உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2162

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (18) வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இலங்கை அணியினை தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பெற்றுத் தர காரணமாகவிருந்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன வழிநடாத்தவுள்ளார்.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம்………

எனவே, இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து லசித் மாலிங்க நீக்கப்பட்டாலும் அவர், டி20 போட்டிகளில் அணியின் தலைவராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது

லசித் மாலிங்க நியூசிலாந்து, தென்னாபிரிக்க தொடர்களின் போது இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட போதிலும் அவர் தலைவராக விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியினையே சந்தித்திருந்தது. இதனாலேயே, புதிய அணித் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், திமுத் கருணாரத்ன கடந்த நான்கு வருடங்களில் ஒருநாள் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத போதிலும் அண்மையில் உலகக் கிண்ணத்திற்கான வீரர்களை தெரிவு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை நடாத்திய சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதன்படி, சுபர் ப்ரொவின்சியல் தொடரில் திமுத் கருணாரத்ன 55 என்கிற சராசரியுடன் 165 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  

திமுத் கருணாரத்ன, இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்ட மற்றுமொரு வீரரான லஹிரு திரிமான்னவுடன் இணைந்து உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் வர எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் அணிக்குத் திரும்பியிருக்கும் லஹிரு திரிமான்ன  சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் தரவரிசையில் 213 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருனாரத்ன

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் …….

இதேநேரம், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க ஆகியோருக்கு உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டு வீரர்களும் அண்மையில் இடம்பெற்று முடிந்த சுபர் ப்ரொவின்சியல் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியதனாலேயே உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர்.

இவர்களோடு, அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, தினேஷ் சந்திமால் போன்றோருக்கும் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், தென்னாபிரிக்க ஒருநாள் தொடரின் போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையடிய இளம் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் சுழல் வீரர்களான அகில தனன்ஜய, வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜித ஆகியோர் உலகக் கிண்ண இலங்கை குழாமில் இடம்பிடிக்க தவறியிருக்கின்றனர். எனினும், அனுபவம் கொண்ட லசித் மாலிங்கவுடன் இணைந்து அணிக்குத் திரும்பியுள்ள சுரங்க லக்மால், நுவன் பிரதீப் ஆகியோர் உலகக் கிண்ணத்தின் போது இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்துகின்றனர். இதேநேரம், ஜெப்ரி வென்டர்சேய் சுழல் வீரராக இலங்கை அணியை வலுப்படுத்துகின்றார்.

உபாதை காரணமாக இலங்கை அணி விளையாடிய சில ஒருநாள் போட்டிகளில் பங்கெடுக்காமல் போயிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் ஜனித் பெரேரா ஆகியோர்  உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இரண்டு வீரர்களும் உலகக் கிண்ணத்தின் போது இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு குசல் மெண்டிசுடன் சேர்ந்து பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர்களான ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் தாம் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம், உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களோடு தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் சகலதுறை வீரர்களாக இலங்கை அணிக்கு பலம் சேர்க்கின்றனர். எனினும், அதிரடி சகலதுறை வீரரான தசுன் ஷானக்க, உபாதையில் இருந்து முழுமையாகக் குணமடையாத காரணத்தினால் உலகக் கிண்ண அணியில் இடம்பெறவில்லை.

ஜூன் மாதம் 01ஆம் திகதி நியூசிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற ஒருநாள் போட்டியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும் இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக உலகக் கிண்ணம் நடைபெறும் இங்கிலாந்தின் சூழ்நிலைகளை பொருந்திக் கொள்ள ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண இலங்கை குழாம்

திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, இசுரு உதான, ஜீவன் மெண்டிஸ், லசித் மாலிங்க, நுவன் பிரதீப், ஜெப்ரி வென்டர்சேய், சுரங்க லக்மால்

காத்திருப்பு வீரர்கள்

ஓசத பெர்னாந்து, வனிந்து ஹசரங்க, கசுன் ராஜித, அஞ்செலோ பெரேரா

 

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம்…

இலங்கை அணியின் போட்டி அட்டவணை

  • ஜூன் 1 – எதிர் நியூசிலாந்து – கார்டிப்
  • ஜூன் 4 – எதிர் ஆப்கானிஸ்தான் – கார்டிப்
  • ஜூன் 7 – எதிர் பாகிஸ்தான் – பிரிஸ்டல்
  • ஜூன் 11 – எதிர் பங்களாதேஷ் – பிரிஸ்டல்
  • ஜூன் 15 – எதிர் அவுஸ்திரேலியா – ஓவல்
  • ஜூன் 21 – எதிர் இங்கிலாந்து – லீட்ஸ்
  • ஜூன் 28 – எதிர் தென்னாபிரிக்கா – ஷெஸ்டர் லி ஸ்ட்ரீட்
  • ஜூலை 1 – எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஷெஸ்டர் லி ஸ்ட்ரீட்
  • ஜூலை 6 – எதிர் இந்தியா – லீட்ஸ்  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<