இலங்கை அணி ஒரே இன்னிங்ஸில் நான்கு சதங்கள் பெற்ற போட்டிகள்

830

இலங்கை கிரிக்கெட் அணியானது அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் என்ற சாதனை வெற்றியுடன், தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருந்தது.

இந்த டெஸ்ட் வெற்றிக்கு இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளும் காரணமாக அமைந்திருந்தது. குறிப்பாக, துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் வீரர்கள் நான்கு பேர் முதல் இன்னிங்ஸிற்காக சதங்களை விளாசி இருந்ததோடு, இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் நான்கு சதங்களை விளாசிய நான்காவது சந்தர்ப்பமாகவும் பதிவானது.

WATCH – ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த Dimuth, Sadeera!

இங்கே நாம் இலங்கை கிரிக்கெட் அணி எந்தெந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் நான்கு சதங்களை விளாசியிருக்கின்றது என்பதனை விரிவாகப் பார்ப்போம்.

இலங்கை எதிர் அயர்லாந்துமுதல் டெஸ்ட் – 2023

அயர்லாந்து அணியுடன் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது துடுப்பாட்ட வீரர்களின் நான்கு சதங்களுடன் முதல் இன்னிங்ஸில் 591 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இலங்கை அணிக்காக இப்போட்டியில் சதம் கடந்த வீரர்களாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் மாறியிருந்தனர்.

இந்த சதங்களில் திமுத் கருணாரட்ன மொத்தமாக 179 ஓட்டங்கள் எடுத்ததோடு, இதற்கு அடுத்தபடியாக குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், குசல் மெண்டிஸ் – திமுத் கருணாரட்ன ஜோடி இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 281 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

அணியின் எஞ்சிய இரண்டு சதங்களையும் பதிவு செய்த வீரர்களில் சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர். அத்துடன் தினேஷ் சந்திமால் – சதீர சமரவிக்ரம ஜோடி இலங்கை அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 183 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அது இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் 7ஆம் விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை எதிர் இந்தியாமுதல் டெஸ்ட் – 2008

கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இலங்கை அணிக்காக ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த மலிந்த வர்ணபுர போட்டியின் முதல் சதத்தினை விளாசினார். மலிந்த வர்ணபுர 115 ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றார்.

ஆஷஷ், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

வர்ணபுரவின் பின்னர் இலங்கை அணியின் அப்போதைய தலைவராக காணப்பட்ட மஹேல ஜயவர்தன போட்டியின் இரண்டாவது சதத்தினை, போட்டியின் இரண்டாம் நாளில் விளாசினார். மஹேல 136 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மஹேலவின் பின்னர் இலங்கை அணியின் மத்திய வரிசையில் துடுப்பாடிய திலகரட்ன டில்ஷான் மற்றும் திலான் சமரவீர ஆகியோரும் சதங்களை விளாசினர். இந்த சதங்களில் திலான் சமரவீர 127 ஓட்டங்கள் எடுக்க, திலகரட்ன டில்சான் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்பட்டிருந்தார்.

இந்த நான்கு வீரர்களின் சதங்களோடும் இலங்கை அணி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை இழந்து 600 ஓட்டங்கள் எடுத்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தி இருந்தது.

அத்துடன் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களே இலங்கை அணி இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கும் போதுமாக அமைந்திருந்தது.

இலங்கை எதிர் பங்களாதேஷ் – 2007 – முதல் டெஸ்ட்

கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கை வந்த பங்களாதேஷ் அணி இலங்கை வீரர்களுடன் தமது சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியிருந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.  போட்டியில் பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸை (89) அடுத்து முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 577 ஓட்டங்கள் எடுத்து தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

இலங்கை அணியின் இந்த இன்னிங்ஸ் மைக்கல் வெண்டொட், மஹேல ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் சமிந்த வாஸ் ஆகிய நான்கு வீரர்கள் பெற்ற சதங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டிருந்தது.

இதில், போட்டியின் முதல் சதத்தினைப் பதிவு செய்த மைக்கல் வெண்டொட் 117 ஓட்டங்கள் பெற்றிருந்தார். வெண்டொட்டினை அடுத்து மஹேல ஜயவர்தன போட்டியின் இரண்டாவது சதத்தோடு 127 ஓட்டங்கள் எடுத்தார்.

இவர்கள் தவிர இலங்கை அணிக்காக அடுத்த சதம் விளாசியிருந்த பிரசன்ன ஜயவர்தன 120 ஓட்டங்களையும், சமிந்த வாஸ் 100 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர். இதில் இலங்கையின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் பெற்ற சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற ஒரேயொரு சதமாக அமைந்திருந்தது.

காரணம் குறிப்பிடாமல் விராட் கோலிக்கு அபராதம்

அத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 234 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, இந்த வெற்றி அடங்கலாக தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்து இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷினை குறித்த டெஸ்ட் தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்திருந்தது.

இலங்கை எதிர் இந்தியாமூன்றாவது டெஸ்ட் – 2001

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை வீரர்களை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர் கொண்டிருந்தது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்து, தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்க தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் கொழும்பு SSC அரங்கில் ஆரம்பமாகியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 234 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணி இமாலய ஆட்டத்தினை வெளிப்படுத்தி, முதல் இன்னிங்ஸிற்காக 610 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் நான்கு இலங்கை வீரர்கள் அபார சதம் விளாசியிருந்தனர். இதில் முதல் சதம் விளாசிய ஆரம்ப வீரர்களில் ஒருவரான மார்வன் அத்தபத்து 108 ஓட்டங்கள் எடுத்தார். மார்வன் அத்தபத்துவின் பின்னர் அப்போது வெறும் 23 வயதாக இருந்த மஹேல ஜயவர்தன இலங்கை அணிக்காக மற்றுமொரு சதத்தினைப் பெற்று, மொத்தமாக 139 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மஹேல ஜயவர்தனவின் பின்னர் ஹஷான் திலகரட்ன மற்றும் திலான் சமரவீர ஆகியோரும் சதங்கள் பெற்றனர். இந்த சதங்களில் ஹஷான் திலகரட்ன 136 ஓட்டங்கள் பெற்றிருக்க, அறிமுக வீரரான திலான் சமரவீரவும் 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இப்போட்டியின் மூலமே இலங்கை அணியில் நான்கு வீரர்கள் முதல் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் நான்கு சதங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றிக் கொண்டது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<