விமானப்படை அணிக்காக சகலதுறைகளிலும் ஜொலித்த சுமிந்த லக்ஷான்

168

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு B உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி சமநிலை அடைந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய விமானப்படை அணியினர் சுமிந்த லக்ஷான் அபார சதம் ஒன்று தாண்டி பெற்றுக் கொண்ட 153 ஓட்டங்களுடன், தமது முதல் இன்னிங்ஸினை 335 ஓட்டங்களுடன் நிறைவு செய்தனர். இதேநேரம் களுத்துறை நகர கழக அணி சார்பாக பசிந்து மதுஷன் 99 ஓட்டங்களை விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பந்து தாக்கியபோதும் ஆபத்திலிருந்து தப்பிய உஸ்மான் கவாஜா

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய களுத்துறை நகர கழக அணி 307 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. களுத்துறை அணியின் துடுப்பாட்டத்தில் நிலுஷன் நோனிஸ் 85 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். மறுமுனையில் விமானப்படை அணியின் பந்துவீச்சில் ஏற்கனவே சதம் பெற்ற சுமிந்த லக்‌ஷான் 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் 28 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த விமானப்படை விளையாட்டுக் கழக அணி 258 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது. விமானப்படை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட சுமிந்த லக்‌ஷான் அரைச்சதம் தாண்டி 89 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 335 (97.4) – சுமிந்த லக்‌ஷான் 153, சாமிக்க ஹேவாகே 69, பசிந்து மதுஷன் 4/99

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 307 (91.4) – நிலுஷன் நோனிஸ் 85, ரவிந்து கொடித்துவக்கு 69, சசிந்த ஜயத்திலக்க 52, சுமிந்த லக்ஷான் 5/85

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 258/6 (60.3) – சுமிந்த லக்‌ஷான் 89, உதயவன்ச பராக்ரம 63, லக்ஷான் ஜயசிங்க 2/27

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

குருநாகல் வெலகதர மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக அணியினர் தங்களது முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களை பெற்றனர். குருநாகல் இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் அனுருத்த ராஜபக்ஷ (77) மற்றும் துலாஜ் ரணதுங்க (54) ஆகியோர் அரைச்சதங்களை பதிவு செய்தனர். இதேவேளை பொலிஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மஞ்சுல ஜயவர்த்தன மற்றும் தினுக் ஹெட்டியாரச்சி ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பொலிஸ் அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் மஹேஷ் பிரியதர்ஷன ஆகியோர் திறமையான ஆட்டம் மூலம் கைகொடுத்தனர். இதனால், பொலிஸ் விளையாட்டு கழக அணி தமது முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பொலிஸ் அணியின் துடுப்பாட்டத்திற்கு உதவிய நிஷான் மதுஷ்க சதமொன்றுடன் 143 ஓட்டங்களை குவிக்க, மஹேஷ் பிரியதர்ஷன 81 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மறுமுனையில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சில் அனுருத்த ராஜபக்ஷ 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர்  177 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், தமது இரண்டாம் இன்னிங்ஸில் 402 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டியும் சமநிலை அடைந்தது.

உலகக் கிண்ண விஷேட தூதுவராக மஹேல ஜயவர்தன

குருநாகல் அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் தமித் பெரேரா சதம் தாண்டி 106 ஓட்டங்கள் குவிக்க, ரண்தீர ரணசிங்க 83 ஓட்டங்களை பெற்றிருந்தார். பொலிஸ் அணியின் பந்துவீச்சில் மஞ்சுல ஜயவர்த்தன 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 262 (65.2) – அனுருத்த ராஜபக்ஷ 77, துலாஜ் ரணதுங்க 54, மஞ்சுல ஜயவர்த்தன 4/75, தினுக் ஹெட்டியாரச்சி 4/82

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 439 (116.2) – நிஷான் மதுஷ்க 143, மஹேஷ் பிரியதர்ஷன 81, மஞ்சுல ஜயவர்த்தன 74, கிட்னாஷ் கேரா 57, அனுருத்த ராஜபக்ஷ 4/103

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 402/9 (59.4) – தமித் பெரேரா 106, ரண்தீர ரணசிங்க 83, மஞ்சுல ஜயவர்த்தன 3/158

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<