்பர் கிண்ணப் போட்டியின் முதல் கட்டப் போட்டியில் பிரபல பார்சிலோனா அணியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம், மற்றுமொரு கட்டம் எஞ்சியிருக்கையில் முன்னிலை பெற்றுள்ளது.  

பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக்..

இந்த மோதலில் கடந்த பருவகாலத்திற்கான (2016/17) ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கத்தின் (UEFA) சம்பியனான ரியல் மெட்ரிட் (Real Madrid) மற்றும் கடந்த வருடத்தின் கொபா டில் ரெ சம்பியனான (Copa del rey) பார்சிலோனா அணிகள் சந்தித்தன. இந்தப் போட்டி பார்சிலோனா அணியின் மைதானமான கெம்ப் நோவில் (Camp nou) இடம்பெற்றது.

 பார்சிலோனா அணியில் இருந்த பிரபல வீரர் நெய்மர் Jr விலகியதைத் தொடர்ந்து ஸ்பானிய வீரர் டிலோபி அவருடைய இடத்தை நிரப்பினார். மேலும், ஸ்பெய்ன் நாட்டின் சிறந்த மத்திய கள வீரரும் பார்சிலோனா அணியின் தலைவருமான அன்ட்ரீஸ் இனியெஸ்டா இப்போட்டியில் விளையாடியது அவ்வணிக்கு மட்டுமன்றி அவ்வணியின் ரசிகர்களுக்கும் பெரும் உட்சாகத்தை அளித்துள்ளது.

அதேபோல், கடந்த வருடத்திற்கான UEFAயின் சிறந்த மத்திய கள வீரராக தெரிவு செய்யப்பட்ட குரோடியா நாட்டைச் சேர்ந்த லூகா மொட்ரிக்கு விளையாட தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய இடத்தை அவருடைய நாட்டைச் சேர்ந்த மெடியோ குவாசிக் நிரப்பினார்.

அத்துடன் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ இப் போட்டியின் இறுதிப் பாதியிலே விளையாடினார்

போட்டியின் ஆரம்பத்திலே இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தை வழங்கின. போட்டியின் 10வது நிமிடத்தில் இனியெஸ்டா வழங்கிய நீண்ட தூரப் பந்து பரிமாற்றத்தை மிக லாவகமாக பெற்ற சுவாரெஸ் கோலை நோக்கி உதைந்த போதும், அதனை கோல் காப்பாளர் நவாஸ் லாவகமாக பற்றிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 17வது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து டொனி குரோஸ் வழங்கிய பந்தை பெற்ற இஸ்கோ பார்சிலோனாவின் பின்கள வீரர்களை கடந்து சென்று கோலை நோக்கி உதைந்த போதும் பந்து கம்பந்திற்கு சற்று வெளியே சென்றது.

தொடர்ந்து மெஸ்ஸி மத்திய களத்தில் பெற முயன்ற பந்தை தகாத முறையில் தடுத்ததற்காக கெஸிமீறீயோ போட்டியின் முதலாவது மஞ்சள் அட்டையை 20வது நிமிடத்தில் பெற்றுக்கொண்டர். தொடர்ந்து போட்டியின் 23வது நிமிடத்திலே பெற்றுக்கொண்ட ப்ரீ கிக்கை, மெஸ்ஸியால் கோலை நோக்கி செலுத்த முடியாமல் போனது.

பின்னர் கிடைத்த கோணர் பந்தின்போது பந்தின்மீது கையை செலுத்தியதிற்காக பார்சிலோனாவின் பின்கள வீரர் பீகே, போட்டியின் 26வது நிமிடத்தில் மஞ்சள் அட்டையை பெற்றார்.

தொடர்ந்து இரு அணிகளும் போட்டியின் வேகத்தை அதிகரித்ததை காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் 36வது நிமிடத்தில் மார்சேலோவிடமிருந்து பெற்றுக்கொண்ட பந்தை இஸ்கோ பார்சிலோனாவின் எல்லையில் வைத்து பெனால்டி எல்லைக்குள் வழங்கினார். அந்தப் பந்தை, பேய்ல் கோலை நோக்கி வேகமாக உதைந்தார். எனினும், அதனை கோல் காப்பாளர் டர் ஸ்டேதன் வெளியே தட்டி விட்டார்.

தொடர்ந்து 40வது நிமிடத்தில் பேய்ல் மற்றும் கர்வகால் முறை தவறாக பந்தை பெற முயற்சித்தமைக்காக மஞ்சள் அட்டையை பெற்றனர். 44வது நிமிடத்தில் கர்வகால் பெனால்டி எல்லையினுள் வழங்கிய பந்கை பேய்ல் தலையினால் முட்டி கோலை நோக்கி செலுத்திய போதும் பந்து வேறு திசைக்கு சென்றது.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் 0-0 பார்சிலோனா கால்பந்துக் கழகம்  

இரண்டாவது பாதி ஆரம்பித்ததும் 49வது நிமிடத்தில் கோணரிலிருந்து தடுக்கப்பட்டு மத்திய களத்திலிருந்து பந்தைப் பெற்ற ரியல் மெட்ரிட் வீரர் இஸ்கோ, மார்ஸலோவிடம் வழங்க அவர் அப்பந்தை பெனால்டி எல்லைக்குள் அனுப்பினர். அதன்போது பந்து பார்சிலோனா பின்கள வீரர் பீகேயின் காலில் பட்டு கோலாக மாறியது. எனவே, ஒவ்ன் கோல் முறையில ரியல் மெட்ரிட் அணிக்கு முதல் கோல் கிடைக்கப்பெற்றது.

தொடர்நது இரு அணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக கோலைப் பெற முயற்சித்த வண்ணமே இருந்தனர். 56வது நிமிடத்தில் பார்சிலோனாவின் புஸ்கேட்ஸ் மஞ்சள் அட்டையை பெற்றார். பின்னர் ரியல் மெட்ரிடின் நட்சத்திர வீரர் பென்ஸமாவிற்காக, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளே நுழைந்தவுடன் போட்டி மேலும் விறுவிறுப்பானது.

இரு அணியினரும் தொடர்ந்து பல வாய்ப்புக்களை பெறுவதும், பின்னர் அவற்றை முறையாக உபயோகிக்கத் தவறிய வண்ணமே இருந்தனர். 66வது நிமிடத்தில் கோவஸிட்கு பதிலாக அஸன்ஸியோவும் இனியஸ்டாவிட்குப் பதிலாக ஸேஜியோ ரோபேடோவும் களமிறங்கினர்.

73வது நிமிடத்தில் புஸ்கேட்ஸிற்கு கிடைத்த இலகுவான வாய்ப்பை அவர் தவரவிட்டார். 75வது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் கோல் காப்பாளர் நவாஸ் மஞ்சள் அட்டையை பெற்றதன் மூலம் வழங்கப்பட்ட பெனால்டியை சிறந்த முறையில் உபயோகித்து மெஸ்ஸி கோலாக்கினார்.

தொடர்ந்து 80வது நிமிடத்தில் ரொனால்டோ கோலை நோக்கி உதைந்த பந்தின் மூலம் பெற்ற கோலினால் போட்டி மீண்டும் ரியல் மெட்ரிட் பக்கம் வலுவானது. அதேவேளை, போட்டியின் 82வது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று அருகாமையில் பார்சிலோனாவின் பின்கள வீரரால் தள்ளப்பட்டு தான் விழுந்ததாக கூறிய ரோனால்டோ, இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் ஏற்கனவே, தான் பெற்ற கோலின் பின் தனது மேலாடையை (T-shirt) மைதானத்தில் வைத்து கழற்றியதற்காக மஞ்சள் அட்டையை பெற்றிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இறுதிக் கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ரியல் மெட்ரிட் அணி 89வது நிமிடத்தில் தமக்கான மூன்றாவது கோலையும் பெற்றது.  இம்முறை வாஸ்கஸ் வழங்கிய பந்தை அஸன்ஸியோ பெனால்டி பெட்டியிக்கு வெளியே இருந்து கோலினுள் செலுத்தியதன் மூலம் அவ்வணி தனது வெற்றியை உறுதி செய்தது.

எனவெ, எதிரணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இந்த முதல் கட்டப் போட்டியில் இரண்டு மேலதிக கோல்களினால் ரியல் மெட்ரிட் அணிவெற்றி பெற்று, முன்னிலையில் உள்ளது.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் 3-1 பார்சிலோனா கால்பந்துக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் – பீகே (ஒவ்ன் கோல்) 49’, ரொனால்டோ 80’, அஸன்ஸியோ 89’

பார்சிலோனா கால்பந்துக் கழகம் – லியொனல் மெஸ்ஸி 75’

மஞ்சள் அட்டை

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம்: கேஸிமீறீயோ 20’, பேய்ல் 40’, கர்வகால் 40’, நவாஸ் 75’, ரொனால்டோ 81’

பார்சிலோனா கால்பந்துக் கழகம்: பீகே 26, புஸ்கேட்ஸ் 56’

சிவப்பு அட்டை

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம்: ரொனால்டோ 82’