இங்கிலாந்து19 வயதின் கீழ் மகளிர் அணியில் யாழ். வீராங்கனை

112

அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் முத்தரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து இளையோர் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட 17 வயது வீராங்கனை அமுருதா சுரேன்குமார் பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட தயார்படுத்தல் குழாத்திலேயே அவர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் உள்ள பாரம்பரிய தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சுரேன்குமார்-லோகினி தம்பதியின் மூத்த மகளாக 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.

‘அமு’ என்ற செல்லப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகின்ற அமுருதா சுரேன்குமார், கடந்த ஆண்டு இங்கிலாந்தின் வளர்ந்து வரும் (16 வயதின்கீழ்) பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான சார்லட் எட்வர்ட் விருதையும் தனதாக்கிக் கொண்டார்.

இந்த நிலையில், உள்ளுர் பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் பிராந்திய அளவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் சங்கமான லண்டனை தளமாகக் கொண்ட Sunrise Sports Club கழகத்தின் சிரேஷ்ட வீராங்கனைகளில் ஒருவராகவும் உள்ளார்.

அதுமாத்திரமின்றி, சகலதுறை வீராங்கனையான இவர் தற்போது மிடில்செக்ஸ் கவுண்டி மகளிர் அணியில் விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அமுருதாவின் தந்தை சுரேன்குமார், பாடசாலைக் கல்வியை மேற்கொண்டவாறே இங்கிலாந்திற்கு குடியேறினார். யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரான இவர், வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற முறியடிக்கப்படாத சாதனைக்குரியவராகவும் வலம் வருகின்றார்.

அவர் குறித்த சாதனையை 1990ஆம் ஆண்டு நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் 145 ஓட்டங்களைப் பெற்று நிகழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் அடுத்த ஆண்டு மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என இரு வடிவிலும் நடத்தப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்தரப்பு தொடருக்காக அறிவி்க்கப்பட்டுள்ள இங்கிலாந்து தயார்படுத்தல் குழாம் விபரம்:

மெக் ஒஸ்டின், சம்மர் கேரிங்டன், டில்லி கோர்டீன்-கோல்மேன், ஜோடி க்ரூகாக், ஜோசி க்ரோவ்ஸ், லோலா ஹாரிஸ், ட்ரூடி ஜொன்சன், கேட்டி ஜோன்ஸ், சார்லோட் லம்பேர்ட், அவா லீ, அபி நார்க்ரோவ், சாரிஸ் பாவ்லி, டேவினா பெர்ரின், சோபியா ஸ்மாலே அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ், சார்லோட் ஸ்டப்ஸ், அமுருதா சுரேன்குமார், மேரி டெய்லர், எரின் தாமஸ் மற்றும் மேடி வோர்ட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<