தோல்வியிலிருந்து தப்பிக் கொண்ட இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி

1709
SL President XI v Eng Lions

மொரட்டுவை டைரோன் பெர்னாந்து மைதானத்தில் இன்று நிறைவுற்ற, இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில், இறுதி நாள் ஆட்டம் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பக்கம் இருந்த போதிலும் போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றதால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்துள்ளது.

இலங்கை A அணியுடன் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங்குபெற்றுவதற்காக விருந்தினராக வந்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி, இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணியுடன் மோதிக்கொண்ட இந்த பயிற்சிப் போட்டியானது, இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பமாகியிருந்தது.

சதத்தினை தவறவிட்ட சந்திரகுப்தா : 2ஆம் நாளில் மீண்ட இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி

போட்டியின், நேற்றைய இரண்டாம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களினைப் பெற்று வலுப்பெற்றிருந்த இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி, இறுதி நாளின் ஆட்டத்தினை இன்று தொடர்ந்தது.

நேற்று 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல், நின்றிருந்த லியோ பிரான்சிஸ்கோ இன்றைய நாளில் அரைச் சதம் கடந்து 72 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டார். மறுமுனையில் ஹஷான் பிரபாத்தும் தனது நிதான ஆட்டத்தின் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 250 வரை உயர்த்த உதவினார்.

இவர்களில் இருவரினதும் விக்கெட்டுக்களை  தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்களில், தேசிய அணி வீரர் தரிந்து கெளசால் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை ஓரளவு தாக்குப் பிடித்தார். அதனையடுத்து, தொடர்ச்சியாக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களும் பறிபோக, தமது இரண்டாவது இன்னிங்சுக்காக இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி 324 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

ஜனாதிபதி அணி சார்பாக துடுப்பாட்டத்தில், ஹஷான் 42 ஓட்டங்களினைப்பெற்றுக்கொண்ட அவ்வேளையில், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் ஒல்லி ரெய்னர் 55 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் காரணமாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 199 ஓட்டங்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது.

வெற்றி இலக்கினை பெறுவதற்கு மைதானம் விரைந்த அவ்வணி, இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை சிறப்பாகவே மேற்கொண்டிருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த கீட்டோன் ஜென்னிங்ஸ் லயன்ஸ் அணிக்காக 49 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் தனது ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டார்.

அதேபோன்று, இளம் வீரர் ஹஸீப் ஹமித்தும் தனது பங்குக்கு 39 ஓட்டங்களினைப் பெற்று வெற்றி இலக்கினை நெருங்க உதவினார். இந்நிலையில், தமது மூன்றாவது விக்கெட்டினை பறிகொடுத்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, சற்று பதற்றத்தை உணர்ந்த காரணத்தினால் நிதானமாகவே ஓட்டங்களினை சேர்த்தது.

இதனால், 37.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை லயன்ஸ் அணி பெற்றிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைய  போட்டி சமநிலையடைந்தது. இதனால் மேலதிக 28 ஓட்டங்களைப் பெற முடியாமல் லயன்ஸ் அணியின் வெற்றி பெறும் ஆசை நிராசையானது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில், போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த நிக் குப்பின்ஸ் 52 ஓட்டங்களினைப் பெற்றார்.

போட்டியின், இறுதிக் கட்டத்தில் ஒரு ஓவருக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்த மலிந்த புஷ்பகுமார மொத்தமாக மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, இங்கிலாந்து தரப்பில் பறிபோன மேலதிக இரண்டு விக்கெட்டுக்களையும் தரிந்து கெளசால் கைப்பற்றினார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி,  இலங்கை சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக இலங்கை A அணியுடன் எதிர்வரும் 17ஆம் திகதி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மோதிக்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி முதல் இன்னிங்ஸ்): 153 (53.3) – ரொன் சந்திரகுப்தா 48, டிலான் ஜயலத் 26, தரிந்து கெளஷால் 18*, தோமஸ்ஹெல்ம் 3/18, டொம் குர்ரன் 2/23, கிரைக் ஓவர்டன் 2/31

இங்கிலாந்து லயன்ஸ் அணி(முதல் இன்னிங்ஸ்): 279 (69.1) டொம் வெஸ்லி 95, லியாம் லிவிங்ஸ்ட்ன் 84, மலிந்த புஷ்பகுமார 82/3

இலங்கை  ஜனாதிபதி பதினொருவர் அணி(இரண்டாவது இன்னிங்ஸ்) – 324 (100.5) ரொன் சந்திரகுப்தா 91, லியோ பிரான்சிஸ்கோ 72, இரோஷ் சமசூரிய 42, ஹஷன் பிரபாத் 42, ஒல்லி ரெய்னர் 55/3, சேம் குர்ரான் 34/2

இங்கிலாந்து லயன்ஸ் அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 171/6 (37.1) நிக் குப்பின்ஸ் 52*, கீட்டோன் ஜென்னிங்ஸ் 49*, ஹஸீப் ஹமித் 39, மலிந்த புஷ்பகுமார 35/3, தரிந்து கெளசால் 60/2

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது.