9 ஆண்டுகளின் பின் கிரிக்கெட் சம்பியனான கிழக்கு மாகாணம்

47th National Sports Festival

271
47th National Sports Festival

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மேல் மாகாண அணியை வீழ்த்தி கிழக்கு மாகாண அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி, நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களைக் குவித்தது. லக்ஷித மதுமால் பெரேரா அதிகபட்சமாக 34 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேல் மாகாண அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மொஹமட் பஹீம் 3 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண மென்பந்து கிரிக்கெட் அணி, 47ஆவது தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாகத் தெரிவாகியது.

இதன்மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாண அணி தங்கப் பதக்கத்தை வென்றமைசிறப்பம்சமாகும்.

முன்னதாக, முதலாவது போட்டியில் வட மத்திய மாகாண அணியை வீழ்த்திய கிழக்கு மாகாண அணி, அரையிறுதியில் ஊவா மாகாண அணியை விழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதனிடையே, 47ஆவது தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் தொடர் நாயகன் விருதை கிழக்கு மாகாண அணியின் லக்ஷித மதுமால் பெரேரா பெற்றுக் கொண்டார். இவர் இலங்கையின் அதிசிறந்த மென்பந்து கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழா மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற கிழக்கு மாகாண அணியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11 வீரர்களும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் விளையாடி இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

கிழக்கு மாகாண மென்பந்து கிரிக்கெட் அணி விபரம்

ஏ. மும்தாஸ், எம்.எஸ்.எம் அஸ்ராஸ் (தலைவர்), எஸ்.எம் சஹீதுல்லாஹ், ஜி.கே லக்ஷித மதுமால் பெரேரா, ஜே.எம் பஹீம், ஏ.எஸ் சனூஸ் அஹமட், டி. நதீர், யு.எம் சஹீம், கே.எம் நஸாத், கே.எம் இஸ்ரத், எஸ்.எல்.எம் ஹஸீக், எம்.ஐ மொஹமட் ரஹீம், ஏ.ஆர்.ஏ கிரூஸ்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<