உபாதையிலிருந்து மீண்டு வந்த அசேலவின் அடுத்த எதிர்பார்ப்பு

4722

இலங்கை கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற நட்சத்திர வீரராக, 31 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்ன விளங்குகின்றார். இதில் இவ்வருடம் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஆண்டின் நம்பிக்கைக்குரிய வீரர் உள்ளிட்ட 3 முக்கிய விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார். இவற்றுக்கெல்லாம் அவருடைய அண்மைக்கால திறமைகள் மற்றும் சாதனைகள் முக்கிய காரணம் எனலாம்.

இதில் இவ்வருட முற்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் துடுப்பாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்த்திய அசேல, இலங்கைக்கு தொடர் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்தார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடனான லீக் போட்டியில் இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 322 என்ற ஓட்ட இலக்கை அடைவதற்கு 34 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த அசேல, இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியொன்றையும் பெற்றுக்கொடுத்தார்.

அதனையடுத்து ஒரு மாதங்கள் கடந்து, ஜிம்பாப்வே அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அசேல, இலங்கையை வரலாற்று தோல்வியிலிருந்தும் மீட்டெடுத்தார். எனினும், 2 வாரங்களுக்குள் அவர் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளானார்.

இலங்கை அணியின் போராட்டம் ஒரு நாள் தொடரில் எவ்வாறு அமையும்?

காலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்ன உபாதைக்குள்ளானார். கட்டை விரலில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அவர் கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், உபாதையிலிருந்து குணமாகிய அசேல, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ப்ரீமியர் எமர்ஜிங் லீக் போட்டியில் களமிறங்கி தனது உடற்தகுதியை நிரூபித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் அசேலவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அவருடைய உடற்தகுதியைக் கருத்திற்கொண்டு இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடரில் களமிறக்க தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி, இந்திய அணிக்கெதிராக இன்று (10) ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடரின் மூலம் அசேல குணரத்ன, மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியில் கடந்த 2 மாதங்களாக விளையாட முடியாது போனமை தனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியதாக அசேல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கடந்த 2 மாதங்களும் எனக்கு 4 வருடங்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அக்காலப்பகுதி எனக்கு மிகவும் கடினமாக அமைந்ததுடன், உபாதையிலிருந்து மீண்டு வருவதற்கு கடினமாகப் போராடினேன்.

எனக்கு இதற்கு முன்னரும் காயங்கள் ஏற்பட்டிருந்தன, ஆனால் இதுபோன்ற ஒரு நிலை ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. முந்தைய காயங்கள், இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதங்களுக்குள் நன்றாகக் குணமடைந்துவிடும். ஆனால் இந்த காயம் கடுமையானதாகவும் மிகவும் வேதனையானதாகவும் உள்ளது.

எனினும், உபாதையுடன் நான் பயிற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தேன். இந்த உபாதை குணமடைவதற்கு குறைந்தது ஒரு வருடம் தேவைப்படும். ஆனால் மருத்துவ ஆலோசனைக்கு அமைய நான் கடுமையாக உழைத்தேன். இதனால் எதிர்பார்த்ததைவிட விரைவில் உபாதையிலிருந்து மீண்டு வந்து இலங்கை அணிக்குள் இடம்பெறுவதற்கு உதவியது. நான் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தாலும், கிரிக்கெட் பந்தொன்றை எடுத்துச் செல்லும் வழக்கமுடையவனாக இருந்தேன்.

ஆனால் எதிர்பார்த்ததை விட விரைவாக நான் உபாதையிலிருந்து குணமடைந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவேன் என்பதை நினைக்கும் போது மிகழ்ச்சியாக உள்ளது” என முதலாவது போட்டி நடைபெறவுள்ள தரம்சாலாவில் வைத்து எமது இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான செவ்வியில் தெரிவித்தார். இதில் தனது உபாதை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

”நான் இன்னும் ஒரு முன்னெச்செரிக்கையாக கட்டைவிரலுக்கு பிளாஸ்டர் மூலம் கட்டுப் போட்டுக் கொண்டுள்ளேன். இந்திய டெஸ்ட் போட்டியில் பந்தை பிடிக்க முற்பட்ட போது கட்டைவிரலுக்கு கீழே, கைவிரல் தோல் ஆறு துண்டுகளாக பிளவுபட்டது. எனினும், வைத்தியர்கள் அதற்கு பொருத்தமான முறையில் சிகிச்சையளித்தனர். ஆனால் உபாதையின் வலியை நான் இன்னும் உணர்கின்றேன். ஆனால் இன்னும் நான்கு மாதங்களுக்கு அந்த இடத்துக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்

”இலங்கை அணி விளையாடுவதை தொலைக்காட்சியில் நான் பார்த்தேன், அப்போதெல்லாம் இலங்கை அணி தோல்வியை சந்திக்கும் போது மிகவும் கவலையாக இருந்தது. எனினும், உபாதைக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளதால் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். உண்மையில் தரம்சாலா அழகான மைதானமாகும். இங்கிலாந்து ஆடுகளங்களைப் போன்று இது இருப்பதுடன், இங்கிலாந்தை விட குளிர்ச்சியான காலநிலையும் இங்கு நிலவுகின்றது. இதே ஒத்த சூழ்நிலையில்தான் நாம் இங்கிலாந்தில் இந்தியாவை தோற்கடித்தோம்” என அசேல நினைவு கூர்ந்தார்.

”அதுபோன்று இங்குள்ள ஆடுகளம் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையவுள்ளது. நான் உண்மையில் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த முறையில் விளையாடுவேன். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு முகங்கொடுப்பது நிச்சயம் எனக்கு சவாலாக அமையவுள்ளது. எல்லாவற்றுக்கும் சிறப்பாக முகங்கொடுத்து விளையாடுவதற்கு நான் 100 சதவீதம் தயாராகவுள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6ஆம் இலக்க வீரராக அசேல குணரத்ன விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், அசேலவின் மிதவேக சுழற்பந்துவீச்சானது இலங்கை அணிக்கு பந்துவீச்சில் மிகவும் சமபலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் உபாதைக்குப் பிறகு நான் துடுப்பாட்டத்தைவிட பந்துவீச்சில்தான் அதிக கவனம் செலுத்தியிருந்தேன். இடது கையில் உபாதை ஏற்பட்டாலும், வலது கையால் பந்துவீசுவதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை. எனவே இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது இலக்காகும்” என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

”கடந்த காலங்களில் நாம் பல போட்டித் தொடர்களை இழந்தோம், அதிலிருந்து மீண்டு நாம் வெளியே வர வேண்டும். தற்போது எமக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 100 சதவீத பங்களிப்பை வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்திய அணி எமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு பின்னால் உறுதியாக இருப்பார்கள்” எனவும் அசேல குணரத்ன குறிப்பிட்டார்.