உலகக் கிண்ண அட்டவணையில் மீண்டும் மாற்றம்?

135

ஒருநாள் உலகக் கிண்ண அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை கடந்த ஜூன் மாத இறுதியில் மும்பையில் வெளியிடப்பட்டது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், உலகக் கிண்ண அட்டவணையில் கடந்த 9ஆம் திகதி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி ஒக்டோபர் 15ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெற இருந்தது.

எனினும், அன்றைய திறம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பமாகுவதால் குறித்த போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று அஹமதாபாத் பொலிஸார் கூறியதையடுத்து அந்தப் போட்டி ஒருநாள் முன்னதாக ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதன் எதிரொலியாக மேலும் 8 போட்டிகளின் திகதிகளிலும், போட்டி ஆரம்பமாகும் நேரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, ஹைதராபாத் மைதானத்தில் ஒக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஒக்டோபர் 9ஆம் திகதி ஹைதராபாத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த இரு போட்டிகளையும் மாற்றியமைக்குமாறு BCCI க்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடத்தப்படுவதால் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினமான ஒன்று. ஆதலால், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் BCCI க்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இப்போட்டிக்கான ஆட்டவணையும் மாற்றப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக் கிண்ண அட்டவணையில் மீண்டும் மாற்றம் இருக்கிறதா என்பது குறித்து BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில்,

”ஹைதராபாத் மைதானம் தொடர்பான விடயங்களில் நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன். ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை சரிசெய்ய முயற்சிப்போம். உலகக் கிண்ண அட்டவணையை மாற்றுவது எளிதானது அல்ல. இந்த அட்டவணை மாற்றத்தில் BCCI மட்டும் முடிவு எடுக்காது. அதற்கு, ICC தான் முழுப் பொறுப்பு. போட்டியின் தன்மை மற்றும் எத்தனை பேர் வருவார்கள் என்பதை மதிப்பீடு செய்து பொலிஸார் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<