2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

2018இல் இலங்கையின் விளையாட்டுத்துறையை கலக்கிய நம்மவர்கள்

830

2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் மெய்வல்லுனர் மற்றும் ஒரு சில தனிபர் மற்றும் குழுநிலைப் போட்டி நிகழ்ச்சிகளில் வடக்கு, கிழக்கு மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீர வீராங்கனைகள் கடந்த காலங்களையும் காட்டிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பதிவு செய்திருந்தனர்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஓடிக்…..

அத்துடன், ஒருசில வீரர்கள் உலக சம்பியன் பட்டங்களையும் வென்றிருந்தனர். இதேநேரம், ஒருசில முன்னணி வீரர்களுக்கு எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனமை இங்கு கவனிக்கத்தக்கது.

அவ்வாறு குறித்த ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரகாசித்த சில வீரர்கள் குறித்த ஒரு பார்வையாக வருகின்றது இந்த ஆக்கம்.

சாதனை நாயகன் சண்முகேஸ்வரன்

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹட்டனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் இவ்வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தார்.

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சண்முகேஸ்வரன், ஆசிய விளையாட்டு விழாவுக்காக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளிலும் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக பங்குபற்றிய அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்தார்.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்….

அதன்பிறகு நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதுஇவ்வாறிருக்க. கடந்த செப்டெம்பர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், அதிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல், இறுதியாக நடைபெற்ற வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடரான இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அஷ்ரபின் புதிய பிரவேசம்

சுமார் ஒரு தசாப்தங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளூர் மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் 4X100 அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற பொத்துவிலைச் சேர்ந்த .எல்.எம் அஷ்ரப், முதற்தடவையாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.


அனித்தாவுக்கு சாதனையின் பின் சரிவு

கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு இவ்வருடம் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்தார்.

எனினும், குறித்த போட்டித் தொடரின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு தொடர்ந்து நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.


முப்பாய்ச்சலில் அசத்தும் சப்ரின்

தென் மாகாணத்திலிருந்து தேசிய மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடிவைத்த சப்ரின் அஹமட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற அவர், கடந்த ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய….


இரும்பு மனிதன் அசாம்

இவ்வருடம் முதல் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அசாம், ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகத்லன்) தொடர்ச்சியாக நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் டெகத்லன் போட்டிகளுக்காக முதற்தடவையாக களமிறங்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பிறகு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், தேசிய மெய்வல்லுனர் குழாத்திலும் முதற்தடவையாக இடம்பிடித்தார்.


ஏறுமுகம் காணும் ஆஷிக்

 

மைதான நிகழ்ச்சிகளில் கடந்த சில வருடங்களாக தொடர் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான இஸட்.ரி.எம் ஆஷிக், இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்தார்.

 

இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வென்ற ஆஷிக், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதககத்தையும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றிருந்தார்.

அத்துடன், இம்முறை பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.


இளம் புயல் சபான்

இலங்கையின் அடுத்த அதிவேக குறுந்தூர வீரராக உருவெடுத்துள்ள வடமேல் மாகாணம், நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபான், இவ்வருடம் நடைபெற்ற கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதனையடுத்து கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் முதல் தடவையாக களமிறங்கியிருந்த சபான், தேசிய மட்டத்தில் முன்னிலையிலுள்ள வீரர்களையெல்லாம் பின்தள்ளி தங்கப் பதக்கத்தினை வென்றதுடன், முதல் தடவையாக தேசிய மெய்வல்லுனர் குழாமிலும் இடம்பிடித்தார்.

தெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ராஜகுமாரன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற…

இதனையடுத்து, தேசிய விளையாட்டு விழாவிலும் முதற்தடவையாக களமிறங்கிய அவர், 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


இரும்புப் பெண் ஆஷிகா

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகள் படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா, இவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேவேளை, இறுதியாக இம்மாதம் நடைபெற்ற கனிஷ்ட, இளையோர், சிரேஷ்ட தேசிய பளுதூக்கல் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்ததுடன், பெண்களில் அதிசிறந்த பளுதூக்கல் வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.


நகர்வல சம்பியனான சந்திரதாசன்

இவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதலாவது நிகழ்ச்சியாக இடம்பெற்ற நகர்வல ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த செல்வரத்ணம் சந்திரதாசன் சம்பியனாகத் தெரிவானார்.

அரைமரதன், நகர்வல ஓட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரதாசன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் 4ஆவது இடத்தையும், குழுநிலைப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

தேசிய மட்ட பளுதூக்களில் வேம்படி மகளிருக்கு இரண்டு பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின்….

அத்துடன், இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


தெற்காசியாவில் பிரகாசித்த பிரகாஷ்ராஜ்

2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான சிவகுமார் பிரகாஷ்ராஜ், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை குழாமுக்கு முதற்தடவையாகத் தெரிவானார்.

குறித்த போட்டியில் தட்டெறிதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.  


சாதனை நாயகி உதயவானி

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற நாகேந்திரம் உதயவானி, இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்துடன், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதயவானி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றி 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதற்தடவையாக அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


போராட்ட வீரன் கிந்துஷன்

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் தேசிய மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற இளம் வீரரான எஸ். கிந்துஷன், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.


800 மீற்றரில் அசத்தும் அரவிந்தன்

2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுவருகின்ற பதுளையைச் சேர்ந்த இளம் வீரரான எஸ். அரவிந்தன், இவ்வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக போட்டியிட்டு 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர், சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டித் தொடர்களில் வெற்றிகளைப் பெற்ற அரவிந்தன், இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.  

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை…


ஹெரீனா சபாஷ்

அண்மைக்காலமாக வட மாகாணத்தைப் பிரதிநித்துப்படுத்தி கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுவருகின்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவியான ஹெரீனா, இவ்வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர், சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாக்களில் பதக்கங்களை வென்ற ஹெரீனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் சுற்றில் போட்டியிட்டு, தேசிய மட்ட வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.


சிகரம் தொட்ட புவிதரன்

பாடசாலை மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான .புவிதரன், முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெள்ளிப் பதக்கததை வென்று அசத்தினார்.

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதுஇவ்வாறிருக்க, முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்ற புவிதரன், கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி, 4.70 உயரத்தைத் தாவி முதலிடத்தையும் பெற்று, முதல்தடவையாக தேசிய மெய்வல்லுனர் குழாத்திலும் இடம்பிடித்தார்.


மின்னல் வேகப் புயல் சபியா

கடந்த 5 வருடங்களாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கண்டி விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

கோலூன்றிப் பாய்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானே தனது…..

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றரில் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சபியா, கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 4X100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இதனையடுத்து, அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 200 மீற்றரில் தங்மும், 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அவர், இறுதியாக நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில முதல்தடவையாகக் களமிறங்கி, 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கமும், 100 மீற்றரில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


கரம் உலகை வென்ற சஹீட்

கடந்த ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற 5ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை ஆடவர் அணி, நடப்புச் சம்பியனான பிரபல இந்திய அணியை வீழ்த்தி 5ஆவது தடவையாகவும் உலக கரம் சம்பியன் பட்டத்தை வென்றது. சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் கொழும்பைச் சேர்ந்த மொஹமட் சஹீட் இடம்பெற்றிருந்தார்.


பாலுராஜ் பலே

இவ்வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கராத்தே போட்டிகளின் தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தர ராஜா பாலுராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இம்முறை தேசிய கராத்தே போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

2012ஆம் ஆண்டு முதல் தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாலுராஜ், இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித்….

அத்துடன், குழுநிலைக்கான காட்டாய் போட்டியிலும் கிழக்கு மாகாணத்திற்கு வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததன் மூலம் 3ஆவது தடவையாக சிறந்த வீரருக்கான விருதையும் பாலுராஜ் தட்டிச் சென்றார். முன்னதாக, அவர் 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், இவ்வருட இறுதியில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிருந்தார்.


பாஹிமுக்கு ஸ்னூகர் பட்டம்

தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக்காலமாக இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற முவர்ஸ் கழகத்தைச் (Moors Club) சேர்ந்த எம்.எப்.எம் பாஹிம், இவ்வருடம் நடைபெற்ற 66 ஆவது தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

தனது 14ஆவது வயதில் ஸ்னூக்கர் விளையாட்டை ஆரம்பித்த மொஹமட் பாஹிம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷப் போட்டித் தொடரில் முதல் தடவையாக பங்குபற்றி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.


உலக சம்பியனாகிய அர்ஷான்

இங்கிலாந்தின் வூர்ஸ்டர்ஷயர் மாநிலத்தில் இவ்வருடம் நடைபெற்ற உலக தற்காப்புக் கலை போட்டியில் கண்டி, கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த மொஹமட் அர்ஷான் உவைஸ் முதற்தடவையாக சம்பியன் பட்டம் வென்றார்.

உலக ஐக்கிய தற்காப்புக் கலை (வூமா) சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் கே-1 எனப்படும் கிக் பொக்சிங் பிரிவில் அர்ஷான் உவைஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 19 வயதுக்குட்பட்ட தேசிய றக்பி அணியிலும், இலங்கையின் பிரபலமான கண்டி றக்பி கழகத்திலும் விளையாடியவராவார்.


தெற்காசியாவை வென்ற ராஜகுமாரன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் இவ்வருடம் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண தெற்காசிய உடற்கட்டழகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட எம். ராஜகுமாரன், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற அவர், இவ்வருடம் பொலன்னறுவையில் நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவிலும் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உலக சம்பியனான புஷ்பராஜ்

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூசன் அண்டன் புஷ்பராஜ், உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன்படி, உலக உடற்கட்டழகர் போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்ற முதல் இலங்கையராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக, இவ்வருடம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் 2ஆம் இடத்தையும் பெற்றார்.   

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<