நுவன் துஷார அடுத்த மாலிங்கவா?

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

919

லசித் மாலிங்கவுக்குப் பிறகு இலங்கை சார்பாக யோக்கர் பந்தொன்றை வீசுகின்ற ஒரு வீரரை இணங்கான்பது கடினமாக இருக்கும் வேளையில், அண்மையில் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் களமிறங்கிய ‘பொடி மாலிங்க’ என்ற புனைப் பெயரால் அழைக்கப்படுகின்ற நுவன் துஷார, உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுக்கொண்ட மற்றுமொரு இளம் வீரர் ஆவார். 

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் அதிக யோக்கர் பந்துகளை வீசி சாதனை படைத்தவர் தான் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்ற 26 வயதான வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் நுவன் துஷா

LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான தனன்ஜய லக்ஷான்  

போட்டித் தொடரின் இறுதிக் கட்டத்தில் மிக அற்புதமாக யோக்கர் பந்துகளை வீசி அந்த அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு செல்வதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்

அதிலும் போட்டித் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் லசித் மாலிங்கவின் பாணியில் யோர்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை நுவன் துஷா தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்

ஆனால், நுவன் துஷார என்பவர் லசித் மாலிங்க அல்ல என்பதை நாங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அவர் தற்போது தான் கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைத்துள்ளார்.  

மென்பந்து போட்டிகளில் விளையாடி, அதன்பிறகு கழக மட்டப் போட்டிகளில் அறிமுகமாகி ஓரளவு திறமைகளை வெளிப்படுத்தி அனுபவங்களைப் பெற்று வருகின்றார்.  

லசித் மாலிங்கவின் பாணியில் அவர் பந்துவீசினாலும், நெக்ஸ்ட் மாலிங்கவாக உருவெடுப்பதற்கு முயற்சிப்பது பலன் கிடைக்காத ஒரு விடயம் தான் என்று பலரும் கூறுகின்றனர்.    

எனினும், அவர் என்றாவது ஒருநாள் மாலிங்கவின் திறமையை மிஞ்சலாம் அல்லது பல சாதனைகளை முறியடிக்கலாம். அதுவரை அவரது முயற்சி. அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு இடமளிக்க வேண்டும்

நுவன் துஷார என்ற பெயரை கிரிக்கெட் அரங்கில் பதிவதற்கு மாத்திரமே அவர் முதலில் முயற்சி செய்ய வேண்டுமே தவிர மாலிங்கவின் சாயலாக அல்லது பிரதியாக வருவது அவருக்கும், இலங்கை கிரிக்கெட்டுக்கும் எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்காது

அவ்வாறு நெக்ஸ் மாலிங்க என்று அவரை அழைத்து புகழ் மாலை அணிவிக்காமல் அவரிடம் உள்ள திறமையை வளர்த்தெடுக்க சிறிய கால அவகசாம் கொடுக்க வேண்டும்.  

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக அவர் விளையாடிய முதல் லீக் போட்டியில் 4 ஓவர்கள் வீசி கடைசி ஓவரில் மாத்திரம் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தாலும், முதல் 3 ஓவர்களில் 16 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவ்வப்போது யோர்க்கர் பந்துகளையும் வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரள வைத்தார்.

அதன்பிறகு நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணியுடனான போட்டியில் பவர் ப்ளேயில் முதலிரண்டு ஓவர்களை வீசிய அவர், 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

இந்தப் போட்டியைப் பார்த்தால் LPL தொடரில் மாலிங்க விளையாடாத குறையை நுவன் துஷார ஓரளவுக்கு தீர்த்து வைத்தார். அவர் வீசிய முதலிரண்டு ஓவர்களிலும் யோர்க்கர் பந்துகளை வீசி எதிரணி வீரர்களை மிரள வைத்தார். எனினும், குறித்த போட்டியின் போது துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேறினார்

அதனையடுத்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உபாதையுடன் களமிறங்கிய அவர், 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

எதுஎவ்வாறாயினும், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். எனினும், அவரால் எந்தவொரு விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை

ஒட்டுமொத்தத்தில் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் 4 போட்டிகளில் விளையாடிய நுவன் துஷா, நான்கு விக்கெட்டுக்களை மாத்திரம் எடுத்தார்

LPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்

வெறுமனே நான்கு போட்டிகளை மாத்திரம் வைத்து அவரை சிறந்த பந்துவீச்சாளர் என முத்திரை குத்தாமல் இன்னும் பல முக்கிய போட்டிகளில் விளையாடிய பிறகு அவரை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக அடையாளப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த நிலையில், மென்பந்து விளையாடிய நுவன் துஷா மிகவும் குறுகிய காலத்தில் எவ்வாறு கடினப் பந்து போட்டியில் அறிமுகமாகி கழக மட்டப் போட்டிகளில் விளையாடினார்? 

அதேபோல, லசித் மாலிங்கவிடம் பெற்றுக்கொண்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நுவன் துஷார வழங்கிய செவ்வியின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்

”முதல் நாள் அண்ணாவுடன் பிரேமதாஸ மைதானத்துக்கு வந்தேன். அநுர சேர் பந்துவீசுவதற்கு பூட் உள்ளதா எனக் கேட்டார். அப்போது நான் சாதாரண சப்பாத்தொன்று போட்டுக் கொண்டு வந்தேன். உண்மையில் பூட் போட்டு தான் பந்துவீச வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. 

Video – இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய LPL FINAL: |Jaffna Stallions – LPL2020 Champions..!

எனினும், நான் பந்துவீசிய போது கீழே விழுந்து விட்டேன். இதைப் பார்த்த ஜெஹான் முபாரக் அண்ணா தன்னுடன் இருந்த நண்பரிடம் இருந்த பூட்டை எடுத்து எனக்கு தந்தார்.  

தொடர்ந்து இரண்டு நாட்கள் அநுர சேரிடம் பயிற்சி எடுத்த வந்த என்னை என்.சி.சி கழகத்துக்கு வந்து இணைந்துகொள்ளுமாறும் அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பேன் என்றும் ஜெஹான் முபாரக் அண்ணா சொன்னார். அப்போது எனது பந்துவீச்சைப் பார்த்த டில்ஹார பெர்னாண்டோ அண்ணாவும் என்.சி.சி கழகத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

அதன்பிறகு என்.சி.சி கழகத்தில் இணைந்து கொண்டு எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தேன். அங்கு கபில குணவர்தன மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகிய இருவரும் தான் பயிற்சியாளர்களாக இருந்தனர். அவர்களது பயிற்றுவிப்பின் கீழ் நான் பயிற்சிகளை எடுத்தேன். அதன்பிறகு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் என்.சி.சி கழகத்துக்காக 23 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடினேன்.  

அப்போது நான் சிறப்பாக செயற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேகப்பந்துவீச்சு பயிற்சி அகடமிக்கு தேர்வாகினேன். அங்கு கடமையாற்றிய அனைத்து பயிற்சியாளர்களும் எனது பந்துவீச்சு பாணியை சரிசெய்வதற்கு நிறைய உதவி செய்தார்கள். 

நான் காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவன். தலாவ கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனது வீட்டில் அம்மா, அப்பா, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். எனது பெற்றோர்கள் வீட்டில் உள்ளார்கள். எனக்கு தொழில் இல்லை.  

எனது பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கவில்லை. தரம் 11 வரை தலாவ கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனக்கு 16 வயதாக இருக்கும் போது தான் கடினப் பந்தொன்றை பிடித்தேன். நான் மென்பந்து போட்டியொன்றில் விளையாடுவதை அவதானித்த பியல் சேர் என்னை கடினப்பந்து விளையாடுவதற்காக அழைப்பு விடுத்தார். 

Video – LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான Dhananjaya Lakshan..!

அதன்பிறகு கரன்தெனிய பாடசாலைக்குச் சென்று பயிற்சிகள் எடுத்தேன். எனினும், உயர்தரம் படிப்பதற்கான போதியளவு சித்திகள் இல்லாததால் பாடசாலைக் கல்வியை தொடர முடியாமல் போனது. 

அதன்பிறகு தான் கிரிக்கெட்டை கைவிட்டு AC பொருத்தும் படிப்பை முன்னெடுத்தேன். அப்போது தான் எனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

மாலிங்க அண்ணாவை சந்தித்த முதல் நாளே தம்பி நீ எந்த ஊரு? என கேட்டார். நான் எல்பிட்டிய என்று கூறினேன். அப்போது அவர் எனது ஊர் தான் என்று சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார்.  

அதன்பிறகு உனக்கு கிரிக்கெட்டில் நல்லதொரு எதிர்காலம் உண்டு என மாலிங்க அண்ணா சொன்னார். நல்ல விடயங்களை செய்ய வேண்டும் எனவும், கிரிக்கெட்டை ஒருபோதும் கைவிட வேண்டாம் எனவும் அவர் சொன்னார். 

இன்றைக்கும் அவர்தான் எவ்வாறு ஸ்லோ பந்துகளை போடுவது என்பதை சொல்லிக் கொடுத்தார். மாலிங்க அண்ணா இன்றுவரை என்னிடம் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவார். எனவே, எனது பந்துவீச்சில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு முன்னே செல்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

இலங்கையின் வேகப் புயலாக உருவெடுக்கும் டில்ஷான் மதுஷங்க

இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற .பி.எல் தொடரில் பிரகாசித்ததன் பிரதிபலனாகத்தான் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தார். எனினும், கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர், பெரும்பாலான போட்டிகளில் பின் கதிரையில் உட்கார்ந்து இருந்ததை மறக்க வேண்டாம்.   

எனவே, வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அதிலும் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். எவ்வளவு திறமை இருந்தாலும், அதை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுவதுதான் சாதனை. ஆகையால், LPL தொடர் நுவன் துஷா போன்ற வீரர்களுக்கு சிறந்த களமாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<