புவனேஷ்வர் குமாரை பின்தள்ளிய மஹீஷ் தீக்ஷன!

ICC T20 Rankings

154
 

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள புதிய T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20I போட்டிகளை தொடர்ந்து புதிய T20I தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

>> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானங்கள் அறிவிப்பு

இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக, பந்துவீச்சாளர் தரவரிசையில் 7வது இடத்திலிருந்து 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், 8வது இடத்திலிருந்த மஹீஷ் தீக்ஷன 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க தொடர்ந்தும் 6வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை முக்கிய மாற்றமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் 46 ஓட்டங்களை விளாசியதன் மூலம் தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஷாமை நான்காவது இடத்துக்கு பின்தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் T20I துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை தென்னாபிரிக்காவின் எய்டன் மர்க்ரமும் பிடித்துள்ளனர். அதேநேரம், ஹர்திக் பாண்டிய 71 ஓட்டங்களை விளாசியதன் மூலம் துடுப்பாட்ட வரிசையில் 65வது இடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 5வது இடத்தையும் பிடித்துள்ளார். இதில் வனிந்து ஹஸரங்க சகலதுறை வீரர்கள் வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசியின் T20I பந்துவீச்சு தரவரிசையை பொருத்தவரை ஜோஸ் ஹெஷல்வூட் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் சகீப் அல் ஹஸன் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<