கேட்வே கல்லூரியை வீழ்த்திய யாழ் மத்திய கல்லூரி அரையிறுதிக்கு தெரிவு

523

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் கொழும்பு கேட்வே கல்லூரியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாகத் தெரிவாகியது.

ஏற்கனவே இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளின் நிறைவில் குழு A இல் தமது நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், இரண்டு சமநிலை முடிவுகள் என்பவற்றுடன் தோல்வி காணாத அணியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அரையிறுதிக்கு தெரிவாகியது.

அதேபோன்று, குழு Dயில் விளையாடிய கேட்வே கல்லூரி வீரர்கள் தமது 4 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் தலா ஒரு தோல்வி, ஒரு சமநிலை முடிவுகளுடன் குறித்த குழுவில் இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் தொடரின் முதலாவது காலிறுதிப் போட்டி சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்களின் கால்களிலேயே பந்து அதிகமாய் இந்தது.

அதன் பயனாக, போட்டியின் 21ஆம் நிமிடத்தில் யாழ் மத்திய கல்லூரி வீரர் நிஷான்த் போட்டியின் முதல் கோலைப் பெற்றார். அந்த கோல் பெறப்பட்டு 7 நிமிடங்களில் யாழ் மத்திய கல்லூரி வீரர் கோல் நோக்கி உதைந்த பந்தை கேட்வே வீரர் மௌலானா தடுக்க முற்பட்ட போது, அவரது உடம்பில் பட்டு பந்து கோலுக்குள் செல்ல, ஓன் கோல் முறையில் யாழ்ப்பாண வீரர்களுக்கு அடுத்த கோல் கிடைத்தது.

இதனால் முதல் பாதியில் மேலதிக இரண்டு கோல்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியிலும் யாழ் மத்திய கல்லூரி வீரர்களின் ஆதிக்கம் ஓங்க 69ஆவது நிமிடத்தில், தமது எல்லையில் இருந்து உயர்த்தி கேட்வே கல்லூரி கோல் எல்லைக்குள் செலுத்தப்பட்ட பந்தை வேகமாக சென்று பெற்ற பாஸ்கரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 6 நிமிடங்களின் பின்னர் கேட்வே கல்லூரியின் முன்னணி வீரரான சமுனு மைதானத்திற்குள் நுழைந்தார். இதன் பலனாக, 60 நிமிடங்களின் பிறகு கேட்வே கல்லூரி வீரர்களும் போட்டியில் தமது ஆட்ட முறைமையை மாற்றி கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், எதிரணியினர் கேட்வே வீரர்களுக்கு முதல் கோலைப் பெற விடவில்லை.  இதனால், ஆட்ட நிறைவில் 3-0 என வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் முதல் அணியாக ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகினர்.

முழு நேரம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 3 – 0 கேட்வே கல்லூரி

கோல் பெற்றவர்கள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – நிஷான்த் 21’, மௌலானா 28’, பாஸ்கரன் 69’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<