அரையிறுதிக்கான பிரகாச வாய்ப்புடன் பார்சிலோனா, லிவர்பூல் அணிகள்

793
@Getty Images

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல்கட்ட காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன.

இதில் ரோமா கழகத்துடனான போட்டியில் பார்சிலோனா இரண்டு ஓன் கோல்களின் உதவியுடன் வெற்றியை உறுதி செய்ததோடு மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல் முதல் 31 நிமிடங்களுக்குள்ளேயே கோல் மழை பொழிந்து வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது.

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல்..

சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி இரண்டு முதல் கட்ட காலிறுதி போட்டிகளாகவே நேற்று (04) இரவு இந்த போட்டிகள் நடைபெற்றன.

பார்சிலோனா எதிர் ரோமா

தனது சொந்த மைதானத்தில் நடந்த முதல் கட்ட காலிறுதியில் ஸ்பெயின் கழகமான பார்சிலோனா அணி, போட்டி ஆரம்பித்தது தொடக்கம் எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட ஆரம்பித்தது. 5, 7ஆவது நிமிடங்களில் லியோனல் மெஸ்ஸி மற்றும் லுயிஸ் சுவாரஸ் இருவரும் ஓப் சைட் செல்ல 11ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி இடது காலால் உதைத்த பந்தை ரோமா பின்கள வீரர்களால் தடுக்க முடிந்தது.

எனினும், கடும் நெருக்கடியை சந்தித்த இத்தாலி கழகமான ரோமா அணி 38ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ஓன் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தது. கோல் கம்பத்திற்கு அருகில் லியோனல் மெஸ்ஸியிடம் பந்து செல்லாமல் இருக்க டானியல் டி ரொஸ்ஸி பந்தை தட்டிவிட்டபோது, அது தமது சொந்த வலைக்குள் புகுந்தது. இதன்மூலம் பார்சிலோன அணியால் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற முடிந்தது.

ஒப்பீட்டளவில் ரோமா பலவீனமான அணி ஒன்றாகவே காலிறுதியில் களமிறங்கியது. எனினும் முதல் பாதி முடியும் தருவாயில் பார்சிலோனா வீரர் சாமுவேல் உம்டிடி பெனால்டி எல்லைக்கு அருகில் இழைத்த தவறு காரணமாக ரோமா அணிக்கு நடுவர் பிரீ கிக் ஒன்றை வழங்கினார். எனினும் அந்த வாய்ப்பை ரோமா அணி கோலாக மாற்ற தவறியது.  

முதல் பாதி: பார்சிலோனா 1 – 0 ரோமா

இந்நிலையில் இரண்டாவது பாதியிலும் பார்சிலோனாவின் ஆதிக்கம் தொடர ரோமா அணி பார்சிலோனாவுக்காக மற்றொரு ஓன் கோலை பெற்றுக் கொடுத்தது. கோணர் திசையிலிருந்து வந்த பந்தை பார்சிலோனா அணி கோலாக்க முயற்சித்தபோது கொஸ்டாஸ் மனோலாஸ் அதை தடுக்க முயன்றார். அதுவும் ஓன் கோலாக மாறியது.

இதன்மூலம் பார்சிலோனா அணி இரண்டு ஓன் கோல்களை பெற்று போட்டியில் முன்னிலை பெற்றது. மனோலாஸின் ஓன் கோல் பார்சிலோனா அணி சம்பியன்ஸ் லீக் தொடரில் பெறும் 13ஆவது ஓன் கோலாகும் அந்த அணியை விடவும் ரியல் மெட்ரிட் (15) மாத்திரமே இந்த தொடரில் அதிக ஓன் கோல் பெற்ற அணியாகும்.  

இந்நிலையில் 59ஆவது நிமிடத்தில் கரார்ட் பிகு, பார்சிலோனா அணிக்காக முதலாவது சொந்த கோலைப் பெற்றுக் கொடுத்தார். கோல் கம்பத்தின் நடுவில் மிக நெருக்கமாக இருந்து வலது காலால் உதைந்து அவர் அந்த கோலை பெற்றார்.

எனினும் போட்டி கடைசி கட்டத்தை நெருங்கும்போது எடின் செகோ ரோமா அணிக்காக ஆறுதல் கோல் ஒன்றை போட்டார். ஆறு நமிடங்கள் கழித்து பார்சிலோனா நட்சத்திர வீரர் சுவாரஸ் அபார கோல் ஒன்றை போட்டு தனது அணியை 4-1 என முன்னிலை பெறச் செய்தார்.  

சுவாரஸ் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலான காலத்தில் சம்பியன்ஸ் லீக்கில் போட்ட முதல் கோல் இதுவாகும்.  எனினும் அவர் லாலிகா தொடரில் இந்த பருவத்தில் 26 போட்டிகளில் 22 கோல்களை போட்டுள்ளார்.  

மறுபுறம் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த போட்டியில் எந்த கோலையும் பெறத் தவறினார். கடந்த எட்டு போட்டிகளில் அவர் கோல் பெறாத முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.  

பார்சிலோனா ஏப்ரல் 10ஆம் திகதி ரோமாவை அதன் சொந்த மைதானத்தில் இரண்டாம் கட்ட காலிறுதியில் எதிர்கொள்ளவுள்ளது. ஏற்கனவே 3 கோல்களை அதிகமாக பெற்று முன்னிலை பெற்றிருக்கும் பார்சிலோனா 2014-15 பருவத்திற்கு பின் முதல் முறை சம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.

முழு நேரம்: பார்சிலோனா 4 – 1 ரோமா

கோல் பெற்றவர்கள்

பார்சிலோனா டி ரொஸ்ஸி 38′ (ஓன் கோல்), மனோலஸ் 55′ (ஓன் கோல்), பிகு 59′, சுவாரஸ் 87′  

ரோமா செகோ 80′

2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து..

லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் சிட்டி

இரு இங்கிலாந்து கழகங்கள் மோதிய காலிறுதியில் சம்பியன்ஸ் லீக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மன்செஸ்டர் சிட்டி அணிக்கு, பயிற்சியாளர் ஜுர்கன் கப்போவின் லிவர்பூல் அணி மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி கொடுத்தது.

பிரீமியர் லீக்கில் கடந்த ஜனவரி மாதம் லிவர்பூல் அணியிடம் 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் ஒரே ஒரு தோல்வியை சந்தித்த சிட்டி அணியை லிவர்பூலால் மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடிந்தது.    

தனது சொந்த மைதானமான அன்பீல்டில் நடந்த இந்த போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே லிவர்பூல் முதல் கோலைப் போட்டது. ரொபர்டோ பிர்மினோ பரிமாற்றிய பந்தை பெற்ற மொஹமது சலாஹ் இடது கோணர் திசையில் இருந்து கோலாக மாற்றினார்.

எகிப்தைச் சேர்ந்த முஹமது சலாஹ் இந்த பருவத்தில் தான் ஆடிய ஒன்பது சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் ஒன்பது கோல்களை பெற்றுள்ளார். குறிப்பாக இந்த பருவத்தில் நடந்த ஒட்டுமொத்த போட்டித் தொடர்களிலும் சலாஹ் மொத்தம் 38 கோல்களை புகுத்தியுள்ளார். அவரை விடவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (39) அதிக கோல்களை பெற்றுள்ளார்.

மேலும், ஐந்து நிமிடங்கள் கழித்து சிறப்பாக செயற்பட்ட ஒக்ஸ்லடேசம்பர்லைன் லிவர்பூல் அணிக்கு மற்றொரு கோலை பெற்றுக்கொடுத்ததோடு, அடுத்த 11ஆவது நிமிடத்தில் சாடியோ மானே தலையால் முட்டி மற்றொரு கோலை பெற்றுக் கொடுத்தார். இதனால் போட்டியின் 31ஆவது நிமிடத்திற்குள்ளேயே லிவர்பூல் அணி 3 கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: லிவர்பூல் 3 – 0 மன்செஸ்டர் சிட்டி

லிவர்பூல் அணிக்கு முதல் பாதியில் இருந்த உத்வேகத்தை இரண்டாவது பாதியில் காணமுடியவில்லை. குறிப்பாக 52ஆவது நிமிடத்தில் சலாஹ் காயமடைந்து வெளியேறியது அந்த அணியின் வேகத்தை மேலும் குறைத்தது. மறுபுறம் மன்செஸ்டர் சிட்டியால் கடைசி வரை பதில் கோலைப் போட முடியாமல்போனது.  

வடக்கு கிழக்கின் கால்பந்து மேலும் முன்னேற வேண்டும் : சுனில்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்து வீரர்களை..

குறிப்பாக இந்த போட்டியில் சிட்டி அணி கோல் இலக்கை நோக்கி உதைக்கவில்லை. அவ்வணி 2016 ஒக்டோபரில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் இவ்வாறான பரிதாப நிலைக்கு முகம்கொடுப்பது இது முதல் முறையாகும்.     

மறுபுறம் லிவர்பூல் அணி 2014 ஒக்டோபர் தொடக்கம் ஐரோப்பிய போட்டிகளில் தனது சொந்த மைதானத்தில் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது.

இரு அணிகளும் மோதும் இரண்டாவது கட்ட காலிறுதிப் போட்டி வரும் ஏப்ரம் 10ஆம் திகதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதில் சிட்டி அணியை மட்டுப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற லிவர்பூல் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

முழு நேரம்: லிவர்பூல் 3 – 0 மன்செஸ்டர் சிட்டி

கோல் பெற்றவர்கள்  

லிவர்பூல் சலாஹ் 12′, ஒக்ஸ்லடேசம்பர்லைன் 20′, மானே 31′