அல் அக்ஸாவை வீழ்த்தி யாழ் மத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு

280

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்பின் 2022 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற ஒரு காலிறுதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் கேட்வே கல்லூரியை வெற்றி கொள்ள, அல் அக்ஸா வீரர்கள் தமது காலிறுதியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (18) ராஜகிரிய மொறகஸ்முல்ல விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முதல் 22 நிமிடங்களுக்குள் நிஷான்த் இரண்டு கோல்களை யாழ் மத்திய கல்லூரி அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

எனினும், நிஷான்த்தின் இரண்டாவது கோல் பெறப்பட்டு இரண்டு நிமிடங்களில் மொஹமட் அப்கர் அல் அக்ஸா கல்லூரிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து சன்த்ரு மற்றொரு கோலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்காக பெற்றுக் கொடுக்க, முதல் பாதி நிறைவில் அவ்வணி 3-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்த இரண்டாம் பாதியில், 60 நிமிடங்களை அண்மித்த நிலையில் செபஸ்டியன் அருல் பெற்ற பெனால்டி கோல் மற்றும் அபிஷன் பெற்ற கோல் என்பவற்றினால், போட்டி நிறைவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியினால் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ் மத்திய கல்லூரி அணியினர் தெரிவாகியுள்ளனர். அவர்கள் இறுதிப் போட்டியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை எதிர்த்தாடவுள்ளனர்.

இவர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறை தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 5 – 1 அல் அக்ஸா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – நிஷான்த் 9’&22’, சன்த்ரு 34’, செபஸ்டியன் அருல் 58’(P), அபிஷன் 70
  • அல் அக்ஸா கல்லூரி – மொஹமட் அப்கர் 24’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<