2019 உலகக் கிண்ணம் வரை நான் பதவி விலகமாட்டேன் – திலங்க சுமதிபால

372
Thilanga Sumathipala
 

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் மோசமான தோல்விகளுக்காக தான் பதவி விலகுவதற்கான எந்த எண்ணமும் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை அணியின் தற்போதைய மோசமான நிலைமைக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகமே காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பெற்றோலியத்துறை அமைச்சருமான அர்ஜூன ரனதுங்க குற்றம் சாட்டி 24 மணி நேரத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே திலங்க சுமதிபால இக்கருத்தை முன்வைத்தார்.

அர்ஜூன ரனதுங்க மேலும் குறிப்பிடுகையில் ”இலங்கை அணி மிக மோசமான காலகட்டத்தில் பயணிக்கின்றது. தோல்விகளுக்காக வீரர்களை மாத்திரம் குறை கூற முடியாது, இலங்கை அணியின் கட்டுக்கோப்பு சீரழிந்துள்ளது. இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சீர்கேடேயாகும். இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என தெரிவித்தார். இலங்கை அணி இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை 3-0 என தோல்வியடைந்ததை அடுத்தே கடந்த செவ்வாய்க்கிழமை ரனதுங்கவினால் இக்கருத்து தெரிவிக்கப்பட்டது.

அணித் தேர்வில் சிரமப்படும் ஜயசூரிய

இலங்கை அணி வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளால் நிலையான பதினைந்து..

அர்ஜூன ரனதுங்கவின் கருத்துக்கு திலங்க சுமதிபால நேரடியாக பதிலளிக்கவில்லை என்பதுடன், சர்வதேச கிரிக்கெட் சபையில் ஏதும் பதவியை பெறும் எண்ணம் உண்டா? என ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே திலங்க சுமதிபால அக்கருத்துக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமதிபால மேலும் தெரிவிக்கையில் ”என்னால் இப்பதவியில் அடுத்த வருடம் வரை இருக்க முடியும் (அடுத்த தேர்தல் வரும் வரை) அதன் பின்னர் மேலும் 3 வருடங்கள் வரை இருக்க முடியும். சர்வதேச கிரிக்கெட் சபையில் பதவியை பெறும் எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. எனது அனுபவம் மற்றும் மூத்த உறுப்பினர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் சபை கலந்துரையாடல்களில் எனது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அவர்கள் எதிர்பார்த்ததோடு சர்வதேச கிரிக்கெட் சபையில் உயரிய பதவி ஒன்றை எனக்கு வழங்கவும் ஆலோசித்தனர். எக்காரணம் கொண்டும் எனது பொறுப்புகளிலிருந்தும் இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்தும் 2019 உலகக்கிண்ணம் வரை பதவி விலகமாட்டேன்” என புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

திலங்க சுமதிபால இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் என்பதுடன் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவருக்கான தேர்தலில் அர்ஜூன ரனதுங்க மற்றும் அவரது சகோதரர் நிஸாந்த ரனதுங்க ஆகியோரைத் தோற்கடித்து தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திலங்க சுமதிபாலவின் பதவிக்காலத்திலேயே இலங்கை அணி அடிமட்ட நிலைக்கு சென்றது என்பதுடன் ஊழல், ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுக்கள், முக்கியமான உறுப்பினர்களின் பதவி விலகல்கள் மற்றும் வீரர்கள் தேர்வில் முரண்பாடு போன்றன ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.