ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா

1472

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அனித்தாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சச்சினி பெரேராவும் அதே அளவு (3.40 மீற்றர்) உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நிலானி, கயான் புதிய தேசிய சாதனை

இதன்படி, கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்ற தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 தடவைகள் தேசிய சாதனையை முறியடித்த அனித்தாவுக்கு இடது முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் எதிர்பார்த்தளவு பெறுபேறை பெற்றுக்கொள்ள முடியாது போனதுடன், ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இந்நிலையில் போட்டிகளுக்கான இரண்டாம் நாளான இன்று (04) காலை பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி நடைபெற்றது. அண்மைக்காலமாக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர்.

இதில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் போது இடது காலின் பின்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த நடப்புச் சம்பியனான அனித்தாவுக்கு மறுபடியும், இடது முழங்காலுக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், அவருக்கு இம்முறை போட்டிகளில் பங்குபற்றுவதனால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து அவர் இன்றைய தினம் போட்டிகளில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் 3.40 மீற்றர் உயரத்தை 3ஆவது முயற்சியில் வெற்றி கொண்ட அனித்தா, அடுத்த இலக்காக 3.45 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்தார். எனினும், காலில் ஏற்பட்ட உபாதை மற்றும் வலி காரணமாக அவரால் அந்த இலக்கை அடைய முடியாது போனது.

காலில் ஏற்பட்ட உபாதையுடன் போட்டிகளில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன்

இறுதியில் 3.40 மீற்றர் உயரத்தை தாவி அவர் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, அதன்பிறகு ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டிகளில் அவர் பங்கேற்றார்.

அந்தப் போட்டியிலும், சப்பாத்துக் கடியினால் ஏற்பட்ட உபாதையுடன் போட்டியிட்ட அவர், 3.30 மீற்றர் உயரத்தை தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை தகுதி

எனினும், பாடசாலை மட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்ற அனித்தா ஜெகதீஸ்வரன், 3.47 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள 3.60 மீற்றருக்கான இறுதி முயற்சியிலும் அனித்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதேவேளை இந்தப்  போட்டியில், இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சச்சினி பெரேரா, 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ள, இலங்கை விமானப் படையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கே.எல் பெரேரா (3.30 மீற்றர்) மற்றும் எஸ்.டி ரணசிங்க (3.30 மீற்றர்) ஆகிய வீராங்கனைகள் 3ஆவது இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், யாழ் பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த என்.டக்சிதா (3.20 மீற்றர்) 5ஆவது இடத்தையும், யாழ். மகாஜனாக் கல்லூரி மாணவியான சந்திரசேகர் ஹெரீனா (3.10 மீற்றர்) 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<