தேசிய மெய்வல்லுனர் 2ஆவது தகுதிகாண் போட்டிகள் தியகமவில்

2nd Selection Trial ahead of Asian Games 2022

112

ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் மார்ச் மாதம் 10ஆம், 11ஆம் ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னதாக குறித்த தகுதிகாண் போட்டிகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் உள்ள செயற்கை ஓடுபாதையின் நிர்மானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு மெய்வல்லுனர் போட்டிகளும் அங்கு நடைபெறவில்லை.

எனவே, குறித்த செயற்கை ஓடுபாதையின் நிர்மானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து நடத்தப்படுகினற முதலாவது மெய்வல்லுனர் போட்டியாக தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் நடைபெறவுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களை மாத்திரம் இந்த தகுதிகாண் போட்டியில் பங்குபெறச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் முதலாவது அத்தியாயம் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சச்சினி பெரேராவும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வாவும் புதிய இலங்கை சாதனைகள் படைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயத்தில் இடம்பெறவுள்ள போட்டிகள் மற்றும் அதற்கான அடைவுமட்டங்கள் குறித்த அட்டவணையை கீழே பார்க்கலாம்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<