பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை

Mahinda Rajapaksa trophy four nations tournament

869

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

எனவே, இலங்கை அணி இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சீசெல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சனிக்கிழமை (13) இரண்டாவது ஆட்டமாக இரவு இடம்பெற்ற இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கிய மோதலாக இருந்தது. ஏற்கனவே, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தப் போட்டியில் வெற்றி கட்டாயமாக இருந்தது. எனினும், பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தப் போட்டியில் ஒரு சமநிலையான முடிவு மட்டும் போதுமாக இருந்தது.

இலங்கை முதல் பதினொருவர்

போட்டியின் 20 நிமிடங்கள்வரை இலங்கை அணி சசன்க டில்ஹார மற்றும் வசீம் ராசிக் மூலம் கோலுக்கான முயற்சிகளை எடுத்தாலும் இரு முயற்சிகளின்போதும் பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

25ஆவது நிமிடத்தில் கோலுக்கு நேராக இருந்து ஷலன சமீர வேகமாக உதைந்த பந்தை பங்களாதேஷ் கோல் காப்பாளர் அனிசுர் ரஹ்மான் தடுத்தார். எனினும், தடுக்கப்பட்ட அந்தப் பந்தை வேகமாக வசீம் கோலுக்குள் செலுத்தி இலங்கை அணியை முன்னிலைப்படுத்தினார்.

இந்த கோல் பெற்ற வேளையில் கவிந்து இஷான் உபாதையடைந்து மைதானத்தில் இருந்து வெளியே சென்றமையினால் டிலன் டி சில்வா மாற்று வீரராக உள்ளே வந்தார்.

எனினும், 30 நிமிடங்களின் பின்னர் பங்களாதேஷ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது கோலுக்குள் செலுத்தப்பட்ட பந்தை டக்சன் பியுஸ்லஸ் கையால் தடுத்தமைக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை தோபொ பர்மன் வெளியில் அடித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் மாற்று வீரராக வந்த டிலனும் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற, அவருக்கு மாற்று வீரராக பின்கள வீரர் ஜுட் சுபன் களத்திற்குள் இறக்கப்பட்டார்.

முதல் பாதி நிறைவடையும் தருவாயில் பங்களாதேஷ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஹொசைன் பாத்ஷா கோலுக்குள் ஹெடர் செய்ய, அதனை சுஜான் பாய்ந்து தடுத்தார். மீண்டும் கோலுக்குள் அருகில் இருந்து திரிபுரா அதனை கோலுக்காக எடுத்த முயற்சியின்போது பந்து உயர்ந்து வெளியே சென்றது.

முதல் பாதி: இலங்கை 1 – 0 பங்களாதேஷ்

இரண்டாவது பாதி ஆரம்பமாகியது முதல் பங்களாதேஷ் வீரர்கள் இலங்கை கோல் எல்லையில் கோலுக்கான அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். எனினும், அவை அனைத்தும் பின்கள வீரர்கள் மற்றும் சுஜான் பெரேராவினால் தடுக்கப்பட்டன.

இதில் பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக, அவர்கள் கோலுக்குள் செல்லும் விதத்தில் உதைந்த பந்தை பின்கள வீரர் அசிகுர் ரஹ்மான் கோல் எல்லையில் இருந்து தடுத்தார்.

பங்களாதேஷ் அணிக்கு மாற்று வீரராக வந்த யெசின் அரபாத் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து இலங்கை பின்கள வீரர்களைத் தாண்டி உயர்த்தி அனுப்பிய பந்தை, மாற்று வீரரான ஜுவெல் ரனா கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

எனினும், போட்டியின் 90ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர்கள் எதிரனியின் கோல் எல்லைக்குள் செலுத்திய பந்து பங்களாதேஷ் வீரரின் கையில் பட்டமையினால் இலங்கைக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை வசீம் ராசிக் கோலாக்கி, இலங்கை அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியடையச் செய்தார்.

எனவே, தொடரின் லீக் போட்டிகள் நிறைவில் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியை சந்தித்த இலங்கை அணி 4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

பங்களாதேஷ் அணியும் இலங்கையைப் போன்ற முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றாலும், இலங்கையுடன் தோல்வியை சந்தித்தமையினால், போட்டித் தொடரின் விதிமுறைகளுக்கு அமைய தொடரில் இருந்து வெளியேறியது.

முழு நேரம்: இலங்கை 2 – 1 பங்களாதேஷ்

கோல் பெற்றவர்கள்

  • இலங்கை – வசீம் ராசிக் 25’ 90’
  • பங்களதேஷ் – ஜுவெல் ரனா 71’

சிவப்பு அட்டை பெற்றவர்கள்

  • இலங்கை – டக்சன் பியுஸ்லஸ் 31’

சீசெல்ஸ் எதிர் மாலைதீவுகள்

செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற முதல் போட்டியில், இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் என்றால் கட்டாய வெற்றியொன்றைப் பெற வேண்டும் என்ற நிலையில் ஆடிய மாலைதீவுகள் வீரர்கள் போட்டியில் முதல் பாதியில் அதிக வாய்ப்புக்களை கோலுக்காக எடுத்தாலும், முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது.

எனினும், இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளில் இருந்தும் தலா ஒரு வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனினும், ஆட்ட நிறைவுவரை இரண்டு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில், ஆட்டம் சமநிலையில் நிறைவுபெற, தொடரில் இரண்டு சமநிலை மற்றும் ஒரு வெற்றியைப் பெற்ற சீசெல்ஸ் அணி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தெரிவாகியது.

பிஃபா தரவரிசையில் 156ஆவது இடத்தில் இருக்கும் மாலைதீவுகள் அணி, தொடரில் இரண்டு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளை மட்டும் பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் இடம்பெறும். s

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<