துமிந்துவின் இரட்டை கோலினால் சென் ஜோசப் அரையிறுதியில்

387

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 சுற்றுத் தொடரின் விறுவிறுப்பான காலிறுதியின் நிறைவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை 2-0 என வீழ்த்திய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர்.

சுற்றுத் தொடரின் குழு நிலைப் போட்டிகளின் நிறைவில் C குழுவில் தமது 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென் ஜோசப் வீரர்கள் 12 புள்ளிகளுடன் குழுவில் முதலிடம் பெற்று காலிறுதிக்குத் தெரிவாகினர்.

மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் குழு B இல் தலா 2 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான காலிறுதிப் போட்டி மொறகஸ்முல்ல ஜனக ரனவக மைதானத்தில் திங்கட்கிழமை (31) ஆரம்பமாகியது.

மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக ஏற்கனவே விளையாடிய 3 வீரர்கள் இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்றமையினால் இந்தப் போட்டியில் விளையாட முடியாமல் போனமை அவ்வணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

இதனால் போட்டியின் முதல் பாதியில் சென் ஜோசப் வீரர்கள் அதிகமான ஆதிக்கத்தை செலுத்தினாலும், அவர்களால் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது. இதனால் முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுற்றது.

தொடர்ந்த இரண்டாம் பாதியில் சென் ஜோசப் வீரர் மார்க் அன்ட்ரு எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய சென் ஜோசப் அணிக்கு 65 நிமிடங்கள் கடந்த நிலையில் தொடர்ந்து கோலுக்கு மேற்கொண்ட கோல் முயற்சிகளின் பின்னர் துமிந்து ஆதித்யா மூலம் முதல் கோல் கிடைத்தது.

அதன் பின்னர் போட்டியில் உபாதையீடு நேரத்தில் தேஷான் துஷ்மிக்க வழங்கிய பந்தைப் பெற்ற துமிந்து ஆதித்யா போட்டியின் அடுத்த கோலையும் பெற, ஆட்டத்தின் நிறைவில் சென் ஜோசப் வீரர்கள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது அணியாக ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியது.

முழு நேரம்: சென் ஜோசப் கல்லூரி 2 – 0 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

சென் ஜோசப் கல்லூரி – துமிந்து ஆதித்யா 68’ & 90+2’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<