இறுதிப் போட்டியின் வாசனையை நுகர்ந்தது போர்த்துக்கல்

219
Portugal 2-0 Wales
AFP Getty Images

15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றும் இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இரண்டாவது பாதியின் 50ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி கேப்டன் ரொனால்டோ தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதனால் போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 53ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி வீரர் நானி தனது அணிக்காக இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். வேல்ஸ் அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு, இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.

முடிவில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் போர்த்துக்கல் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நான்கு ஐரோப்பிய சாம்பியன் தொடரிலும் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை முன்னாள் வீரர் பிளாட்டினியுடன் பகிர்ந்து கொள்கிறார். இதுவரை கலந்து கொண்ட 4 தொடர்களில் சேர்த்து மொத்தம் 9 கோல்கள் அவர் அடித்துள்ளார்.

முன்னதாக, உலக தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் போர்த்துக்கல் அணி, லீக் ஆட்டங்களில் ஐஸ்லாந்து (1-1), ஆஸ்திரியா (0-0), ஹங்கேரி (3-3) ஆகிய அணிகளிடம் சம நிலை கண்டது. 2ஆவது சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் நடந்து வரும் 15ஆவது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. மார்செலி நகரில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2ஆவது அரை இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் உலக சாம்பியன் பிரான்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக தரவரிசையில் 4ஆவது இடம் வகிக்கும் பலம் வாய்ந்த ஜெர்மனி அணிக்கு நட்சத்திர வீரர்களின் காயம் பெரும் தலைவலியாக உள்ளது. காயத்தால் அவதிப்படும் மரியோ கோம்ஸ், சமி கேதிரா ஆகியோர் அரை இறுதியில் ஆடமாட்டார்கள் என்று ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லோ கூறியுள்ளார்.

இத்தாலிக்கு எதிரான கால்இறுதியின் போது 2ஆவது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற மாட்ஸ் ஹம்மல்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இதே போல் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்டீகரும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரும் களம் இறங்குவது சந்தேகம்தான். இதனால் உலக கோப்பையில் வெற்றிக்கான கோலை அடித்தவரான மரியோ கோட்சேவை ஆரம்பத்திலேயே களத்தில் இறக்க பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார்.

முன்னணி வீரர்களின் காயத்தால் ஜெர்மனி அணி தோமஸ் முல்லர், டோனி குரூஸ், ஒசில் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது.

தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் எப்போதும் சொந்த மண்ணில் அட்டகாசப்படுத்தக்கூடிய ஒரு அணி. கால்இறுதியில் ஐஸ்லாந்தை பந்தாடிய உற்சாகத்தில் உள்ள பிரான்ஸ் வீரர்கள் அதே உத்வேகத்துடன் ஜெர்மனியையும் போட்டுத் தாக்க தீவிரமாக உள்ளனர். ஆலிவியர் ஜிராட் (3 கோல்), ஆன்டோனி கிரிஸ்மான் (4 கோல்), டிமிட்ரி பயேத் (3 கோல்) உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் ஆணிவேராக விளங்குகிறார்கள்.

பிரான்ஸ் அணி தனது கடைசி 9 சர்வதேச போட்டிகளில் தோற்றதில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் உந்துசக்தியாக இருக்கும்.

ஜெர்மனி வீரர் தோமஸ் முல்லர் கூறும் போது, ‘எங்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த பயமும் இல்லை. தனிப்பட்ட முறையில் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி பிரான்ஸ் என்பதை அறிவோம். ஆனால் உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். வீரர்கள் காயப்பிரச்சினையை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.

நடப்புத் தொடரில் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுகொடுத்துள்ள ஜெர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயர் கூறும் போது, ‘பிரான்ஸ் அணியில் ஜிராட் கோல் அடிப்பதில் கில்லாடி. கோல் பகுதிக்குள் நுழைந்து விட்டாலே அபாயகரமான வீரராக மாறிவிடுவார். ஆனால் அவரைத் தவிர்த்து மேலும் பல திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்’ என்றார்.

2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்இறுதியில் பிரான்ஸ் அணி, 0-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்விகண்டது. அந்தத் தோல்விக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்கும் துடிப்புடன் பிரான்ஸ் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் அணல் பறக்கும் என்று நம்பலாம்.

இந்தப் போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணியை சந்திக்க உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 9-ல் ஜெர்மனியும், 12-ல் பிரான்சும் வெற்றி கண்டுள்ளன. 6 ஆட்டம் சமநிலை ஆனது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்