இசிபதன கல்லூரிக்கு எதிராக அலோசியஸ் கல்லூரி வலுவான நிலையில்

104

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் இன்று ஆரம்பமானதோடு மேலும் 2 போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

தர்மபால கல்லூரி, பன்னிபிடிய எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி வென்னப்புவ

மொறட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் தர்மபால மற்றும் ஜோசப் வாஸ் ஆகிய இரு கல்லூரிகளும் வெற்றிபெற கடைசிவரை போராடியபோதும் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் கடைசி நேரத்தில் ஜோசப் வாஸ் கல்லூரி அணிக்கு 203 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 22 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சன ருகமால் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களுடன் இருந்தார்.

பந்துவீச்சில் தர்மபால கல்லூரி சார்பாக துலாஜ் அஷேன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நேற்று (23) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜோசப் வாஸ் கல்லூரி முதலில் தர்மபால கல்லூரியை துடுப்பாடப் பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய தர்மபால கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றதோடு ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் 167 ஓட்டங்களுக்கே சுருண்டது.

தோல்விகளால் தலைமைப் பதவியிலிருந்து விலகமாட்டேன் – தரங்க

இந்நிலையில் தர்மபால கல்லூரி 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்தி, ஜோசப் வாஸ் கல்லூரிக்கு 203 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

எவ்வாறாயினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தர்மபால கல்லூரி அதற்கான புள்ளிகளைப் பெற்றுகொண்டது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி, பன்னிபிடிய (முதல் இன்னிங்ஸ்) – 253 (79.4) – அவிஷ்க ஹசரிந்த 54, துலாஜ் அஷேன் 45, மலித் சந்தகலும் 40, சஷான் தினெத் 7/68, கவிந்து ஷெஹார 2/43

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்) – 167 (59.3) – திரான் பிரதிப்த 45, நவொத் யொஹான் 28, சமிது லக்ஷித 3/56, மலித் சந்தகலும் 2/11

தர்மபால கல்லூரி, பன்னிபிடிய (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117/6d (20.5) – மலித் சந்தகலும் 50, அமில ஜயனக 38, தனுஷ்க நிரன்ஜன் 3/28, சஷான் தினெத் 3/58  

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138/4 (22) – அஞ்சன ருகமால் 56*, சஷான் தினெத் 42, துலாஜ் அஷேன் 3/47

முடிவு: போட்டி சமநிலையில் முடிவுற்றது. தர்மபால கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுகொண்டது.


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பலம் மிக்க நாலந்த மற்றும் தர்மாசோக கல்லூரிகள் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியதால் இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்மாசோக கல்லூரியினால், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நாலந்த கல்லூரி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. சமிது விஜேசிங்க அரைச்சதம் (53) எட்டினார்.

தர்மாசோக கல்லூரி சார்பாக பந்துவீச்சில் தினுக்க டில்ஷான் 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்மாசோக கல்லூரி 68.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை எடுத்தது. சச்சின் சங்கீத் 56 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் நாலந்த கல்லூரியின் கவீஷ மதுரப்பெரும 57 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த நாலந்த கல்லூரி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 86 ஓட்டங்களை எடுத்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 227 (63.5) – சமிது விஜேசிங்க 53, கலான கத்ரியாரச்சி 40, லக்ஷித ரசஞ்சன 35, ரவீன் டி சில்வா 26, தினுக டில்ஷான் 3/09, அரோஷன டி சொய்சா 2/17  

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்) – 202 (68.5) – சச்சின் சங்கீத் 56, தினுக டில்ஷான் 40, உஷான் இமந்த 38, கவீஷ மதுரப்பெரும 5/57  

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 86/1 (24) – லக்ஷித ரசஞ்சன 44*, அவிஷ்க பெரேரா 38*

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி ஆகியன முதல் இன்னிங்ஸில் சோபிக்கத் தவறியிருக்கும் நிலையில் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் தீர்க்கமாக அமையவுள்ளது.

துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

கொட்டாஞ்சேனை பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் கல்லூரி அணி 122 ஓட்டங்களுக்கே சுருண்டது. கவீஷ ஜயதிலக்க ஆட்டமிழக்காது பெற்ற 26 ஓட்டங்களே அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

வெஸ்லி கல்லூரி சார்பாக பந்துவீச்சில் மொவீன் சுபசிங்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த வெஸ்லி கல்லூரி மஹீஷ் தீக்ஷனவின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

வெஸ்லி கல்லூரி சார்பாக ஹசித் கீசர பெற்ற 28 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகும். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி ஆட்டநேர முடிவில் 2 ஒவர்களில் 1 ஓட்டத்திற்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 122 (42.1) – கவீஷ ஜயதிலக்க 26*, பிருதுவி கேதராமசிங்கம் 25, மொவின் சுபசிங்க 3/46, சகுந்த லியனகே 2/12, மொஹமட் உபைதுல்லா 2/16

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 130 (36.1) – ஹசித் கீசர 28, திசுரக அக்மீமன 27, மஹீஷ் தீக்ஷன 5/31, சதுரங்க லக்மால் 2/15

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 1/2 (2)  


இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் இசிபதன கல்லூரி முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து நெருக்கடியை சந்தித்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 41.3 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதில் தனித்து போராடிய சஞ்சுல இலங்கதிலக்க மாத்திரம் 55 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் அலோசியஸ் கல்லூரி சார்பில் ஹரின் புத்தில 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த அலோசியஸ் கல்லூரி முதல்நாள் ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரவிந்து சஞ்சன 55 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதோடு லஹிரு தனஞ்சனவும் அரைச்சதம் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்  

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 98 (41.3) – சஞ்சுல இலங்கதிலக்க 55, ஹரின் புத்தில 5/21, கவிந்து மதுரங்க 2/09, ரவிந்து சஞ்சன 2/11

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 140/2 (43) – ரவிந்து சஞ்சன 55*, லஹிரு தனஞ்சன 51, சந்தீப சமோத் 23*