இலங்கையின் சூரன் சுரங்க லக்மால்

4564
Suranga Lakmal

தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியினை நீங்கள் பார்க்க தவறியிருப்பினும், இப்போட்டிக்கான பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபவதை காணாமல் இருக்க முடியாது. ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த வண்ணமயமான மைதானத்தினை மட்டுமல்லாது இமயமலையின் அடிவாரத்தில் தென்றல் காற்றினை சுவாசிக்கும் வசதியோடு அமைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பயிற்சிவலைகளையும் இரசிக்க மக்கள் வருகின்றனர்.

டெல்லி நகரில் காணப்பட்ட மாசடைந்த வளி, சுரங்க லக்மால் இந்திய அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடையாக மாறுமளவுக்கு சிக்கலை உருவாக்கியிருந்தது. ஏனெனில், மாசு கலந்த வளியின் பாதிப்பினால் லக்மால் வெள்ளிக்கிழமை (08) நாள் முழுவதும் தொடராக வாந்தி எடுத்திருந்ததுடன் சனிக்கிழமை (09) நடைபெற்ற பயிற்சிகளிலும் கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும் இவற்றில் எதுவும் லக்மாலை இந்திய அணியுடன் அவரது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த தடுக்கவில்லை.

தொடர் தோல்விகளுக்கு அதிரடி வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்…

இந்திய அணியுடனான குறித்த போட்டியில் விளையாடுவதற்கு முன்னர், இலங்கை தாம் விளையாடிய இறுதி 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்திருந்தது. இந்த இக்கட்டான நிலையினை மாற்றுவதற்கு பந்து வீச்சாளர் ஒருவர் மாயாஜாலம் செய்ய வேண்டிய தேவை இலங்கை அணிக்கு இருந்தது. அந்த மாயாஜால பந்து வீச்சாளராக லக்மாலே இருந்திருக்கின்றார்.

இமயமலை முனையிலிருந்து ஓடிவந்து தனது பந்து வீச்சினை துவக்கிய 30 வயதான லக்மால், இந்தப் போட்டியின் மூலம் வெறும் 13 ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சினை பதிவு செய்திருந்தார். லக்மால் போட்டியில் வீசிய பத்து ஓவர்களில் நான்கு ஓவர்கள் ஓட்டமற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லக்மாலின் பந்து வீச்சுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் ஆதரவு தர, ஒரு கட்டத்தில் இந்திய அணி 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் நெருக்கடிக்குள்ளாகியது.

கடந்த இரண்டு வருடங்களும் கடின உழைப்பினால் நிரப்பப்பட்டிருந்தது. பயிற்றுவிப்பாளர்களும் எனக்காக சிரத்தை எடுத்திருந்தனர். அதோடு கடந்த சில நாட்களாக எனது உடல்தகுதியும் நல்ல முறையில் காணப்பட்டது. “ என இந்தியாவுடனான முதல் போட்டியின் ஆட்ட நாயகனாக மாறிய பின்னர் லக்மால் தெரிவித்திருந்தார்.  

தற்போதைய நாட்களில் லக்மாலினால் பந்தினை மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடிவதுடன், பந்தினை ஸ்விங் செய்யும் கலையினையும் அவர் கற்றுதேர்ந்திருக்கின்றார். இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு துடுப்பாட்டத்தில் போராட ஆரம்பிக்க முன்னர், லக்மாலின் பந்துவீச்சு அரங்கு முழுவதும் நிறைந்திருந்த கிட்டத்தட்ட 22,000 இந்திய இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

எட்டு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வலம் வரும் லக்மாலுக்கு கிடைத்திருக்கும் அனுபவங்கள், இந்திய அணிக்காக சதம் விளாசும் துடுப்பாட்ட ஜாம்பவான்களை முதல் ஒரு நாள் போட்டியில் ஆட்டம் காணச் செய்துள்ளது.

இந்நேரம் இந்தியாவை தமது அடுத்த தொடருக்காக தென்னாபிரிக்காவில் எதிர்பார்த்து காத்திருக்கும் ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன் மற்றும் டுஆன்னே ஒலிவியர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போதிருந்தே லக்மாலிடம் இருந்து குறிப்புகளை சேமிக்க ஆரம்பித்திருப்பார்கள்.

உபாதையிலிருந்து மீண்டு வந்த அசேலவின் அடுத்த எதிர்பார்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக ஜொலித்து..

தராம்சலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதிலும், பெளன்சர் பந்துகளுக்கு அதிகம் இடம் தரவில்லை. ஆனால், தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன், நியூலான்ட் மற்றும் வான்டரர் போன்ற  மைதானங்கள் பெளன்சர் பந்துகளுக்கு மிகவும் சாதகமானவை. எனவே, பலவீனமான ஒரு இந்திய துடுப்பாட்ட வீரருக்கு அங்கு எதுவும் செய்ய முடியாது.   

உலகில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் கவர்ச்சிகரமான ஒன்றான தராம்சாலா ஆடுகளம், இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் மிகவும் அழகானது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்மட்டத்தில் இருந்து 4,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மைதானம் மலைகள் மூலம் சூழப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இதெல்லாம் இருக்க இன்னோர் சிறப்பம்சம் என்னவெனில் சமிந்த வாசின் பின்னர் இலங்கை சார்பாக இவ்வளவு கட்டுப்பாடோடு பந்து வீசிய ஒருவராக சுரங்க லக்மாலே மாறியிருக்கின்றார்.

லக்மால் ஒரு நாள் போட்டிகளில் மூன்றாவது தடவையாக நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இன்னும் அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி மைல் கல் ஒன்றினை பதிக்க ஆறு விக்கெட்டுக்களே தேவையாக உள்ளன.

2009ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த இலங்கை A அணியில் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவினால் அதிகம் நம்பப்பட்ட பந்து வீச்சாளர்களில் ஒருவராக லக்மால் காணப்பட்டிருந்தார். அந்த தொடரில் இலங்கைத்தரப்பு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை மயிரிழையில் பறிகொடுத்திருப்பினும் ஒரு நாள் தொடரினை 4-1 என கைப்பற்றியிருந்தது.

அத்தொடரினை அடுத்து மெதிவ்ஸ், லக்மால் மற்றும் தரங்க பரணவிதான ஆகிய வீரர்களை த்துருசிங்க அடையாளப்படுத்தியிருந்ததுடன் அவர்கள் அனைவரும் சிறிது காலத்தின் பின்னர் இலங்கை அணியில் முக்கிய வீரர்களாக மாறியிருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணியுடனான T-20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த சுரங்க லக்மால் அப்படி அங்கு சென்று விளையாட முடியாமைக்கான நியாயமான காரணங்களை வைத்திருக்கின்றார். 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான இலங்கை அணியில் திலான் சமரவீர, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதான ஆகியோரை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டவராக லக்மாலே காணப்படுகின்றார். இதனால் அவர் உள ரீதியில் அடைந்த பாதிப்பும் அதிகம்.

ஜயசூரியவின் அபார பந்து வீச்சினால் கோல்ட்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/2018ஆம்..

லக்மாலுக்கும் உபாதைக்கான ஆபத்து இல்லாமல் இல்லை. அவரது இடது காலில் உள்ள பிரச்சினை ஒன்றுக்காக சத்திர சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் லக்மால் அதற்கு விருப்பப்படவில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சத்திர சிகிச்சை காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வெடுக்க வேண்டி வரும். எனவே லக்மால் இந்த சத்திர சிகிச்சைகளை தனது ஓய்வுக்குப் பின்னர் செய்ய எத்தனித்துள்ளார்.

ஏற்கனவே செய்யப்பட்ட சத்திர சிகிச்சை ஒன்றின் மூலம் தனது இடது காலில் உலோகம் பொருத்தப்பட்டிருக்கும் லக்மாலுக்கு அதன் மூலம் சில நேரங்களில் அசெளகரியங்கள் ஏற்படுவதுண்டு. விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படும் போது லக்மாலின் உடம்பில் இருக்கும் உலோகத்தினைஉலோகக் கண்டுபிடிப்பு கருவி” (Metal Detector) காட்டி விடும்.

இதனையடுத்து இலங்கை அணியின் முகாமையாளர் அவரது மருத்துவ அறிக்கைகளை காட்டி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பேச வேண்டிய நிலைமை அடிக்கடி ஏற்பட்டதுண்டு. இன்னும் உலோகத் துணிக்கைளால் MRI ஸ்கேன் பரிசோதனைகளினையும் தனது இடது காலில் மேற்கொள்ள, லக்மால் சிரமத்தினை எதிர்நோக்குகின்றார்.

லக்மால் இந்த ஆண்டில் மூன்று வகைப் போட்டிகளிலும் ஆச்சரியம் தரும்வகையில் செயற்பட்டிருந்தார். கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் தென்னாபிரிக்கா பயணித்த அவருக்கு அப்போட்டிகளில் எதிர்பார்த்த பந்துவீச்சினை வெளிக்காண்பிக்க முடியவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளுக்கு மீள்வருகை தந்த  லக்மால் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவிக்கும் முடிவினையும் எடுக்க அப்போது முனைந்திருந்தார்.

எனினும் தென்னாபிரிக்க அணியுடனான குறித்த தொடரில் சிறப்பாக செயற்பட முடியாமல் போனது லக்மாலின் முழுத் தவறு எனக் கூறிவிட முடியாது. லக்மாலினால் ஏற்படுத்தித்தரப்பட்டிருந்த பிடியெடுப்பு வாய்ப்புக்கள் இலங்கையின் மோசமான களத்தடுப்பினால் கோட்டைவிடப்பட்டிருந்தன. அதோடு லக்மால் போட்டிகளில் எடுக்க வேண்டிய 5 விக்கெட்டுக்கள் நிறைய தடவைகள் பிடியெடுப்புக்கள் தவறவிடப்பட்ட காரணத்தினாலும் இல்லாமல் போயிருக்கின்றன.

இந்திய அணியின் கண்களை திறந்துவிட்ட இலங்கை அணியின் வெற்றி

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

எனினும் இந்த வருடம் அது கொல்கத்தா ஆகட்டும், கேப் டவுன் ஆகட்டும், துபாய் ஆகட்டும் அல்லது தரம்சாலா ஆகட்டும் எல்லா இடங்களிலும் இலங்கை அணியினை வெற்றி பெறும் ஒரு தரப்பாக லக்மால் மாற்றியிருக்கின்றார்.  

காயங்கள் அவரை பாதிக்காது விடின், உண்மையான சுரங்க லக்மால் யார் என்பது நமக்குத் தெரியவரும்.

இந்திய அணியுடனான போட்டி நிறைவடைந்த பின்னர் பேசிய லக்மால்,  

எங்களுக்கு வெள்ளைப் பந்து பயன்படுத்தும் போட்டிகளில் அதிக சிரமங்கள் காணப்பட்டிருந்தன. நாங்கள் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தோம். அதோடு உலகக் கிண்ணத்திலும் நாங்கள் பங்குபற்றுவது சந்தேகமாக மாறியிருந்தது. இன்றைய போட்டியின் வெற்றி மூலம் தொடரில் முன்னேறியிருப்பதற்காக மிகவும் களிப்படைகின்றோம். மிகவும் சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு திட்டங்களையும் தீட்டி அதனை வெற்றிகரமாக செயற்படுத்தியிருக்கின்றோம் என ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் மந்தநிலை பற்றி லக்மால் குறிப்பிட்டிருந்தார்.

“ டெல்லியை அடுத்து, நான் சுகவீனமுற்றேன். நான் 100% உறுதியான உடல் நிலையுடன் இருக்கவில்லை. நிறைய தடவைகள் வாந்தி எடுத்தேன். போட்டி நடைபெற்ற இன்றும் கூட. அப்படியான ஒரு சூழ்நிலையில் நான் இதுவரை விளையாடியதில்லை. நான் நூறுசதவீதம் உறுதியாக இல்லாத காரணத்தினால் சில பரிசோதனைகளுக்கும் உட்பட்டிருந்தேன். எல்லாரும் நான் இன்று விளையாட வேண்டும் என்று விரும்பினார்கள். எனக்கும் இவர்களோடு பங்கெடுக்க விருப்பம் இருந்தது. முடிவுகளும் நன்றாக அமைந்தன. “ என லக்மால் டெல்லியின் மாசு கலந்த வளி தன்னை இன்னும் பாதிப்பது பற்றி விளக்கினார்.  

“ இந்திய அணி மிகவும் பலமிக்க ஒரு அணி. (ஒரு நாள்) தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர்கள் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வரிசையினையும் கொண்டுள்ளனர். மெதிவ்ஸ் (என்னுடன்) பந்தினை பகிர்ந்து கொண்டு நாங்கள் இருவரும் பேசியதற்கு ஏற்ப குறிப்பிட்ட சரியான இடங்களில் பந்தினை வீசினால் எமக்கு இந்த ஆடுகளம் உதவும் என்று நம்பியிருந்தோம். இந்த அடிப்படையில் நாம் சில சிறப்பான வேலைகளைச் செய்திருந்தோம்.எல்லாம் எமது திட்டத்திற்கு ஏற்ப நடைபெற்றது. ஏனைய வீரர்களும் எங்களுக்கு உதவிய காரணத்தினால், இந்தியாவினை 112 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்த முடிந்தது. “ என இலங்கை அணியின் வெற்றி வேட்கையை பூர்த்தி செய்த லக்மால் தெரிவித்திருந்தார்.