இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து அகில தனன்ஜய

709

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை  கட்டுப்படுத்துவதற்கு புதுவித யுத்திகள் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை. பயிற்சியின் போது கற்றுக்கொண்ட விடயங்களை மைதானத்தில் நிறைவேற்றுவதற்கு மாத்திரம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (13) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அகில தனன்ஜய இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுழலுக்கு முன் இங்கிலாந்தின் பலமான துடுப்பாட்டம் தாக்குப்பிடிக்குமா?

இந்த ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர், “இங்கிலாந்து வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு ஸ்வீப் (Sweep) மற்றும் ரிவஸ் ஸ்வீப் (Reverse Sweep) ஆகிய துடுப்பாட்ட முறைகளை கையாளுகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு புதிய திட்டங்கள் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த அகில தனன்ஜய,

“நான் போட்டியின் போது வித்தியாசமாக எதனையும் செய்யப் போவதில்லை. குறித்த துடுப்பாட்ட முறைகளுக்கு ஏற்ப பயிற்சியின் போது பந்து வீசியுள்ளேன். அதனையே மைதானத்திலும் நடைமுறைப்படுத்துவேன். ஆடுகளத்தில் உள்ள துடுப்பாட்ட வீரர் என்ன மனநிலையில் இருந்து துடுப்பெடுத்தாடுகிறார் என்பதை அறிந்து அதற்கேற்ப பந்து வீச்சில் மாற்றங்களை ஏற்படுத்துவேன். இதன் மூலம் துடுப்பாட்ட வீரருக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க முடியும்” என்றார்.

இதேவேளை ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு, அகில தனன்ஜய மேற்கண்டவாறு பதலளித்தார்.

கேள்வி – உங்கள் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அழுத்தத்திற்கு முகங்கொடுக்கின்றீர்களா?

பதில் – நான் அழுத்தத்துடன் விளையாட விரும்புகிறேன். அழுத்தத்தின் மூலம் பந்து வீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனினும் அதிகமான அழுத்தங்களுக்கு உள்ளாக மாட்டேன். இலகுவான மனநிலையுடன் பந்து வீசுவேன்.

கேள்வி – அணியிலிருந்து சில வருடங்கள் வெளியேற நேரிட்டது. ஆனால் மீண்டும் அணிக்குள் நுழைந்து முன்னணி பந்து வீச்சளராக மாறியுள்ளீர்கள். இதற்கான காரணம்?

பதில் – குறித்த காலப்பகுதியில் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியல் விஜேதுங்கவுடன் இணைந்து அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டேன். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பயிற்சியில் கடுமையாக இருந்தேன். வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

கேள்வி – நாளைய போட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஓட்ட எண்ணிக்கை?

பதில் – இங்கிலாந்து அணியை 275 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த முடியுமானால், எமது துடுப்பாட்ட வீரர்களால் வெற்றியிலக்கை அடைய முடியும்.

கேள்வி – 2012ஆம் ஆண்டுக்கு பின்னர், இரண்டு விதமான பந்துகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளீர்களா?

பதில் – ஆம். 2012ம் ஆண்டு விளையாடிய போது, வேறுப்பட்ட விதமான பந்துகளை வீசினேன். ஆனால் பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மூன்று விதமான பந்துகளை கற்றுக்கொண்டேன்.  குறித்த மூன்று விதங்களையே இப்போதும் பயன்படுத்தி வருகின்றேன்.

இலங்கையின் இயற்கை அழகை இரசிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

கேள்வி – கெரம் பந்தை (Carrom ball) மீண்டும் வீசுவீர்களா?

பதில் – கெரம் பந்தினை நான் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தேன். மீண்டும் அதனை பயிற்சி செய்து வருகின்றேன். இந்த தொடர் இல்லாவிடின் எதிர்காலத்தில் கெரம் பந்து வீசலாம்.

கேள்வி – போட்டியின் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட முடியுமா?

பதில் – இதற்கு முன் ஆரம்ப பந்து வீச்சாளராக இருந்துள்ளேன். என்னால் ஆரம்ப ஓவரை வீச முடியும். அணிக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், அணித் தலைவர் எந்த நேரத்தில் பந்தை வழங்கினாலும் நான் பந்து வீசுவேன்.

கேள்வி – லக்ஷான் சந்தகனின் உதவி தொடர்பில்?

பதில் – சந்தகன் மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாறியுள்ளார். இருவரும் இணைந்தால் சிறப்பாக பந்து வீச முடியும். பந்து வீச்சில் அவரிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

கேள்வி – நீங்கள் அடுத்த முரளியா? ஷேர்ன் வோர்னா?

பதில் – இருவரும்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக வைிடப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நாளை (13) பகல் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க